இக்கரைக்கு அக்கரை பச்சை

இக்கரைக்கு அக்கரை பச்சை

இக்கரைக்கு அக்கரை பச்சை.
 அருமையான வாழ்வியல் உண்மையைச்
 சொல்லித் தரும் அனுபவமொழி.

எப்போதுமே நம் கண்கள் அருகில்
இருக்கும் பொருட்களைக் காணத் தவறிவிடும்.
தூரத்தில் இருக்கும் பொருட்களை
நாடி ஓடும்.

இது கண்களின் குற்றம் அல்ல.
இயல்பாகவே கண்களின் தன்மை அதுதாங்க.

அழகான வீடு கட்டி இருப்போம்.
ஆனால்  அடுத்த வீட்டுக் காரனுடைய
வீடுதான் அழகாக இருப்பதுபோல்
தோன்றும்.

தன் வீட்டில் எவ்வளவுதான் ருசியாக
சாப்பிட்டிருந்தாலும் ஒருநாள் நண்பன்
வீட்டில் தின்ற  கடலை உருண்டை சுவையாகத்
தெரியும்.

எந்தச் சேலை கட்டினாலும் பக்கத்து
வீட்டுக்காரிக்கு  நன்றாக இருக்கிறது...
எனக்குதான் ஒரு சேலைகூட சரியாக  
வாய்க்க மாட்டேங்குது....
சொல்லி ...சொல்லி புலம்புவோம்.

பாவாடை சட்டை போட்ட காலத்தில்
தாவணி போட்டுப் பார்க்க ஆசை வரும்.

தாவணிப் போட்டபிறகு 
எப்போது சேலை கட்டுவோம்
என்று ஏக்கமாக இருக்கும்.

திருமணம் ஆகி வந்து விட்டால் 
எங்க அம்மா வீட்டுல...எங்க அம்மா வீட்டுல....
என்று ஆயிரம் முறை அம்மா வீட்டை
நோக்கியே மனம் நாடி ஓடும்.

சிலருக்கு அடுத்த வீட்டுப் பெண்தான்
அழகாகத் தெரியும்.
 அவள் எவ்வளவு விபரமா பேசுகிறாள்....
 எவ்வளவு நாகரீகமாக நடந்து கொள்கிறாள்...
 இவளும் இருக்காளே .....என்று நமக்கு 
 உரிமையானவளை மட்டமாக எடை போட்டு
 எட்ட வைத்திருப்போம்.
 
 அடுத்த வீட்டுக்காரர் எவ்வளவு நாகரீகமாக
 நடந்துக்கிறாரு.....
உங்களுக்கு ஒன்றும் தெரியாது 
என்று அடுத்த வீட்டுக்காரரோடு ஒப்பிட்டுப்
பேசி வீட்டிற்குள் நிம்மதியைத் 
தொலைத்திருப்போம்.

எல்லா வீட்டுப் பிள்ளைகளும் எப்படிப்
படிக்கிறார்கள்? 
என்று தன் பிள்ளைகளை அடுத்த வீட்டுப்
பிள்ளைகளோடு ஒப்பிட்டுப் பேசி
ஒரு தாழ்வு மனப்பான்மைக்குள்
தள்ளி விடுவோம்.

எனக்குத்தான் நல்ல அப்பா அம்மா
கிடைக்கவில்லை....ரொம்ப கண்டிப்பு.
எதிர்வீட்டு ரமேஷ் அப்பா அம்மா
அவனை எவ்வளவு சுதந்திரமா 
இருக்க விடுகிறார்கள்
என்று எதிர் வீட்டையே
பார்த்துப் பார்த்து ஏங்கிக் கொண்டிருப்போம்.

நான் எல்லாம் நல்ல பள்ளியிலேயே
படிக்கவில்லை.
நல்ல பள்ளியில் படித்திருந்தால்.....
நல்ல கல்லூரியில் சேர்ந்திருந்தால்....
நல்ல பாடம் தேர்வு செய்திருந்தால்....
இன்று எப்படி எல்லாமோ இருந்திருப்பேன்

என்று அமெரிக்காவையே வாங்கிவிடும்
சந்தர்ப்பம் நழுவி விட்டது போல
சொல்லிச் சொல்லி கேட்பவர்களை 
நோகடித்துக் கொண்டிருப்போம்.

இதற்கு எல்லாம் காரணம் என்ன? 
இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதுதாங்க.

இருப்பதில் திருப்திப்படும் மனம் 
யாருக்குமே கிடையாது.

எங்கோ ஒரு இடத்தில் எதையோ ஒன்றை 
இழந்து விட்டது போன்ற தவிப்பு....

நம்மிடம் இருக்கும் எதுவுமே நமக்கு நல்லதாக
அமையாதது போன்ற நினைப்பு....

நமக்கு வாய்த்தது எல்லாம்
நல்லவை அல்ல என்ற
தவறான மனக்கணக்கு...

நமக்கு கிடைத்ததை அனுபவிக்கத்
தெரியாவிட்டால் இப்படித்தான்
மனம் கண்ட கண்ட
திசையில் திசைமாறிப் போய்க்கொண்டிருக்கும்.

மூன்று நண்பர்கள் 
எங்களுக்கு இந்த மானிட பிறவி
பிடிக்கவில்லை என்று கடவுளுக்கு அடிக்கடி
மனு எழுதிப்  போட்டுக் கொண்டே இருந்தார்கள்.

கடவுளும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார்.
"இவர்களுக்கு பூமியில் என்னதான் பிரச்சனை?
 கேட்டுதான் பார்ப்போமே "என்று ஒருநாள்
 திடீரென்று பூமிக்கு இறங்கி வந்து
விட்டார்.
அவர்கள் முன் தோன்றி,
"இப்போது உங்கள் குறைகளை என்னிடம்
சொல்லுங்கள்" என்று கேட்டார் .

"ஊரில் இருக்கிற எந்த மனிதர்களும்
நல்லவர்கள்  இல்லை.
வஞ்சகமும் சூதும் லஞ்சமும்
பொய்யும் பித்தலாட்டமும்
பொறாமையும்....அப்பப்பா
வேண்டாமடா சாமி இந்த மானிடப் பிறவி.
ஒரு நிம்மதி இல்லாத வாழ்க்கை .
நீங்கள்தான் இதிலிருந்து எங்களுக்கு
விடுதலை தர வேண்டும்" என்று
இறைவன் காலில் விழுந்தனர்.

இறைவன் சிறிது நேரம் யோசித்தார்.
பின்னர் "மானிட பிறவி வேண்டாம்
என்றால் வேறு என்னவாக 
பிறக்க விரும்புகிறீர்கள்?"
என்று கேட்டார் கடவுள்.

ஒருவன்" மானாகப் பிறந்து காடு முழுவதும்
சுதந்திரமாகத் துள்ளித் திரிய ஆசைப்படுகிறேன்"
என்றான்.
இன்னொருவன்" நரியாக ஊளையிட்டுத்
திரிய ஆசை" என்றான்.

மூன்றாமவனோ "எனக்கு அவ்வளவு
பெரிய ஆசை எல்லாம் இல்லை. 
 முயலாக வாழ்ந்தால் போதும்" என்றான்.
 
" சரி ....உங்கள் விருப்பம் போல் வாழும்
 வரம் தந்தேன் "என்றார் கடவுள்.
 
 மறு நிமிடமே மான் துள்ளிக் குதித்து ஓடியது.
 
 நரி ஊளையிட்டு தன் வருகையை
 காடு முழுவதும் அறிவித்தது.
 
 முயல் தாவித் தாவி ஓடி அழகு காட்டியது.
 
முழுதாக ஒருவாரம் ஆகவில்லை..

"கடவுளே! எங்களை காப்பாற்றுங்க...
எங்களைக் காப்பாற்றுங்க ..."
என்று அலறியடித்து ஒப்பாரியோடு 
மூன்று விலங்குகளும் கடவுள் காலில் 
வந்து விழுந்தன.

"எழும்புங்க... எழும்புங்க...
இப்போது என்ன பிரச்சனை ?  
என்று சொல்லுங்க"
என்றார் கடவுள்.

"நிம்மதி இல்லாத வாழ்க்கை.
இது எங்களுக்கு வேண்டவே வேண்டாம்."
என்றது மான்.

"ஏன் காடு நன்றாக இல்லையா...பசுமையாக
இருந்திருக்குமே" என்றார் கடவுள்.

"பசுமையாக இருந்து என்ன பயன்? நிம்மதியாக
ஒரு வாய் புல் தின்ன முடிவதில்லை .எப்போது
புலி வந்து பிடிக்குமோ ...
சிங்கம் வந்து கொன்று போடுமோ...
எந்த விலங்கு எப்போ வந்து 
நம்மைத் துரத்துமோ ...
என்று அச்சத்திலேயே
வாழ வேண்டியுள்ளது."
என்றது மான்.

"நரியாருக்கு என்ன பிரச்சினையோ?"
கேட்டார் இறைவன்.

ஒரு விலங்கு பக்கத்துல போக 
முடியவில்லை.
என்னைக் கண்டாலே நயவஞ்சகன்.
என்னால்  துன்பம் வந்துவிடுமோ என்று
சின்ன விலங்குகள் எல்லாம் 
அஞ்சி ஓடுகின்றன. ஒரு ஆடு பக்கத்தில்
வரமாட்டேன் என்கிறது.
தனிமை...தனிமை...தனிமை...
எத்தனை நாள் இப்படியே தனிமையில்
கிடந்து ஊளையிடுவது? 
போதும் இந்த நரிப் பொழப்பு"
என்றது நரி.

"தனிமைதான் நரியாருக்குப்
பிரச்சினை. இல்லையா? 
குட்டித்தம்பி முயலாருக்கு வந்த
சோகம் என்னவோ ? "
கேட்டார் கடவுள்.

"காடு முழுவதும் சுதந்திரமாக தாவி ஓடலாம்
என்று நினைத்தேன்.
நாலடி தூரம் குதிக்கும் முன்னர்
நான்குபேர் துரத்துகிறார்கள்.
ஓடி வந்து புதருக்குள் பதுங்கி இருந்து
உயிரைக் காப்பாற்ற நான் படும்பாடு.
போதும்....போதும்...முயலாக மாறியதும்
போதும்.மூச்சுவிட முடியாமல் திணறியதும்
போதும் "என்றது முயல்.

மூவரின் கண்களிலும் மரண பயம்
தெரிந்தது.

"மகிழ்ச்சியாகத்தானே இந்த வாழ்க்கைக்கு
மாறினீங்க..ஒரு பத்துநாள்
தாக்குபிடிக்க முடியலியா? " 

"தெரியாமல் மாறி விட்டோம்.
ஒரு பத்து நொடிகூட வேண்டாம்.
நித்தம் நித்தம் பயத்தோடு வாழும்
இந்த காட்டு வாழ்க்கை எங்களுக்கு
வேண்டவே வேண்டாம்.
பழைய மானிட பிறவியே மகிழ்ச்சியாக
இருந்தது. அப்படியே மானிடர்களாக எங்களை
மாற்றிவிடுங்க...சாமி"என்று கெஞ்சி
கூத்தாடியது மூன்று விலங்குகளும்.

"இக்கரைக்கு அக்கரை பச்சை"
என்று சொல்லி , 
சிரித்துக் கொண்டார் கடவுள்.

"அதேத்தான்...அதேத்தான்..."
மூவரும் ஒத்தக்குரலில் ஒத்துக்கொண்டன.

"இனியாவது இருப்பதில் மகிழ்ச்சியாக
வாழ கற்றுக் கொள்ளுங்கள்"
என்று அறிவுரை கூறி மானிடர்களாக
மாற்றி அனுப்பினார் கடவுள்.

இப்படித்தாங்க நாட்டில் இருக்கும் போது
காட்டில் வாழ்ந்தால் ....
சொர்க்கமாக இருக்குமே
என்று நினைப்போம்.

காட்டில் வாழ்ந்தால் ஊரில் 
எவ்வளவு நிம்மதியாக வாழ்ந்தோம்.
 இங்கு வந்து அகப்பட்டுக் 
கொண்டோமே  என்று பழைய வாழ்க்கையை
நினைத்து...நினைத்து
பழைமைக்காக ஏங்குவோம்.

அடுத்தவர் வைத்திருக்கும் கைப்பை பிடிக்கும்.
அணிந்திருக்கும் ஆடை பிடிக்கும்.
அடுத்தவர் வீடு பிடிக்கும்.
நமக்குக் கிடைக்கவில்லையே
என்று ஏக்கமாக இருக்கும்.

நம்மைத் தவிர வேறு எல்லாமே  பிடிக்கும்.

ஊள்ளூர்வாசிகள் சொல்லும் அறிவுரைகள்
பிடிக்காது.
அந்நிய நாட்டு தத்துவங்களைத் தேடித் தேடிப்
படிப்போம்.
உள்ளூர் பழமொழிகளைவிட வெளியூர்
இறக்குமதி மொழிகளுக்கு மவுசு அதிகம்.
அதனால்தான் பேசும்போதுகூட 
பிறநாட்டு அறிஞர்களை மேற்கோள்
காட்டிப் பேசுவோம்.

திருக்குறள், ஆத்திசூடி, நன்னெறி, உலக நீதி
போன்ற இன்னும் பிற நீதி நூல்களில்
இல்லாத கருத்தையா பிற நாட்டு அறிஞர்கள்
சொல்லிவிடப் போகிறார்கள்?

"கிட்ட இருந்தால் முட்டப் பகை
தூர இருந்தால் சேர உறவு "
என்பதும் இதுதான்.

இந்திய நாட்டில் வேலை பார்ப்பதைவிட
அயல் நாட்டிற்கு அதிகம்பேர்
ஓடுவதின் பின்னணியும்
பெரும்பாலும் இந்த மோகம்தான்.

அங்கு சென்றவர்களைக் கேட்டால் 
சொர்க்கமே ஆனாலும் நம்மூரைப் போல
வருமா? என்று  புலம்புவார்கள்.

மனம் எப்போதுமே
இருப்பதை விட்டுவிட்டு பறப்பதைப் பிடிக்க
ஆலாய் பறக்கும்.

தூரத்திலிருந்து  பார்ப்பதற்கு எல்லாமே 
அழகாகத்தான் தெரியும்.

மலையும் அதன் காட்சிகளும் தொலைவிருந்து
பார்க்கும்போது அழகாக இருக்கும்.

பசுமையான  புல்வெளிகள் நாம் இருக்கும் 
இடத்தில் இருந்து பார்ப்பதைவிட
தொலைவில் இருந்து பார்க்கும்போதுதான்
கொள்ளை அழகு என்று சொல்லி
பிரமிக்க வைக்கும்.

இக்கரையோ அக்கரையோ எதுவாக இருந்தாலும்
பசுமையாக வைப்பது நம்
கையில்தான் உள்ளது.
இருப்பதில் திருப்தி கொண்டு
 வாழ அக்கறை எடுத்துக்
கொண்டாலே போதும்.
அக்கரையைப் போல இக்கரையையும்
பச்சைப் பசேலென்று பசுமையாக
வைத்துக் கொள்ளலாம்.
தூரத்துப் பச்சை கண்ணுக்குக் குளிமை

Comments

  1. கண்களுக்கு குளிமை ஊட்டும் படத்துடன் பதிவிட்டது மிக அருமை.

    ReplyDelete

Post a Comment

Popular Posts