பொறுமை கடலினும் பெரிது

 பொறுமை போராளிகளின் பலம்
"நேரமும் பொறுமையுமே போராளிகளின் பலம் "
என்றார் டால்ஸ்டாய்.

உங்கள் திறமையை வெற்றியாக 
மாற்றிக் கொடுக்க உதவுவது உங்கள்
பொறுமை மட்டுமே.

பொறுமையாக உழைப்பைக் கொடுத்துக்
கொண்டே இருக்க வேண்டும்.

பொறுமை உடையவன் என்ன சாதிக்க வேண்டும்
என்று நினைக்கிறானோ அதை சாதிக்காமல்
ஓயமாட்டான்.

ஒரு வெற்றியை நோக்கிப் பயணிக்கும்போது
இடையில் பல இடையூறுகள் வரலாம்.

நதிபோல நாம் எல்லாத் தடைகளையும்
தாண்டி ஓடிக் கொண்டே இருக்க வேண்டும்.
அப்போதுதான் நாம் போய்ச் சேர வேண்டும்
என்று நிர்ணயித்து வைத்துள்ள
இலக்கை அடைய முடியும்.

பொறுமையும் காத்திருப்பும் 
உழைப்பவரோடு கூட்டு சேர்ந்து கொண்டால் 
வெற்றியை எவராலும் தடுத்து 
நிறுத்திவிட முடியாது.

பொறுமைக்கு நல்ல எடுத்துக்காட்டாக
சீனாவில் வளரும் ஒருவகையான மூங்கில்
செடியைக் கூறுவர்.

சீன மூங்கில் செடியானது 
நட்டதுமே விறுவிறுவென்று
வளர்ந்துவிடாது.

என்னதான் உரம் போட்டுத் தண்ணீர் ஊற்றி
வளர்த்தாலும் வளர்வேனா என்று
அடம் பிடிப்பதுபோல அப்படியே வளராமல் நிற்கும்.
நான்கு ஆண்டுகள் செடியில் பெருமளவிலான 
எந்தவித  வளர்ச்சியும் தென்படாது.

ஆனால் நம் கண்ணுக்குத் தெரியாமல்
பூமிக்கு அடியில் தன் வேர்களைப் பரப்பி 
அது தன்னை உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கும்.
இப்படி நான்கு ஆண்டுகள் பொறுமை
காத்து நின்ற செடியானது
அடுத்த ஒரே ஆண்டில் கடந்த ஆண்டு நாம்
பார்த்த மூங்கிலா இது என ஆச்சரியப்படும்
விதத்தில் சடசடவென 
அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கும்.

இது எப்படி சாத்தியமாயிற்று? என நம்மைத்
தலை நிமிர்ந்துப் பார்க்க வைக்கும். 
சாதாரண உயரமல்ல.
எண்பது அடிவரை உயரமாக வளர்ந்து நிற்கும்.
ஒரே ஆண்டில் இவ்வளவு உயரமா ?
வியப்பாக இருக்கிறதல்லவா!

ஒவ்வொரு உயிரும் ஏதோ ஒரு மாறுபட்டத்
தகவமைப்பும் தன்மையும் கொண்டிருக்கும்.
இது இயற்கை அவற்றிற்குக் கொடுத்தக்
கொடையாகக் கூட இருக்கலாம்.

இந்த மூங்கிலும் இயற்கையாகவே
சில தன்மைகளைப் பெற்றிருக்கிறது.

முதல் நான்கு ஆண்டுகள் பொறுமையாக
தன்னை நிலைப்படுத்திக் கொள்ள
முயற்சி செய்கிறது.
இனி எவ்வளவு உயர்ந்தாலும் 
தன்னால் தலை நிமிர்ந்து
நிற்க முடியும்.
புயலோ பெருங்காற்றோ தன்னைப்
புரட்டிப் போட்டுவிட முடியாது .

அப்படி ஒரு உறுதியான அடித்தளமிட்ட
பின்னர் தனது வளர்ச்சியை முடுக்கி விடுகிறது.
இந்த அசாதாரண வளர்ச்சியின் பின்னால்
அதுவரை நிலத்திற்கு அடியில் யாருக்கும்
தெரியாமல் நடைபெற்றுக் கொண்டிருந்த
உழைப்பு உள்ளது.
இந்தப் பொறுமையோடு நடைபெற்ற உழைப்பு
 மூங்கிலை நோக்கி
அனைவர் கண்களையும் ஈர்க்கிறது.

பொறுமையும் உழைப்பும்  எவ்வளவு 
உயரம் வரையும் கொண்டு செல்லும்
என்பதற்கு இது நல்ல எடுத்துக்காட்டாகும்.

"ஆக்கப் பொறுத்தவன் ஆறப்
பொறுக்க வேண்டும்."

பொறுமை கடலினும் பெரிது.

 ஒருமுறை ஒரு பெரியவரைப்பார்த்து
 ஒரு மூர்க்கன் தாறுமாறாகத்
 திட்டிவிட்டான்.
அதனைக் கேட்ட அப்பெரியவர் எந்தவித 
 சலனமுமில்லாமல் சிரித்துக்
 கொண்டே இருந்தார்.

நான் இவ்வளவு திட்டியும் இந்த மனிதருக்கு 
கோபமே வரவில்லையே  என்று
மறுபடியும் அவமானப்படும்படியான
தகாத சொற்களால் திட்டினான்.

அதற்கும் பெரியவர் சிரித்துக் கொண்டார்.

 " நான் இவ்வளவு திட்டியும்
 நீங்கள் சிரித்துக் கொண்டே இருக்கிறீர்கள்.
  உங்களுக்கு  சூடு சொரணையே இல்லையா?  "
 என்றான் மூர்க்கன்.
 
 அதற்கும் அந்தப் பெரியவர் சிரித்துக்
 கொண்டார்.
 இப்போது இந்த மனிதரிடம் பேசிப் பயனில்லை
 என்பதுபோல வந்த வழியே 
 திரும்பிச் செல்லத் தொடங்கினான் .
 
 தம்பி ! அன்பாக அழைத்தார் பெரியவர்.

 திரும்பிப் பார்த்தான் மூர்க்கன்.
 
" நீ கொண்டு வந்த பொருளை 
 விட்டுவிட்டுச் செல்கிறாயே..."
என்றார் பெரியவர்.
"நானா...நான் ஒன்றுமே கொண்டு
வரவில்லையே" என்றான்.

" உன்னோடு எடுத்துவந்த உனக்கு உரிய
 பொருளை
நீ இங்கே இறக்கி வைத்தாய்.
அவற்றை நீயே எடுத்துச் செல்" என்றார்
பெரியவர் பொறுமையாக. 

 " எனக்கு உரிய பொருளா? ...
 அங்கேயும் இங்கேயும் திரும்பிப் பார்த்துவிட்டு
 நான் ஒன்றுமே கொண்டு வரவில்லையே"
 என்றான் மறுபடியும்.
 
" நீ கொடுத்த சொற்கள் எதையுமே நான் எடுத்துக்
 கொள்ளவில்லை. நீ கொட்டியவற்றை
 நான் எடுத்துக் கொள்ளவில்லை என்றால்
 அவை உனக்குரியதாகத்தானே இருக்கும்."
 என்றார் பெரியவர் நிதானமாக.
 
கலவரத்தோடு பெரியவரின் முகத்தைப்
பார்த்தான்.

 பெரியவர் சொன்னதில் உள்ள 
 அர்த்தம் புரிய ஆரம்பித்தது.

  அவமானத்தால் முகம் 
 சுண்டிப் போயிற்று.
 அப்படியே பெரியவர் காலில்
 விழுந்து மன்னிப்பு  கேட்டுக் கொண்டான்.
 
இதுதாங்க பொறுமைக்குக் கிடைத்த வெற்றி.

"ஒறுத்தாருக்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ் "

என்றார் வள்ளுவர்.

அப்படி எதற்குப் பொறுத்துப் போக வேண்டும்?
என்பவர்களுக்கு காலம் முழுவதும் புகழ்
வேண்டுமா? 
பொறுமையாக இருங்கள் என்று
பதிலளிக்கிறார் வள்ளுவர்.

பொறுமையால் மட்டுமே நிலைத்தப்
புகழைப் பெற்றுவிட முடியும்.

பொறுமை இல்லாததால் வெற்றிக்கு
அருகில் வந்தும் தமது இலக்கை 
அடைய முடியாமல் போய்விடும் சூழல்
ஏற்பட்டு கோப்பையைத் 
தவற விடுபவர்களை நாம் கண்கூடாகக்
காண்கிறோம்.

இன்னும் எவ்வளவு நாள் காத்திருப்பது? 
என்ற சலிப்பு  நம்மைப் பின்வாங்க வைக்கிறது.

மரத்தை நட்டுவிட்டு மறுநாளே 
கனியை எதிர்பார்க்க முடியுமா ? 
கனி வரும் வரை காத்திருக்க வேண்டுமல்லவா!

"பொறுமையை இழப்பது என்பது
போரில் தோற்றதற்கு ஒப்பானது"
என்பார் காந்தியடிகள்.

பொறுமை இழந்துவிட்டால் நாம்
எதிரிகளிடம் தோற்றவர்கள் 
ஆகிவிடுவோம்.
நாம் தோற்பதும் ஜெயிப்பதும்
நம் கையில் மட்டுமே உள்ளது.

ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.

வலிமையும் உணர்ச்சியும் சாதித்ததைவிட
பொறுமையும் நிதானமும் சாதித்தவைதான்
அதிகம்.

சாதிப்பவன் ஆத்திரப்படுதில்லை..
ஆத்திரப்படுபவன் சாதித்ததில்லை.

Comments

Post a Comment

Popular Posts