கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல்
கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல்
"உப்பு தின்னவன் தண்ணீர் குடிப்பான்;
தப்பு செய்தவன் தண்டனை அனுபவிப்பான்."
"அரசன் அன்று கொல்வான்;
தெய்வம் நின்று கொல்லும்."
இப்படி தப்பு செய்தவன் தண்டனை
பெற்றே தீருவான் என்று முன்னோர்கள்
சொல்லிச் சொல்லி நம்மை வளர்த்திருக்கின்றனர்.
எனக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை;
எதிரிக்கு இரண்டு கண்களும் போக வேண்டும்.
இப்படிப்பட்ட பொறாமை குணம் கொண்டவர்கள்தான்
இன்றைய சூழலில் அதிகம்.
பல பழமொழிகள் நமக்குத்தெரியும்.
ஆனால் சில பழமொழிகள்
நம்மைத் திரும்பிப் பார்க்க
வைக்கும்.
அப்படி என்னைத் திரும்பிப் பார்க்க
வைத்தப் பழமொழி,
" கண்ணுக்குக் கண்; பல்லுக்குப் பல்"
இது என்ன கண்ணுக்குக் கண் ;
பல்லுக்குப் பல் ...?
சற்று சிந்திக்க வைத்தது.
பதிலுக்குப் பதில் கொடுக்க வேண்டும்.
அடித்தவனுக்கு அதே அடியைத் திருப்பிக்
கொடுக்க வேண்டும்.
இதுதான் இந்தப் பழமொழியின் கருத்து.
இது சாத்தியப்படுமா?
இப்படிச் செய்வது நன்மையான செயலா?
என்று எண்ணத் தோன்றும்.
சரியோ ...தவறோ ..ஆனால் அப்படிச்
செய்தால்தான்
சில நேரங்களில் குற்றங்கள் குறையும்.
அப்படி இல்லை என்றால் தடி எடுத்தவன்
எல்லாம் தண்டல்காரன் என்றபடி
ஆளாளுக்கு கம்பைத் தூக்கிக் கொண்டு
புறப்பட்டு விடுவார்கள்.
அரசர்களுக்கு குடிமக்களைக் காக்கும்
பெரும் பொறுப்பும் கடமையும் உள்ளது.
அவர்கள் தண்டனைச் சட்டங்களைக்
கடுமையாக்கினால்தான் நாட்டில் குற்றங்கள்
குறையும் என்று சர்வாதிகார அரசு நம்பும்.
சில நாடுகளில் தண்டனைகள்
கடுமையாக கொடுக்கப்பட்டு வருவதை
நாம் இன்றும் கேள்விப்பட்டுக்
கொண்டிருக்கிறோம்.
நாமும்கூட சில குற்றவாளிகள்
செய்த குற்றங்களைப் பற்றிக்
கேள்விப்படும்போது இவர்களை எல்லாம்
நடுத் தெருவில் தூக்கிலிட வேண்டும்
என்று உணர்ச்சிப் பெருக்கால்
கொந்தளித்திருப்போம்.
இது எல்லா நாடுகளிலும் சாத்தியப்படாது.
"திருடனாய்ப் பார்த்துத் திருந்தாவிட்டால்
திருட்டை ஒழிக்க முடியாது" என்று நாம்
பழைய பாட்டையே பாடிக்
கொண்டிருக்கிறோம்.
அப்படி யாரும் திருந்த மாட்டார்கள்.
"கண்ணுக்குக் கண் ;
பல்லுக்குப் பல்"என்று தண்டனைகள்
இருந்தால்தான் குற்றங்கள் குறையும்
என்கிறார் ஒரு மன்னர்.
பேச்சில் மட்டுமல்ல. செயலிலும்
அதை நடைமுறைப்படுத்தி இந்தப்
பழமொழியைச் சொல்லும்போது எல்லாம்
தன்னை திரும்பிப் பார்க்க வைத்த
பெருமை
மெசபெடோமிய மன்னர்
ஹாமுராயிக்கு உண்டு.
இவர் தான் 1764 இல் அரியணைக்கு வந்ததும்
முதன் முதலாக தண்டனைச் சட்டங்களைக்
கடுமையாக்கி அரசாணை பிறப்பித்தாராம்.
அடித்தவருக்கு பதிலுக்கு திருப்பி அடி
கொடுத்தே ஆக வேண்டும்.
இதுதான் இவருடைய கோர்ட்டில் தீர்ப்பு.
பாலியல் குற்றம் ,திருட்டு, வழிப்பறி,
கொலை, கொள்ளை , ஊழல் இப்படி எல்லா
குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கும்
இவருடைய ஆட்சியில் மரண தண்டனைதான்.
கலப்படம் செய்தவர்களுக்கும் மரண தண்டனையாம்.
கலப்படத்துக்குமா.?...
ஏன் ஆச்சரியப்படுகிறீர்கள்....
கலப்படம் பெரிய குற்றம் இல்லையா?
அந்நாட்டு மக்கள் விரும்பி அருந்தும்
மது வான பீரில் கலப்படம் செய்தால்....
பொறுத்துக் கொள்ளவே மாட்டாராம்.
கலப்படக்காரரிடம் எந்தவித மறுகேள்வியும்
கேட்காமல் உடனே தூக்குத்
தண்டனை நிறைவேற்றிவிடுவார்.
அப்பாவை மகன் அடித்துவிட்டால்...
என்னதண்டனை என்று கேட்கிறீங்களா?
அதே திருப்பி அடித்தல்தான்.
எந்த இடத்தில் அடித்தாரோ அந்த இடத்தில்
அடிக்க வேண்டும். இதுதான் மகனுக்குக்
கொடுக்கப்படும் தண்டனை.
மருத்துவமனையில் மருத்துவரின் கவனக் குறைவால்
கத்தரிக்கோலை வைத்தேன்... பஞ்சை வைத்தேன்...
ஊசியை வைத்தேன்...
என்று சொல்லி தப்பிக்க முடியாது...
அதற்கும் தூக்குத் தண்டனைதானா....
என்று நினைப்பீர்கள்.
அதற்குத் தூக்குத் தண்டனை கிடையாதாம்.
இந்த விரல்களால்தானே தவறு செய்தாய்.
நீ இனி மருத்துவம் பார்த்ததுபோதும்
என்று விரல்களையே வெட்டச் சொல்லிவிடுவாராம்.
எம்மாடியோவ்...கொடுமையாகத் தெரியுதுல்ல...
பாதிக்கப்பட்டவர் அதைவிட கொடுமையை
அனுபவித்திருப்பாரே...
குற்றம் செய்தவருக்கு இவ்வளவு பெரிய
தண்டனை வழங்குகிறவர்
குற்றமே நடைபெறாமல் பாதுகாக்க வேண்டிய
பொறுப்பில் இருக்கும் காவலர்கள்
குற்றம் செய்தால் விட்டுவிடுவாரா என்ன...
ஒரு இடத்தில் திருட்டு வழக்கு பதிவு
செய்யப்பட்டால் ...
குறிப்பிட்ட காலத்திற்குள்
குற்றவாளியைப் பிடித்தே ஆக வேண்டும்.
இல்லையா ...காவலருக்குத் தண்டனை
வழங்கப்படும்.
பணியிலிருந்து ஓய்வு கொடுத்து
நீர் காவல் காத்தது போதும் என்று
நிரந்தர ஓய்வு கொடுத்து வீட்டுக்கு
அனுப்பி விடுவாராம்.
ஒருவரைத் தாடையில் குத்தி அவர்
பல்லை உடைத்துவிட்டால்...
தண்டனை பல் உடைப்புதான்.
உடைத்தவர் பல்லை உடைத்தே தீரவேண்டும்.
இனி யாராவது அடுத்தவர் பல்லை
உடைப்பார் என்கிறீங்க...
ஒருபோதும் நடக்காது.
குற்றங்கள் குறைந்து நல்லபடியாக
குடிமக்கள் அச்சமின்றி , மகிழ்ச்சியாக வாழ வேண்டும்.
அதற்காகத்தானே சட்டங்கள்.
நல்ல சட்டங்கள் நல்ல சமூகத்தை உருவாக்கட்டும்.
இவை எல்லாம் பொய்யாகப் புனையப்பட்ட
கதைகளாக இருக்கும் என்றுதானே நினைக்கிறீர்கள்.
அதுதான் இல்லைங்க...
இவையாவும் 1900 ஆம் ஆண்டு அகழ்வாராய்சியில்
கண்டெடுக்கப்பட்ட
கல்வெட்டில் உள்ளதாம்.
அந்தக் கல்வெட்டு பிரான்சின் லூவர் பொருட்காட்சி
சாலையில் இன்றும் காட்சிக்காக
வைக்கப்பட்டுள்ளதாம்.
"கண்ணுக்குக் கண்
பல்லுக்குப் பல் "
என்ற பழமொழியும் இத்தகைய சட்டங்களைப்
பற்றித் தெரிந்து கொண்டதால்தான்
சொல்லப்பட்டிருக்குமோ?
கண்டிப்பாக அதுதான் உண்மையாக இருக்கும்.
தண்டனை கடுமையாகவும் உடனுக்குடனும் கொடுக்கப்பட்டால் குற்றங்கள் குறைவது நிச்சயம்.கட்டுரையை ஆதாரத்துடன் பதிவிட்டது மிக அருமை.
ReplyDeleteNice
ReplyDelete