திருவள்ளுவர் தினம்

   திருவள்ளுவர் தினம்

"அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
 பகவன் முதற்றே உலகு"
 1330 குறள் தந்த குறளோனை
 உலகமே கொண்டாடும் நாள்.

"கனியிடை ஏறிய சுளையும்_ முற்றல்
கழையிடை ஏறிய சாறும்
பனிமலர் ஏறிய தேனும் _காய்ச்சுப்
பாகிடை ஏறிய சுவையும்
நனிபசு பொழியும் பாலும்_ தென்னை
நல்கிய குளிரிள நீரும்
இனியன என்பேன் எனினும்
தமிழை
என்னுயிர் என்பேன் கண்டீர்"
என்னும் பாவேந்தர்  வாக்கிற்கிணங்க
என்னுயிராம் தமிழை உலக அரங்கில்
உயர்த்திய திருவள்ளுவரைக் கொண்டாடும் நாள்.
 
வான் பொய்த்தாலும் பொய்க்கலாம்
வள்ளுவரின் வாய்மொழி பொய்க்காது என
பொய்யாமொழிக்கு மெய்யாய் முன்னுரை
எழுதி அக்காலம் இக்காலம்
எக்காலம் என்று இல்லாமல்
எக்காலமும் எம்மோடு உறவாடிக்
கொண்டிருப்பது திருக்குறள் என்று
கொண்டாடி மகிழ்கிறோம்.

அந்தக் கொண்டாட்டம் எந்நாளும்
தொடர வேண்டும்.
எல்லோராலும் அறியப்பட வேண்டும்
என்ற உயரிய நோக்கோடு
தை மாதம் இரண்டாம் நாளைத்
திருவள்ளுவர் தினமாகக் கொண்டாடி
வருகிறோம்.

மனிதன் மனிதனுக்கு 
இவ்வளவு அருமையாகச்
சொல்லித்தர முடியுமா? என்று 
 உலகையே புருவம் உயர்த்திப் 
பார்க்க வைத்தவர் வள்ளுவர்.

ஒன்றே முக்கால் அடியில்  வாழ்வியல்
உண்மைகளை வடித்துத் தந்தவர்.

அத்தோடு வாழ்ந்து பொருளீட்டி
இன்பம் துய்த்து இனிதே வாழ்தல் தான்
வாழ்க்கை என்று கற்றுத் தந்தவர்.

 அறம் ,பொருள் ,இன்பம் என முப்பாலை
முக்கனிச் சுவை கலந்து கொடுத்து
தெம்பூட்டி வளர்த்துக் கொண்டிருப்பவர்.

"வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து
வான் புகழ் கொண்ட தமிழ்நாடு "
என்று  தமிழ்நாட்டின் அடையாளமே 
திருவள்ளுவர்தான்
என்று பாரதியால் கொண்டாடப்பட்டவர்.

"ஆயிரத்து முந்நூற்று முப்பது அருங்குறளும்
பாயிரத்தினோடு பகர்ந்ததற்பின்
போயொருத்தர் வாய் கேட்க நூல் உளவோ?"

என்று உலகியலின் ஒட்டுமொத்த கருத்தையும்
கற்றையாய்த் தன் குறளுக்குள் 
சுருக்கித் தந்ததைப் போன்றதொரு
நூல் வேறு எங்கும் கண்டீரோ என உலகுக்கே
சவால் விட்டு மார்தட்ட வைத்தவர்.

"அணுவைத் துளைத்து எழுகடலைப் புகுத்தி
குறுகத் தறித்த குறள்"
படைத்து யாரிந்த குறளார்
என்று அனைவரையும் அண்ணாந்து
பார்த்து வியக்க வைத்தவர்.

"ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி"
என்று இரண்டடியில் சொல்லடுக்கி
சொல்லுக்குச் சொல் யானென்று
நம் நாவில் உறைந்து நல்வாக்கு உரைப்பவர்.
 

தன் நூலுக்கே 
நூல் எழுத வைத்துத்
திருவள்ளுவ மாலையாக மணிமார்பில்
தவழவிட்டு அழகு பார்த்துக்
கொண்டிருப்பவர்.

ஆதி என்ற தாய்க்கும் பகவன் என்ற 
தந்தைக்கும் பிறந்தவர் என்று 
நம்மால் நாளும்  கொண்டாடப்படுபவர்.

 
வள்ளுவர் ஒருவரால் வளர்க்கப்பட்டதால்
வள்ளுவர் என்று அழைக்கப் பெற்றாரே தவிர
இயற்பெயர் பற்றி யாருமே முடிவான 
கருத்து ஏதும் கூற முடியாமற் போனதால்
திருவள்ளுவராக அனைவர் உள்ளங்களிலும் 
நிரந்தரமாகக் குடிகொண்டிருப்பவர்.

அரசனின் அந்தரங்க ஆலோசகராய் இருந்தவருக்கு
மார்க்கச்சுராயர் என்ற வேளாளர் மகள் 
வாசுகி மனைவியாக  வாய்க்கப் பெற்றிருந்தார்
என்ற வரலாற்று செய்தியோடு 
 வள்ளுவரும் வாசுகியும் போல வாழ்க என்ற
வாழ்த்துச் செய்தியோடு வலம் வருபவர்.



நாயனார், தேவர், முதற்பாவலர்,, தெய்வப்புலவர்
நான்முகன், மாதானுபங்கி, செந்நாப்போதார்,
பெருநாவலர் , பொய்யில் புலவர் என்று 
பன்முகம் தாங்கி
இம்முகத்தார் எனக்குத்தான் இவரென
இயம்பிட வொண்ணாது
எக்குலத்தாரும் கொண்டாடி
நிற்கும் நாயகனானவர்.


சாதி சமய  வேறுபாடுகளுக்கு 
அப்பால் நின்று 
பொதுப்பாவால்
பொதுமறை புனைந்து
புவியை தன்பக்கம் திரும்பியவர்.


எக்காலத்திற்கும் எவ்வுலகுக்கும் உகந்த
மொழி மொழிந்தமையால்
உலகத்தையே வியப்பு மேலிட
தன்னை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்து
திக்குமுக்காட செய்தவர்.

இத்தகைய பெருந்தகைக்கு உரியதினம்.
உகந்த தினம். அதுதான் திருவள்ளுவர்தினம் 
என்று நாம் கொண்டாடும் இன்றைய தினம்
என்பதை எண்ணுகையில் உள்ளம்
உவகையால் துள்ளலிடுகிறது.

வள்ளுவரைப் பற்றிப் பேசும் நாளாக
இந்தநாள் அமைந்தது உண்மையிலேயே
பெரும் மகிழ்ச்சிக்கு உரியது.எனினும்
எல்லா நாளும் வள்ளுவருக்கு உரிய நாள்.
வள்ளுவர் வகுத்துத் தந்தப் பாதையில்
நடக்கும் நாளாக இருக்க வேண்டும்
என்பது என் அவா.

வள்ளுவருக்கும் வள்ளுவர் ஆண்டுக்கும்
உள்ள ஆராய்ச்சி இன்றுவரை 
தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இயேசு கிறிஸ்து பிறப்பதற்கு 
முப்பத்து ஒரு ஆண்டுகளுக்கு
முன்னரே திருவள்ளுவர் ஆண்டு 
தொடங்கப்பட்டது என்பது வரலாற்று
ஆசிரியர்களின் கணிப்பு.
அது தமிழுக்கும் தமிழருக்கும்
கிடைத்த நல்லதொரு  சிறப்பு.

இந்த உண்மையை மறைமலை அடிகள் 
ஆராய்ந்து உலகுக்குத் தெரிவித்தார் 
 என்பதில் என்றுமே  எனக்கு 
உண்டு வியப்பு!

1921ஆம் ஆண்டு இதனை வெளியிட்ட
மறைமலை அடிகள்
இதற்காக  நூற்றுக்கும் மேற்பட்ட 
ஆதாரங்களைக் கொடுத்துள்ளதால்
அறிஞர் பெருமக்கள் மனதில் ஏற்பட்டது
திருவள்ளுவர் ஆண்டு 
உருவாக்க வேண்டும் என்பது 
பற்றிய நினைப்பு.

மறைமலை அடிகள் கருத்துப்படி
2021 ஆம் ஆண்டான இந்த ஆண்டு 2051ஆம்
திருவள்ளுவர் ஆண்டு  என்பதைச் சொல்லிக்
கொள்வதில் அனைவருக்குமே
உண்டு உவப்பு.

 திருவள்ளுவர் ஆண்டைக் கணக்கிட நடப்பு
 ஆங்கில ஆண்டோடு 31ஆண்டுகளைக்
 கூட்டினால் எளிதாக நினைவில் வைத்துக்
 கொள்ளலாம் என்பது மறைமலை அடிகள்
 நமக்குச் சொல்லித் தந்தார் ஒரு கணக்கு.
 
 தைப்பொங்கலை  என்றுமே
தமிழர் திருநாள் என்று கொண்டாடி 
மகிழ்வதுதான் தமிழரின் விருப்பு.

அதனால் அந்த நாளை திருவள்ளுவர் நாள்
என்று அறிவிக்க வேண்டும் என்ற
கோரிக்கை  அரசின் முன் வைக்கப்பட்டது
வள்ளுவருக்கு கிடைத்த பெரும் மதிப்பு.
அது கலைஞர் தலைமையிலான
அரசால்  ஏற்றுக் கொள்ளப்பட்டு 
நடைமுறைப்படுத்த முடிவு எடுக்கப்பட்டது
நற்பொறுப்பு.


 எனினும் 1981 இல் நடைபெற்ற
மதுரை உலகத் தமிழ் மாநாட்டில்தான்
 மாண்புமிகு முதல்வர் எம். ஜி. ஆர் 
அவர்களால்  திருவள்ளுவர் ஆண்டுக்கான
 அதிகாரப்பூர்வ அரசாணை பிறப்பிக்கப்பட்டது
அரசுக்குக் கிடைத்த நல்வாய்ப்பு.

தை மாதம் முதல்நாள் திருவள்ளுவர் 
ஆண்டின் முதல்நாள். அன்றையதினம்
தமிழர் திருநாளாம் பொங்கல் உலகெங்கும்
உள்ள தமிழர்களால் கொண்டாடப்படுவது
தமிழுக்கும் தமிழருக்கும் கிடைத்த மாபெரும்
சிறப்பு.

இரண்டாம்நாள் திருவள்ளுவர் தினம்
கொண்டாடப்படுகிறது.
இந்தநாள் உலகுக்கே பாடம் சொல்லித் தந்த
என் பாட்டன் திருவள்ளுவருக்கான நாள்
என்பது மட்டுமல்ல.
ஒவ்வொரு தமிழருக்குமான நாள்.

தமிழினத்தை ஒன்றிணைக்கும் நாள்.
தமிழர்  ஒவ்வொருவரையும் பெருமிதம் 
கொள்ள வைக்கும் நாள்.

"தமிழன் என்று சொல்லடா
தலை நிமிர்ந்து நில்லடா" என
நம்மைத் தலை நிமிர வைத்த நாள்.

முப்பால் படைத்தோனை
மலைப்பால் மகிழ்ச்சிப்பாலூற்றிக்
கொண்டாடும் நாள்.

இன்று பிறக்கும் இந்த
வள்ளுவன் ஆண்டில் 
வையகம் தழைத்திட
பிணி நீங்கி 
பேருவகை  வந்திட
இறைவன் அருள்
இல்லத்தில்  தங்கிட
இருகரம் கூப்பி வாழ்த்துகிறேன்.
 
குறளோடும்
குறள் கூறும் விழுமியங்களோடும்
நாளும் நடை பயில்வோம்.

வாழ்க தமிழ்!  
ஓங்குக வள்ளுவர் புகழ் !

அனைவருக்கும் இனிய 
திருவள்ளுவர் நாள்
நல்வாழ்த்துகள் !








Comments

  1. உலகுக்கு தமிழின் பெருமையை ஓங்க செய்த திருவள்ளுவர் என்றும் வணக்கத்திற்குரியவர்.அவரது நாளை கொண்டாடுவதில் பெருமகிழ்ச்சி அடைவோம்.

    ReplyDelete
  2. கட்டுரை அருமையான ,அரிதான சிறப்பான செய்திகளின் தொகுப்பு.

    ReplyDelete

Post a Comment