பூரணி

              பூரணி

எது வரைக்கும் இந்த நாடகம் ? 
ஒன்றுமே  புரியவில்லை . இன்று முடிவுக்கு வரும்
நாளை முடிவுக்கு வரும் என்று ஓரளவு நானும்
சமாளித்துத்தான் பார்த்தேன்.

ஆனால் முடிவதாகத் தெரியவில்லை.
போதும் போதும் என்றாகி விட்டது. 
இதற்கு மேலும்
இப்படியே போய்க் கொண்டிருந்தால்  ....

இதற்கு என்னதான் வழி ? 
வீட்டிற்கு வந்தால் நிம்மதி இல்லாமல்
தவிப்பது போன்ற உணர்வு.

அலுவலகத்தில் இருக்கும்வரை 
வீட்டு நினைப்பே வராது.
வீட்டிற்குப் புறப்படும்போது கூடவே
பரபரப்பும் தேவை இல்லாத கவலைகளும்
வந்து தொற்றிக் கொள்ளும்.

தேவை இல்லாத கவலையா...
நான்தான் அதிகப்படியாக அதைப் பற்றிய
சிந்தனைகளை மனதில் போட்டுக் கொண்டு
என்னையே வருத்திக் கொண்டிருக்கிறேனா ?
எனக்குள்ளேயே எப்போதும் ஒரு போராட்டம்
நிகழ்ந்து கொண்டே இருக்கும்.
தீர்வுதான் கிடைத்தபாடில்லை.

இன்றும் அப்படித்தான் காலையில் அலுவலகம்
புறப்படும் முன்னர் வெளியில் வந்து
பைக்கைத் துடைத்துக் கொண்டிருந்தேன்.

எதிர் வீட்டு அண்ணி அலுவலகத்திற்குச்
 செல்ல வீட்டைவிட்டு வெளியே 
 வந்தவர்கள் என்னைப் பார்த்ததும்
"என்ன கொழுந்தனாரே இன்னும்
புறப்படலியா? " என்று கேட்டுவிட்டார்கள்.

"புறப்பட்டுகிட்டுத்தான் இருக்கிறேன் "
என்று சிரித்துக் கொண்டே 
சொல்லிவிட்டு திரும்பினேன்.
வாசலில் ....பூரணி முறைத்துப்
பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள்.

"என்ன பூரணி சாப்பாடு 
எல்லாம் எடுத்து வச்சுட்டியா...?
சீக்கிரம் புறப்படணும்... "
என்றபடியே வீட்டுக்குள் சென்றேன்.

அதற்குள் கையில் இருந்த 
கரண்டியை அப்படியே வீசிவிட்டு
சமையலறைக்குள் போய் நின்று கொண்டாள்.
சற்று நேரத்தில் பாத்திரங்கள் எல்லாம்
சத்தம் போட ஆரம்பித்தன.
எனக்கு பல்ஸ் எகிற ஆரம்பித்தது.

ஆனாலும் கட்டுப்படுத்திக் கொண்டு மெதுவாக
சமையலறையை எட்டிப் பார்த்தேன்.
என்னைப் பார்த்ததும் பூரிக்கட்டையால் 
தன் மண்டையிலேயே டங்கு டங்கு என்று
அடித்துக் கொண்டாள்.

 மெதுவாக கட்டையைப் பிடுங்கலாமா
  என்று நினைத்தேன்.
  இப்போது நான் ஏதாவது செய்யப் போக
  அது ஏடாகூடாவாகிடக் கூடாதே 
  என்ற பயத்தில் மௌனம் காத்து
  அப்படியே  நாற்காலியில் உட்கார்ந்தேன்.
  
 சற்று நேரத்தில் வீடு மயான அமைதியானது.

இன்று மட்டுமல்ல ...நெடுநாட்களாக
வீட்டில் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது.

இது ஒருவிதமான 
மனநோயாக இருக்குமோ என்று
எனக்குள் ஒரு ஐயம் உண்டு .
ஆனால் எதையும் வெளியில் காட்டிக்
கொள்வதில்லை.

ஒருநாள் இப்படித்தான் வெளியில் போகும்போது
தூரத்து உறவுப் பெண் ஒருத்தியைப் 
பார்த்தேன்.
வீட்டிற்கு வாயேன் என்று அழைத்தேன்.
அவளும் என் கூடவே 
வீட்டிற்கு வந்து விட்டாள்.

வீட்டிற்கு வந்ததும் பூரணிக்கு  அவளை
அறிமுகம் செய்து வைத்தேன்.
அந்தப் பெண் என்னோடு பழைய 
நினைவுகளை எல்லாம் பகிர்ந்து சிரித்துப்
பேசிக் கொண்டிருந்தாள்.
எனக்கு இன்று என்ன
ஆகப்போகிறதோ என்று ஒரு பயம்
தொற்றிக் கொண்டது.

அந்தப் பெண் போனதுதான் தாமதம்..
சற்று எல்லை மீறிப்போய்
தன் தலையைச் சுவற்றில் முட்டிக்
கொண்டாள்.ரொம்பவுமே பயந்து
போய்விட்டேன்.
இன்னும் என்னவெல்லாம் நடக்கப்
போகிறதோ என்று தனக்குள்ளேயே
 புலப்ப ஆரம்பித்தாள்.

எந்தப் பெண்ணிடம் நான் பேசினாலும்
உடனே பூரணி உணர்ச்சிவசப்பட்டு
இப்படித்தான் நடந்து கொள்வாள்.

இப்படியே விட்டுவைத்தால் ....
எப்படியாவது ஒரு மனநல மருத்துவரிடம்
பூரணியை அழைத்துச் சென்று வர வேண்டும்
என்று நினைத்தேன்.

தெரியாத்தனமாக பூரணியிடம் "மனநல 
மருத்துவரைப் போய்
 பார்த்து வருவோமாம்மா"
என்று கேட்டு விட்டேன்.

அவ்வளவுதான் இதே கத்தலும் ....
கண்டதையும் தூக்கி வீசலுமாக வீடே
ரண களப்பட்டுப் போனது.
 
 அதன் பின்னர் மருத்துவர் ...மருத்துவமனை
என்ற எந்த பேச்சுமே ...
மறந்தும் என் வாயில் வருவதே இல்லை.

ஆனால் எப்போதும் அவளைக் கண்டால்
எனக்குள்  ஒரு பயம் 
இருந்து கொண்டே இருக்கும்.

எப்போதும் ...என்ன நடக்குமோ 
என்ற கவலையில் என்னால் 
பூரணியோடு சகஜமாக
பேசமுடிவதில்லை.
நான் மட்டும் இருந்திருந்தால் என்றோ
 கழட்டிவிட்டுவிட்டு
ஓடப் பார்த்திருப்பேன்.

கூடவே இரண்டு குழந்தைகள் 
இருக்கின்றனவே 
அவர்களை என்ன செய்வது?

அவர்கள் எதிர்காலம் குறித்த 
அச்சம்தான் என்னை
முன்னும் பின்னும் 
நகரவிடாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.

இப்படித்தான் ஒருநாள் என் நண்பன் பாலன் 
தன் மனைவியோடு
என் வீட்டிற்கு வந்திருந்தான்.
பாலன் மனைவி எந்தவித சங்கோஜமும்
இல்லாமல் எல்லோரிடமும் பழகக் கூடியவள்.

நன்றாக சிரித்துப் பேசுவாள்.
நாங்கள் மூவரும் பேசிக்கொண்டிருந்தோம்.
மெதுவாக வந்து எட்டிப் பார்த்தவள்
காபி கொண்டு வரவா என்று பவ்வியமாகக்
கேட்டாள்.
 நானும் "சிஸ்டர் நீங்க என்ன சாப்பிடுவீங்க....
காபியா....ஆர்லிக்சா....விளையாட்டாக
கேட்டுவிட்டேன்.
"நீங்க கேட்டதே  ஆர்லிக்ஸ் குடித்த மாதிரிதான்
இருக்கிறது "என்று ஜோக் 
அடித்துச் சிரித்துக் கொண்டிருந்தார்.

சற்று நேரத்தில் பாத்திரக் கடையில் 
யானை புகுந்தது போன்ற 
சத்தம் கேட்க ஆரம்பித்தது.

ஐயையோ.. வேதாளம் முருங்கை மரம்
 ஏறிவிட்டது.
இப்போது என்ன நடக்கப் போகிறதோ 
ஒரு பயத்திலேயே உட்கார்ந்திருந்தேன்.

முதலில் எதையுமே கவனிக்காததுபோல 
இருந்த பாலன் மறுபடியும்
மறுபடியும் என் முகத்தையே உற்றுப் பார்த்தான்.

நான் எதுவுமே நடக்காததுபோல
போலியாகச் சிரித்துக் கொண்டிருந்தேன்.

சற்று நேரத்தில் நண்பனும் அவன் மனைவியும் 
எதுவுமே கேட்காமல் விடைபெற்றுச் சென்றனர்.

மறுநாள் அலுவலகத்தில் மதிய இடைவேளை.
"வா.. வெளியில் போய் சாப்பிடலாம்"
என்று அழைத்தான் பாலன்.

"நான் வீட்டிலிருந்து மதிய உணவு கொண்டு 
வந்திருக்கிறேன்.
நீ போயிட்டு வா. ...நான் வரவில்லை" என்று
முதலில் மறுத்தேன்.

"ஒருநாள் சாப்பிடாமல் திருப்பிக்கொண்டு 
போனால்
என்ன ஆகப் போகிறது ? "என்றான் பாலன்.

"மனைவி சாப்பாட்டை வீணாக்கினால்
திட்டுவாடா "என்று பேச்சு வாக்கில்
மனைவி என்று சொல்லி விட்டேன்.

இதற்குத்தான் காத்திருந்தேன் என்பதுபோல
கபக்கென்று பிடித்துக் கொண்டான் பாலன்.

"மனைவி மீது ரொம்ப  பயமோ? "
மெதுவாகக் கொக்கிப் போட்டான்.

"அப்படி ஒன்றுமில்லை...எனக்கும்
 உணவை வீணாக்குவதில்
உடன்பாடு இல்லை "என்றேன் எதார்த்தமாக.

"சும்மா பீலா உடாதே...
நீ திருமணத்துக்கு முன் வீட்டிலிருந்து
கொண்டுவரும் சாப்பாட்டை திறந்து
பார்க்காமலேயே
அப்படியே திருப்பிக் கொண்டு போனதை 
அவ்வளவு சீக்கிரமாக நான்
மறந்திருப்பேன் என்று நினைக்கிறாயா?"
..என்று விடாமல் துரத்திப் பிடித்தான்..

எவ்வளவோ நழுவிப் பார்த்தேன்.
அவன் விடுவதாகத் தெரியவில்லை.

இறுதியில் ஒத்துக்கொள்ள வேண்டியதாயிற்று.
மதிய உணவு சாப்பிட இருவரும்
வெளியில் சென்றோம்.
அப்போதுதான்" நான் உன் வீட்டிற்கு வந்த 
அன்றே கேட்க வேண்டும்
என்று நினைத்தேன்.
சரி..இப்பவாவது சொல்லு...உனக்கும்
உன் மனைவிக்கும் என்ன பிரச்சினை ? "
நேரடியாகவே கேட்டுவிட்டான்.

அதற்கு மேலும் என்னால் 
உண்மையை மறைக்க முடியவில்லை..
வீட்டில் நடப்பவற்றை அவனிடம் 
அப்படியே கொட்டித் தீர்த்தேன்.

எனக்கு கொஞ்சம் பாரத்தை இறக்கி 
வைத்துவிட்டது போன்று இருந்தது.

அவன் என்ன சொல்லப்போகிறான்
என்று அவன் முகத்தையே 
பார்த்துக் கொண்டிருந்தேன்.

பாலன் கொஞ்ச நேரம் அப்படியே 
அமைதியாக இருந்தான்.
ஏதோ யோசிப்பதுபோல இருந்தது.

"இது வேறு ஒன்றுமில்லடா..."
சாதாரணமாகப் பேச்சைத்
தொங்கினான்.

"உன் மீதுள்ள அபரிமிதமான 
அன்புதாண்டா அவளை இப்படிச்
செய்ய வைக்குது.
நீ வேறு எந்தப் பெண்கூட பேசினாலும்
அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
நீ அவளை இப்படியே விட்டுவிட்டால் ....
ஒருநாள் உன் மனைவி 
பெரிய மனநோயாளியாக
மாறிவிட வாய்ப்பு இருக்கு..."
என்று பெரிய குண்டாகத் தூக்கிப் போட்டான்.

ஏதாவது ஆறுதல் சொல்வான் என்று
எதிர்பார்த்த எனக்கு அப்படியே 
தூக்கிவாரிப் போட்டது.

கை கால்கள் எல்லாம் நடுங்க
ஆரம்பித்தது.
மனசுக்குள் ஒரு படபடப்பு.
பதட்டத்தோடு ஒரு சிறு குழந்தையைப் போல
பாலனின் கைகளைப் பிடித்தேன்.

"கூல்....கூல்....பதட்டப்படாதடா....இது ஒன்றும்
அவ்வளவு சீரியசான மேட்டர் இல்ல..
உடனே ஒரு மனநல மருத்துவரைப் போய்ப்
பார்த்தோம் என்றால்
எல்லாம் சரியாயிடும் "என்று 
 நான் இருக்கிறேன். பயப்படாதே என்பதுபோல
 தோளில் தட்டிக் கொடுத்து
தைரியமாக இருடா என்று ஆறுதல் கூறினான்.
 
எனக்குப் பாலனின் தோளில் சாய்ந்து
ஓவென்று அழ வேண்டும்போல் இருந்தது.

"எத்தனையோ முறை கேட்டுப் பார்த்துட்டேன்.
எனக்கு ஒன்றுமில்லை.
என்னை கிறுக்கு என்று சொல்றீகளா ..."
என்று கத்த ஆரம்பித்துவிடுவாள்
என்று சொல்லத்தான் நினைத்தேன்.

எப்படித்தான் நண்பனாக இருந்தாலும்
மனைவியைப்  பற்றி அதிகப்படியாக
நண்பனிடம்  சொல்ல சற்று
கூச்சமாகத்தான் இருந்தது.

வாய்வரை வந்த வார்த்தையை அப்படியே 
வாய்க்குள் போட்டு அமுக்கிக்
கொண்டேன்.

 இருவரும் மறுபடியும் அலுவலகத்திற்கு வந்து
இருக்கையில் அமர்ந்தோம்.

நினைவு முழுவதும் பூரணியைச்
சுற்றிச் சுற்றியே ஓடிக் கொண்டிருந்தது.

இப்படியே விட்டால் இதற்குத் தீர்வுதான்
என்ன?
வெளியில் தெரிந்தால் ஒரு மனநோயாளியோடு
குடும்பம் நடடுத்துகிறான் என்று சிரிப்பார்களே
அதனால்தான் கூடுமான மட்டும் 
அவளை வெளியில்
கூட்டிப் போவதைத் தவிர்த்து விடுவேன்.

வெளியில் போகவில்லை
 என்றால் மன இறுக்கம்தான்
அதிகமாகும் என்பது எனக்குத் தெரியும்.

பொது இடங்களில் இப்படி நடந்து கொண்டால்...
என் சிக்கல் யாருக்குத் தெரியப் போகிறது.
தீர்ப்பதுதான் எப்படி என்று
தெரியவில்லை...

நெஞ்சுக்குழிக்குள் ஏதோ உருளுவது போல்
இருந்தது.

என்ன பாவம் பண்ணினேன் எனக்குள்ளே
கேட்டுக் கொண்டு உள்ளுக்குள்
அழுது கொண்டிருந்தேன்.

தன் இருக்கையில் இருந்தே என்
மனவோட்டத்தைத் தெரிந்து கொண்ட 
நண்பன் மறுபடியும் அருகில் வந்து,
"சரிப்பா ...ஒன்றுக்கும் ஒரி பண்ணிக்காத...
என்ன செய்யலாம் என்று பார்ப்போம்."
என்றுஅப்போதைக்கு  அந்தப் பிரச்சனைக்கு
முற்றுப்புள்ளி வைத்துவிட்டு
 "வேலையைப் பாரு "என்று
கையில் ஒரு பைலைக் கொடுத்துவிட்டுச்
சென்றான்.

"என்ன இரண்டு பேரும் எஸ்கேப் ஆகிட்டீங்க..."
வலுக்கட்டாயமாக வம்புக்கு வந்தார்
அலுவலகத்தில் உடன் வேலை பார்க்கும் சித்ரா.

"ஏன் கூப்பிட்டால் வந்திருப்பீர்களாக்கும்"
என்றான் பாலன்.

"ஏன் உங்க கூட வருவதற்கு என்ன... 
சொல்லி இருந்தால்
நானும் வந்திருப்பேன்...
எனக்கும் இன்று சாப்பாடு சரியில்ல..
வெறும் பிரட்தான் கொண்டு வந்தேன்."
என்று சம்மன் இல்லாமலேயே ஆஜராகி 
முழு வாக்குமூலத்தையும் அளித்துவிட்டு
சிரித்தார் சித்ரா.

"ஏதாவது வாங்கி வரவா?"
கரிசனையாகக் கேட்டு நானும் பேச்சில்
அவர்களோடு இணைந்து கொண்டேன்.

"வேண்டாம்...உங்க வயிறு நிறைந்ததுவே
 என் வயிறு நிறைஞ்ச
மாதிரிதான்.." என்று சொல்லிவிட்டு
ஏதோ பெரிய ஜோக் அடித்ததுபோல
கலகலவென்று சிரித்தாள் சித்ரா.

சித்ராவின் சிரிப்பு அலுவலக ஊழியர்களின்
கவனத்தை எங்கள் பக்கம் திருப்பியது.

எங்கள் பக்கத்து வீட்டு தங்கப்பன்
என்னை முறைத்துப் பார்த்ததும் 
எனக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது.
தலை கவிழ்ந்து வேலை பார்ப்பதுபோல
பைலுக்குள் கண்களை மேய விட்டேன்.

இப்போதும் சித்ரா பக்கத்தில்தான் 
நின்று கொண்டிருந்தார்.

சித்ரா என் பக்கத்தில் நிற்கிறார் என்ற
நினைப்பு எனக்கு உள்ளுக்குள் ஒரு
சிலிர்ப்பைக் கொடுத்தது.

சித்ராவைப் போன்ற மனைவி மட்டும்
எனக்குக் கிடைத்திருந்தால்...
முதல்முறையாக சித்ராவை ஒரு
ஏக்கத்தோடு பார்த்தேன்.

சித்ராவைப் போல சகஜமாகப் பேசும்
மனைவி எனக்கு வாய்க்கவில்லையே ...
என்ற ஏக்கம் என் கவனத்தைச் சித்ரா பக்கம்
விழ வைத்தது.

என்றுமில்லாத திருநாளாக அலுவலகம்
முடிந்ததும் மறுபடியும் 
சித்ராவிடம் போய் நின்றேன்.

என்னை நிமிர்ந்து பார்த்த சித்ரா
"என்ன சார் இன்னும் கிளம்பலியா.."
என்றாள் அதே சிரிப்போடு.

"கிளம்பணும்...கிளம்பணும்...
பாலன் வரட்டுமே 
என்று காத்திருக்கிறேன்..."
பக்கத்தில் வந்து நின்றதற்கு 
இப்படி ஒரு பொய்யைச் சொல்லித்
தப்பித்து அங்கிருந்து  நகர்ந்தேன்.

வீட்டுக்கு வந்த பின்னரும் சித்ராவின்
சகஜமான பேச்சு என் மனசுக்குள்
மறுபடியும் மறுபடியும்
வந்து போனது.

 சித்ராவின் சிரிப்பும் பேச்சும் எங்கோ என் 
 ஆழ்மனதை ஆட்டிப் பார்த்துவிட்டது
 என்றுதான் சொல்ல வேண்டும்.
இல்லை என்றால் நினைவு எல்லாம்
ஏன் சித்ராவைச் சுற்றிச் சுற்றி
ஓடுகிறது.

"சீ..இது என்ன ...இப்போதுபோய் கண்ட கண்ட
 நினைப்பெல்லாம் வந்து..."
என்னையே நொந்து கொண்டு பிரேக்
போட பார்ப்பேன்.

ஆனாலும் மனசு என்ன நான்
சொன்னபடியா கேட்கிறது.
அப்பப்போ முரண்டு பிடிக்கத்தான்
செய்தது.

"சாப்பிட வாங்க...".மெதுவாக 
வந்து கூப்பிட்டாள் பூரணி.

"வேண்டாம் ...வயிற்று்க்கு சரியில்ல..."
பொய் சொல்லிக் கொண்டு 
சித்ரா நினைவை 
இடையில் கட் செய்துவிட முடியாமல் 
திரும்பிப் படுத்துக் கொண்டேன்.

"என்ன செய்யுது..சுக்குக் காபி 
போட்டுத் தரவா..."
அப்பாவியாகக் கேட்டாள் பூரணி.

"கொஞ்சம் தூங்க விடுறியா...
எரிந்து விழுந்தேன் "

சற்று நேரம்வரை எந்த சப்தமும்
இல்லை.

திடீரென்று ஒரு விசும்பல்....
மெதுவாக திரும்பிப் பார்த்தேன்.

அப்பாவியாக என்னையே பார்த்தபடி
தரையில் உட்கார்ந்து 
அழுது கொண்டிருந்தாள் பூரணி.
 
என்னைத்தவிர வேறு உலகமே 
தெரியாத அப்பாவி பூரணி.
அவளுக்கு உலகமே இந்த வீடும் நானும் 
குழந்தைகளும்தான்.
பூரணியைப் பார்க்கவே பாவமாக இருந்தது.
இந்தப் பூரணிக்குப்போய்....
 சே...சே....என் மேலேயே 
எனக்கு வெறுப்பாக இருந்தது.

மெதுவாக போய் பூரணியின்
கையைப் பிடித்தேன்.
அதற்குள் பொலபொலவென்று
கண்ணீர் உகுத்தபடி 
"என்னைப் பிடிக்கலியா...
என்றாள் அப்பாவியாக..

"சீ...போடி அசடு உன்னைப் பிடிக்காமல்
வேறு யாரைப் பிடிக்கப்போகிறது..."

"அப்புறம் ...வேறு
எந்த பெண்ணையும்...."

" நினைக்கவே மாட்டேன்.... போதுமா...
சரி....சாப்பிட்டியா..."

"இல்லை....நீங்க சாப்பிட்ட பின்
சாப்பிடணும் "

"வா...சோறு போடு இருவரும் 
சாப்பிடுவோம் "என்றபடி
பூரணி முகத்தைப் பார்த்தேன்.

"அப்படிப் பார்க்காதீங்க...வெட்கமாக
இருக்கிறது.."என்று கையால் முகத்தை
 மறைத்தாள்.
முதல் நாள் பார்த்த அதே வெட்கம்
பூரணியிடம் அப்படியே இருந்தது.

அதே வெகுளித்தனம்...
பூரணி இன்னும் மாறவில்லை.
நான்தான் மாறிவிட்டேன்.
பூரணி மனநோயாளி அல்ல....
மனசு பூரா என்னையே ....என்னை 
மட்டுமே நினைத்துக்
கொண்டிருக்கும் ஒரு அப்பாவி
என் பூரணி.


 


 

 

Comments

Popular Posts