காய்த்த மரம்தான் கல்லடி படும்

காய்த்த மரம்தான் கல்லடி படும்
அருமையான அனுபவமொழி.
அனுபவித்து எழுதப்பட்ட மொழி.

காய்த்த மரம் கல்லடி படும்.

ஒரு மரம் காய்த்திருந்தால் மட்டுமே பிறரைத் 
திரும்பிப் பார்க்க வைக்கும்.

மொட்டையாய் ஒரு மரம் நின்று கொண்டிருந்தால்
யாருமே சட்டை செய்வதில்லை
ஏதோ ஒரு மரம் நிற்கிறது அவ்வளவுதான்.
அதற்குமேல் அந்த மரத்தை யாரும்
அண்ணாந்து பார்ப்பதில்லை.
மரத்தில் காய், கனிகள் காய்த்துக்
கிடக்கும்போதுதான் அனைவரையும் 
அண்ணாந்து பார்க்க வைக்கும்.
அதன் பலன் நமக்கும் சிறிதாவது கிடைக்காதா
என்ற ஆவலில் கல்லெடுத்து வீச வைக்கும்.

.வண்டுகளும் தேனீக்களும் 
பட்டாம்பூச்சிகளும் சுற்றி சுற்றி பறந்து வரும்.
மரத்திலிருந்து நமக்கும் ஏதாவது
கிடைக்காதா என்று ஏங்க வைக்கும்.
அந்த ஏக்கம் தொட்டுப் பார்க்கத் தூண்டும்.


வழிப்போக்கர்கள் கண்களை எல்லாம்
உறுத்தும்.
அந்த உறுத்தல் கைகளில் கல்லை எடுத்து
வீச வைக்கும்.
கிடைத்தால் லாபம். இல்லை என்றால்
மறுபடியும் வீசிப் பார்ப் போம் என்று
தொடர்ந்து வீச வைக்கும்.
எதுவரை காய், கனிகள் இருக்கிறதோ 
அதுவரை கல் வந்து விழத்தான் செய்யும்.
இது உலக இயல்பு.


இதனால் மரம் பல நேரங்களில்
காயப்பட்டுப் போகலாம்.
அதற்காக அடுத்த வருடம் நான்
காய்க்கவே மாட்டேன் என்று முரண்டு பிடித்தால்...
அப்படியே நிற்க வேண்டியதுதான்.

யாரும் திரும்பிப் பார்க்கவே மாட்டார்கள்.
பொட்டல் காட்டில் நிற்கும் மொட்டை மரமாக
தனிமையில் நிற்க வேண்டியதுதான்.

எது எப்படியோ.... கல்வீசும் நபரைவிட
மரம் உயரத்தில் இருப்பதென்னவோ உண்மை.

இது போன்றதுதான் நம்மீது வீசப்படும்
விமர்சனங்களும்.

உங்களில் வளர்ச்சி இருந்தால் மட்டுமே
உங்கள் மீது விமர்சனங்கள் வைக்கப்படும்.


உங்களிடம் ஏதோ ஒரு தனித்தன்மை
 மற்றவர்களை விடவும்
அதிகமாக இருக்கிறது. அதனால்தான்
மற்றவர்களின் கவனம் உங்கள் பக்கம்
திரும்புகிறது.
உங்களை நோக்கி விமர்சனக் கணைகள்
 வீசப்படுகின்றன.

அவை உங்களைக் காயப்படுத்தலாம்.
அதற்காக நீங்கள் பின்வாங்கிவிட்டால்
மொட்டை மரம் போல 
வெட்டவெளியில் தனிக்கட்டையாய்
நிற்க வேண்டியது ஆகிவிடும்.

விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு அதிலிருந்து
நல்லவற்றை எடுத்துக் கொண்டு 
அடுத்த நிலைக்குத் தயார்படுத்திக் 
கொண்டே இருந்தால்
விமர்சனங்கள் ஒருபோதும் 
நம்மைக் காயப்படுத்திவிடாது.


போற்றுவார் போற்றட்டும்
புழுதி வாரி தூற்றுவார் தூற்றட்டும்.

நான் என் கடமையை உண்மையாய்  செய்து
கொண்டே இருப்பேன்.

என் உழைப்பை ஒருபோதும்
யாருக்காகவும் எதற்காகவும் நிறுத்தப்
போவதில்லை 
என்று நதிபோல நில்லாமல் ஓடிக்
கொண்டே இருக்க வேண்டும்.

காய்த்த மரம் கல்லடி படத்தான் செய்யும்.

தவறுகள் சுட்டிக்காட்டப் பட்டால்
திருத்திக் கொள்ளும் மன பக்குவம் 
இருக்க வேண்டும்.

விமர்சனங்களைப் பரிசீலனை செய்து
நல்லவற்றை எடுத்துக் கொண்டு, தவறுகளைத்
திருத்திக் கொண்டால் மட்டுமே வெற்றியாளராக
 முடியும்.

Comments

  1. மாற்றங்களை ஏற்றுக்கொள்ளாத வரை விமர்சனக் கணைகள் வீசப்படும்.இது மனித இயல்பு.மிக எளிமையாக பதிவிட்டது மிக அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular Posts