பொங்கலும் வாழ்த்து அட்டையும்

 பொங்கலும் வாழ்த்து அட்டையும்


கரும்பு இல்லா பொங்கலும்
வாழ்த்து அட்டை இல்லா
பண்டிகையும்  இனிமை தராது.

பண்டிகை என்றாலே கூடவே
நினைவுக்கு வருவது அள்ளித் தெளித்துவிடும்
கோலமென அங்கங்கே காட்சி தரும்
அலங்கரிப்போடு கூடிய வண்ண வண்ண 
வாழ்த்து அட்டைதாங்க...

வாழ்த்துச் சொல்லும் வழக்கம் இன்று
நேற்று ஏற்பட்டதல்ல.
பொதுவாகவே தமிழ் என்றால் வாழ்த்து
இல்லாமல் இருக்காது.

வாழ்த்து இல்லாமல் காப்பியங்கள்
படைக்கப்படவில்லை.
ஏன் இலக்கண நூல்கள்கூட வாழ்த்து
இல்லாமல் தாங்கள் சொல்ல வந்த கருத்தைச்
சொல்லியதில்லை.

வாழ்த்து என்பது இறைவணக்கமாக இருக்கலாம்.
மொழி வாழ்த்தாக இருக்கலாம்.

ஏன் இயற்கையை வாழ்த்துவதாகக்கூட
இருக்கலாம்.

வாழ்த்தோடுதான்  நாம் எந்தச் செயலையும்
தொடங்குகிறோம்.

வணக்கமும் வாழ்த்தும் இல்லாமல்
தமிழும் இல்லை. தமிழர் பண்பாடும் இல்லை.

வாழ்த்துவதிலும் வகை வகையாக
வாழ்த்துவது நமக்குக் கைவந்த கலை.

புலவர்கள் அரசர்களை
வார்த்தையால் தோரணம் கட்டி
வாயார வாழ்த்தி மகிழ்ந்திருப்பர்.

அதை வாசித்து..., கேட்டு ...மகிழ்ந்து...
வளர்ந்து வந்தவர்கள் நாம்.
நமக்கு மட்டும் வாழ்த்துச் சொல்ல யாரும்
சொல்லித் தரவா வேண்டும்?
எல்லாவற்றையும் வாழ்த்தும் நாம்
பொங்கலை மட்டும் விட்டு வைப்போமா என்ன ?

பொங்கல் என்றதும் வாழ்த்து அட்டைகள்
எழுதி அனுப்பிய காலம்தான் நினைவுக்கு
வருகிறது.

உங்களுக்கு மட்டுமா...எங்களுக்கும்தான்
என்று உள்ளுக்குள்ளேயே நீங்கள் பூரித்துப்
போகும் காட்சியை என்னால் காண முடிகிறது.

பொங்கல் வாழ்த்து எழுதி அனுப்புவதே
தனி கலைதாங்க...
பொங்கலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு இருந்தே
வார்த்தைகளைத் தேடித்தேடி எழுதிப் பார்ப்போம்.

முரண்டு பிடித்து அடம்பிடிக்கும்

வார்த்தைகளைப் பிடித்து வந்து

கவிதை என்று தெரியாமலே கவிதைக்கு

முட்டுக் கொடுத்து எழுதி இருப்போம்.

கன்னி முயற்சியாக இருந்திருக்கலாம்.

கன்னித் தமிழில் கவிதை எழுதி

கன்னம் கன்னிப்போகச் சிரித்த காலம்

வாழ்த்து எழுதி அனுப்பிய காலம்.

எத்தனை முறை அடித்தல் 

திருத்தல் அப்பப்பப்பா...

குறுகுறுவென்று விழித்து

சிறுசிறு குறும்புகள் செய்து

மறைத்து மறைத்து எழுதி

நம்மைப் பார்த்து தோழி காப்பி 

அடித்துவிடக் கூடாது என்று

மர்மம் காத்து வாழ்த்து எழுதி

படம் வரையத் தெரியாமல் ஏதோ

ஒன்றை வரைந்து....

வண்ணம் தீட்டி ...அழகு பார்த்து,....

பொங்கலை எந்தப் பக்கம் 

பொங்க விட வேண்டும் என்ற

பொது அறிவு இல்லாமல் கண்ட மட்டும்

சிந்திச் சிதறவிட்டு ...

வரைந்து அனுப்பிய பொங்கல் வாழ்த்து

அட்டை .....அனுப்பிய நாட்கள்

இன்றும் நம் நினைவில் 

பசுமையாய் வந்து போகும்.

பொங்கும் மகிழ்ச்சியோடு

பொங்கல் வாழ்த்து அனுப்பிய காலம்

மகிழ்ச்சியின் உச்சக் கட்டத்தில் இருந்த

பள்ளிப் பருவம்தாங்க....


ஆசிரியர் பொங்கல் வாழ்த்து

எழுதச் சொல்ல...

வார்த்தைகளைப் பொங்கவிட்டு

பக்குவமாய் சமைத்தவர்கள் ஒரு சிலர்.

தாறுமாறாக தத்தக்கா புத்தக்கா என்று

ஏதோ எழுதி அதை ஆசிரியர் வாசிக்க

ஒட்டு மொத்த வகுப்பும் கொல்லென்று

கொலைவெறியில் சிரிக்க...

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே....

நண்பனே...நண்பனே....நண்பனே...

இந்தநாள் அன்றுபோல் இல்லையே

அது ஏன் ...ஏன் ...நண்பனே...நண்பனே....

என்று பாடி புலம்பத்தான் முடிகிறது.


கல்லூரிக்குள் நுழைந்ததும் 

வாழ்த்து அட்டைத் தேர்விலும் பிறர்

வண்ணத்தையும் எண்ணத்தையும் நம்பி

வாழ்த்து அட்டைகளைத் தேர்வு செய்து

அனுப்பும் அளவுக்கு சோம்பேறியாக

மாறிப் போனோம்.

இல்லை...இல்லை...

மாற்றங்களுக்கு ஏற்ப நாமும்

வாழ்த்து அட்டை தேர்வு செய்து

அனுப்பும் நடைமுறைக்கு மாறிவிட்டோம்.

ஒருமணி நேரத்தில் வாழ்த்து அட்டைத் தேர்வு

முடிந்து மகிழ்ச்சி ஒரு மணி நேரமாக

குறுகிப் போயிற்று.

நண்பர்களுக்கு அனுப்பும் வாழ்த்து

அட்டையில் இன்னொருவர் கருத்து மட்டுமே

இருக்கும்.


அதுவும் காலப்போக்கில் மறைந்துபோய்

இன்று மின்னஞ்சல் அனுப்பும் காலத்திற்கு

வந்துவிட்டோம்.

இப்போது தேர்வு செய்து அனுப்பும்

பொறுமையையும் இழந்து விட்டோம்.

யாரோ அனுப்பிய பொங்கல் வாழ்த்தை

உலகம் முழுவதும் ஒரு நொடியில்

உலவ விட்டுவிட்டு அப்பாடா...பொங்கல்

வாழ்த்து அனுப்பியாயிற்று என்று

நிம்மதி பெருமூச்சு விடுகிறோம்.

மகிழ்ச்சியும் மணித்துளிகளுக்குள்

முடிந்து போயிற்று.


காலம் எவ்வளவு பெரிய மாற்றங்களைக்

கொடுத்திருக்கிறது பாருங்கள்.

காலத்தை மிச்சப்படுத்தித் தந்திருக்கிறது.

பெருமைப்பட வேண்டிய விசயம்தான்.

இல்லை என்று சொல்லவில்லை.

ஆனால் வாழ்த்து அட்டையை நமது தோழி

கையால் எழுதி  அனுப்பியிருப்பாள்.

அதைத் தபால்காரர்

எப்போது கொண்டு வந்து  தருவார் என்று 

வாசலிலேயே தவமாய்த் தவமிருப்போம்.

எட்டி எட்டிப் பார்த்து கண்பூத்துப் போகும் 

தருணத்தில் தபால்காரர் மிதிவண்டி

நம் தெருவுக்குள் நுழைய....

பின்னாலேயே மாணவர்கள் ஊர்வலமாக
வர...

இறுதியில் நம் கையில் வாழ்த்து அட்டையை

தபால்காரர் தருவார் பாருங்க... 

அப்பப்பா அந்தத் தருணம்....

அதைப் பிரித்துக்கூட பார்த்திருக்க

மாட்டோம்.கையில் வைத்துக் கொண்டு 

எனக்கு பொங்கல் வாழ்த்து வந்துருக்கு...

எனக்குப் பொங்கல் வாழ்த்து வந்திருக்கு

 என சொல்லிச் சொல்லி
பூரித்துப் போவோம் .

அதைப் பிரித்துப் படிக்கும்போது 

ஏதோ இங்கிலாந்து மகாராணியிடம் 

இருந்து வாழ்த்து வந்தது 

போன்றதொரு மகிழ்ச்சி.

அந்த மகிழ்ச்சிக்கு வேறு ஏதும் ஈடாகுமா....
அது மட்டுமா?

ஒரு தடவை வாசித்துவிட்டு

டெலிட் பண்ணுவது அல்ல வாழ்த்து.

வருடக் கணக்காக வந்த பொங்கல் வாழ்த்து

அட்டைகளை எல்லாம் பெட்டிக்குள்

துணிகளுக்குக் கீழே வைத்துப் பாதுகாத்து

அப்பப்போ வாசித்து வாசித்து மகிழ்ந்த காலம்

வாழ்த்து அட்டை காலம்.

ஞாபகம் வருதே!ஞாபகம் வருதே!

வாழ்த்து அட்டை

நினைவுகள் எல்லாம் 

கனவுகளாக...

கண்முன் வந்து  

இனிமையாக இன்பம் தருதே!


அவற்றை எல்லாம் இனி இந்த அவசர உலகில்

எப்போது காணப் போகிறோம் என்ற 

ஏக்கம் எனக்குள் எப்போதும் உண்டு.

இப்போது கொஞ்சம் கொஞ்சமாகப் பழைமைக்குத்

திரும்பி கொண்டிருக்கிறோம்.

காணாமல் போன வாழ்த்து அட்டை அனுப்பும் 

காலமும் திரும்புமா ?

காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.







Comments

  1. வாழ்த்து அட்டையின் மகத்துவம் அது மறைந்தபின் தான் நமக்கு புலப்படுகிறது.அதன் ஏக்கம் நம்மில் பலருக்கும் உண்டு.அந்த பொன்னான காலம் என்றுமே நம் நினைவிலிருந்து மறையாது.பொங்கல் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete

Post a Comment

Popular Posts