அறம் வைத்துப் பாடுதல்
அறம் வைத்துப் பாடுதல்
நாம் வாழ்கிற வாழ்வு அறம் சார்ந்ததாக
இருக்க வேண்டும்.
இந்த ஆசை எல்லோருக்கும் உண்டு.
ஆனால் அனைவரும் அப்படி ஒரு
வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?
அறம் சார்ந்த வாழ்வு என்பது
எல்லோராலும் சாத்தியப்படக் கூடியதா?
எல்லா இடங்களிலும்
எல்லா நேரங்களிலும்
எல்லோராலும் பின்பற்ற முடிகிறதா?
இப்படி ஏகப்பட்ட கேள்விகள்.
முதலாவது அறம் என்றால் என்ன
என்று பார்ப்போம்.
மனிதன் இப்படித்தான் வாழ வேண்டும்
என்று தனக்கென வகுத்துக்கொண்ட
ஒழுக்கநெறியே அறம் எனப்படும்.
"மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்
ஆகுல நீர பிற"
என்பார் வள்ளுவர்.
மனத்தில் எந்தவிதமான குற்றமும்
இல்லாமல் இருத்தலே அறம்.
உள்ளத்தில் அன்பில்லாது செய்யப்படும்
எந்த தர்மமும் அறம் எனப்பட மாட்டாது.
எண்ணம், சொல், செயல் மூன்றும்
தூய்மையாக இருந்து செய்யப்படும்
செயல்தான் அறமாகக் கொள்ளப்படும்.
இந்த அறத்தைத் தவிர இன்னொரு
அறமும் நம்மில் பலருக்குத்
தெரிந்திருக்கலாம்.
ஊரில் சிலரை அறம்பாடியே
கொன்னுருவாப்பா
என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
அறம் பாடி கொல்வதா?
அறம் நம்மைக் காப்பாற்றும் என்றுதான்
கேள்விப்பட்டிருக்கிறோம்.
இது என்ன அறம் பாடி கொல்லுதல் ?
சற்று குழப்பமாக இருக்கிறதல்லவா!
இதுவரை சொல்லிய அறத்திற்கும்
இந்த அறத்திற்கும் நிறைய வேறுபாடு
உண்டு.
முதலாவது அறம் ஒழுக்கநெறி.
இரண்டாவது அறம் ஒருவகையில்
சாபமிடுதல் போன்றதுதான்.
அறம் பாடுதல் என்ற
ஒரு சொல் இலக்கியங்கள்மூலம்
அறியப்பட்ட ஒன்று.
ஒரு புலவன் தனக்கு அநீதி
இழைக்கப்படும்போது
அநீதி இழைத்தவர் அழிய வேண்டும்
என்று சாபமிட்டுப் பாடுவதுதான்
இந்த அறம் வைத்துப் பாடுதல் ஆகும் .
உண்மையாகச் சொல்லப்படும்
வார்த்தைக்குக் கொல்லும் ஆற்றல்
உண்டு என்ற நம்பிக்கை பழங்காலத்தில்
இருந்திருக்கிறது.
அதன் அடிப்படையில் தோன்றியதே அறம்
பாடும் பாடல்கள் ஆகும்.
அறம் பாடுதலின் மூலம் புகழ்பெற்ற
நூல் ஒன்று உண்டென்றால் அது்
நந்திக் கலம்பகம்.
அறம்பாடுதல் மூலம் ஒருவரைக் கொல்ல
முடியும் என்ற நம்பிக்கையில் எழுதப்பட்ட
நூல் இது.
பாட்டுப் பாடியே மனிதனைக் கொன்றுவிடலாமா?
என்று ஐயத்தோடு கேட்போருக்கு
இந்த நந்திக் கலம்பகம் நூல்தான் சாட்சி.
இரண்டாம் நந்திவர்ம பல்லவன்
பற்றிய கதை இது.
நந்தி வர்மனின் மாற்றாந்தாய் மகன்கள்
நால்வர் இருந்தனர். நால்வருக்கும்
அரசாட்சியைத் தாங்கள் எப்படியாவது
கைப்பற்றிவிட வேண்டும் என்று ஆசை.
நந்திவர்மனோடு போரிட்டு
தோற்றுப் போய் நாட்டைவிட்டு
வெளியேறும் நிலை ஏற்பட்டது.
அதில் இளையவன் கவி பாடும்
திறன் பெற்றவன்.
மன்னர் தங்களுக்கு அநீதி
இழைத்துவிட்டார் என்று நினைத்தான்.
அதனால்தான் தங்களுக்குக் கிடைக்க
வேண்டிய உரிமை
கடைசிவரை தங்களுக்குக் கிடைக்காமலேயே
போய்விட்டது என மனம் வருந்தினான்.
நந்திவர்மனை அழித்தே தீர
வேண்டும் என்ற தீராப் பழி உணர்வு
அவனுக்குள் ஏற்பட்டது.
போரில்தான் மன்னரை
வென்றுவிட முடியவில்லை.
அறம் பாடியாவது கொன்றுவிட வேண்டும்
என்று ஒரு சபதம் எடுத்துப் பாடல்கள்
பாடினான்.
அறம் வைத்துப் பாடப்பட்ட
அந்தப் பாடல்களின் தொகுப்புதான்
நந்திக் கலம்பகம் என்ற நூல்.
பாடல் நல்ல இலக்கிய நயம்
கொண்டதாக இருந்தது.
பாடல்கள் முழுவதுமாக எழுதி முடிப்பதற்குள்
நந்தி வர்மனைக் கொல்ல வேண்டும்
என்ற அவரது இளைய தம்பியின்
உள்ளத்தில் இருந்த பழி உணர்வு
கொஞ்சம் கொஞ்சமாக
குறைய ஆரம்பித்தது.
முற்றும் துறந்த முனிவராக மாறிப்போனார்.
தன் அண்ணன் மீது இருந்த கோபமும்
காழ்ப்புணர்ச்சியும் இருந்த இடம்
தெரியாமல் மறைந்து போனது.
துறவு வாழ்க்கையில் தன்னை அர்ப்பணித்துக்
கொண்டார்.
அப்படியே ஊர் ஊராக
சுற்றித் திரிய ஆரம்பித்தார்.
சுற்றித் திரிந்தபோது அண்ணன்மீது
பாடிய பாடல் அறம் வைத்துப் பாடப்பட்டது
என்பதையே மறந்து போய்விட்டார்.
ஒருநாள் தெருவழியாக சென்று
கொண்டிருக்கும்போது அண்ணன் மீது
பாடிய அந்தப் பாடலைப் பாடிவிட்டார்.
அந்தப் பாடலைக் கேட்ட ஒருபெண்மணி
அந்தத் துறவியை அழைத்து மேலும்
சில பாடல்கள் பாடச் சொல்லி கேட்டு மகிழ்ந்தார்.
அவற்றை மனனம் செய்தும்
வைத்துக் கொண்டாள்.
நாட்கள் கடந்தன.
ஒருநாள் அரண்மணை வழியாகச் செல்லும்போது
அந்தப் பெண்....
துறவியார் பாடிய பாடலைப்
பாடிக் கொண்டே செல்கிறாள்.
உப்பரிகையில் நின்ற மன்னன் காதுகளில்
அந்தப் பாடல் வரிகள் வந்து விழுகின்றன.
ஆஹா...எவ்வளவு அருமையான பாடல்
என்று வியந்து போகிறார் மன்னர்.
பாடல் பாடிய பெண்மணியை அழைத்துவர
கட்டளை இடுகிறார்.
வீரர்கள் அந்தப் பெண்மணியை அழைத்து வந்து
மன்னர் முன் நிறுத்தினர்.
அஞ்சியபடியே மன்னன்முன்
வந்து நிற்கிறாள் அந்தப் பெண்.
நீ இந்த வழியாகச் செல்லும்போது
பாடிய பாடலைப் பாடியவர் யார் என
விசாரிக்கிறார் மன்னர்.
அந்தப் பெண் இந்தப் பாடல்கள்
நான் பாடியவை அல்ல.
ஒரு துறவி பாடியதை நான் மனனம்
செய்து வைத்திருந்தேன் என்ற உண்மையைக்
கூறுகிறாள்.
துறவியைத் தேடி கொண்டுவரும்படி
கட்டளையிடுகிறார் மன்னர்.
அந்தபடியே துறவியைக் கொண்டு
வந்து மன்னன் முன்
நிறுத்துகின்றனர் காவலர்கள்.
துறவியிடம் "தாங்கள் பாடிய
பாடலின் இனிமை என்னை மெய்மறக்கச்
செய்துவிட்டது.
எனக்காக நீங்கள் அந்தப் பாடலை
இன்னொருமுறை பாட வேண்டும்"
என்று கேட்கிறார் மன்னர்.
துறவிக்கோ தர்ம சங்கடமான நிலைமை.
" மன்னா!
அந்தப் பாடல்களை நான் பாடினால்
தாங்கள் உயிர் துறக்க நேரிடும்..
அதனால் வேண்டாம் மன்னா!....
வேண்டாம்...."என்று
பாடலைப் பாட மறுக்கிறார் துறவி.
மன்னனுக்கோ தமிழ்மீது தணியாக் காதல்.
அந்தப் பாடல்களை
எப்படியாவது கேட்டுவிட வேண்டும் என்ற
ஆர்வம் அவரை வேறு எதைப் பற்றியும்
எண்ண இடம்கொடுக்கவில்லை.
" என் உயிர் போனாலும் பரவாயில்லை
அந்த இனிமையான பாடலை நான் கேட்க
வேண்டும்.எனக்காக
நீங்கள் அந்தப் பாடலைப் பாடியே
ஆக வேண்டும்"
என்று வற்புறுத்துகிறார் மன்னர்.
வேறு வழியின்றி துறவியும் பாடலைப் பாட
ஒத்துக் கொள்கிறார்.
ஆனால் ஒரு நிபந்தனை .
அதற்கு நீங்கள் கட்டுப்பட்டே ஆக வேண்டும்
என்று நிபந்தனை விதிக்கிறார் துறவி.
மன்னரும் எந்த நிபந்தனைக்கும்
நான் கட்டுப்படுகிறேன். எனக்குத் தேவை
பாடல் என்று தனது நிலைப்பாட்டில்
உறுதியாக இருந்தார் மன்னர்.
"மன்னா! நூறு பந்தல்கள் பச்சை ஓலையால்
அமைக்க வேண்டும்.
நான் ஒவ்வொரு பாடல் பாடும்போதும்
நீங்கள் ஒரு பந்தலில் இருந்து
அந்தப் பாடலைக் கேட்க வேண்டும் .
அடுத்தப் பாடல் பாடும்போது
அடுத்தப் பந்தலுக்குச்
சென்றுவிட வேண்டும். "என்று
விளக்குகிறார் துறவி.
மன்னரும் சம்மதித்துப் பாடல் கேட்கத்
தயாராக முதல் பந்தலில்
போய் அமர்ந்து கொண்டார்.
பாடல் தொடங்கியது.
முதல் பாடல் முடிந்ததும்
முதல் பந்தல் தீப்பற்றிக்
கொண்டது.
மன்னர் அடுத்தப் பந்தலுக்குச்
தாவிச் சென்று விட்டார்.
இவ்வாறு ஒவ்வொரு பாடலும்
பாடப்பாட ஒவ்வொரு பந்தலும்
எரிந்து போனது.
இப்படியாக தொண்ணூற்று ஒன்பது
பந்தல்களும் எரிந்து போயின.
கடைசியாக நூறாவது பந்தலில்
மன்னர் பிணம் போல படுத்துக் கொண்டு
பாடலைக் கேட்டார்.
துறவி கண்ணீரோடு கடைசிப்
பாடலைப் பாடினார்.
பந்தல் மொத்தமாக தீப்பற்றிக் கொள்ள
மன்னரும் தீயில் கருகி மாண்டு போகிறார்.
இதுதான் அறம் வைத்துப் பாடிய
பாடலைக் கேட்டதால் நந்தி வர்மனுக்கு
நிகழ்ந்த சோகம்.
அறம் வைத்துப் பாடுதலுக்கு இவ்வளவு
சக்தி இருக்கிறதா என்று எண்ணத்
தோன்றுகிறதல்லவா!
அது ஒரு நம்பிக்கையாக
இருந்திருக்கிறது.
இறுதியில் மன்னன் இறந்ததும்
கதறி அழுதவாறு துறவி
மற்றுமொரு பாடலையும்
பாடினார் .
பாடல் இதோ :
"வானுறு மதியை அடைந்ததுன் வதனம்
மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி
கானுறு புலியை அடைந்ததுன் வீரம்
கற்பகம் அடைந்ததுன் கரங்கள்
தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள்
செந்தழல் அடைந்ததுன் தேகம்
நானும் என் கலியும் எவ்விடம் புகுவோம்
நந்தியே நந்தயா பரனே !
"உன் முக அழகு நிலவைப் போய்
சேர்ந்துவிட்டது.
உன் புகழ் கடலுக்குள் புகுந்து
காணாமல் போனது.
உன் வீரம் காட்டில் வாழும் புலிகளிடம் போய்
தஞ்சம் அடைந்து விட்டது.
உன் கரங்கள் கற்பக மரத்திடம்
சென்றுவிட்டன.
உன்னிடம் இருந்த திருமகளும் திருமாலிடம்
சென்று விட்டாள்.
நானும் என் வறுமையும்
இனி எங்கே செல்வோம் ?"
என்று அழுது புலம்புகிறார் துறவி.
இப்படி அறம் வைத்துப் பாடுதல் சரியா?
என்ற கேள்வியும் இப்போது
நமக்குள் எழத்தான் செய்கிறது.
ஆழ்மனதில் ஏற்படும் காயமே சாபமாக
வெளி வருகிறது.
சாபமிடுவதுபோல் எழுதப்பட்டவைதான்
இத்தகைய பாடல்கள்.
வலிமை மிக்கவர்கள் எளியோர் மீது
வலுக்கட்டாயமாக
இழைக்கும் அநீதிக்கு எதிராக
எளியோரால் எதுவும் செய்ய முடியாத நிலை.
கையைப் பிசைந்து கொண்டு நிற்கும்
கையறுநிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
உள்ளம் குமுறுகிறது.
வார்த்தைகள் அனலாக வந்து
விழுகின்றன.
தங்கள் இயலாமை வெப்பமான வார்த்தைகளாக
வந்து விழும்போது அநீதி இழைத்தவர்
வெந்து போகிறார்.
இதைத்தான் சாபமிட்டுவிட்டார் என்கிறோம்.
இலக்கியம் இதனை அறம் வைத்துப்
பாடுதல் என்கிறது.
இதுதான் அறம் வைத்துப்
பாடப்பட்டதாகக் கூறப்படும்
நந்திக் கலம்பகம் மூலமாக
நாம் அறியும் செய்தி.
மிகச் சிறப்பான விளக்கம்.தங்களது பதிப்பு படிக்க படிக்க ஆர்வத்தை தூண்டியது.
ReplyDeleteVery nice. Superb.
ReplyDeleteV.Nice
ReplyDeleteமிக அருமையான பதிவு
ReplyDelete