பிணியின்மை செல்வம் விளைவின்பம்....பிணியின்மை செல்வம் விளைவின்பம்...

"பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிவ் வைந்து "

                  குறள் : 738

பிணி _ நோய்
இன்மை _ இல்லாதிருத்தல்
செல்வம் _ பொருள் 
விளைவு _ விளைச்சல்
இன்பம் _ மகிழ்ச்சி
ஏமம் _ பாதுகாப்பு
அணி _ அணிகலன் , அழகு
என்ப _ என்று சொல்லுவர்
நாட்டிற்கு_ நாட்டுக்கு
இவ்வைந்து _ இந்த ஐந்தும்


நோயில்லாதிருத்தல், செல்வம் ,மிகுதியான விளைச்சல், 
மகிழ்ச்சியான வாழ்வு, நல்ல பாதுகாப்பு
ஆகிய இவை ஐந்தும் ஒரு நாட்டிற்கு அழகாகும்.


விளக்கம் : 

ஒரு நாட்டின் குடிமக்கள் அனைவரும் எந்தவித
நோய்நொடியும் இன்றி நிம்மதியாக வாழ்தல்
வேண்டும்.
நோயில்லா வாழ்க்கையே இன்ப
வாழ்க்கைக்கு அடிப்படையாக இருக்கும்.

அனைவர் கையிலும் தாராளமாக 
பணம் புழக்கம் இருந்து 
செல்வம் மிகுதியாக இருக்க வேண்டும்.
அப்போதுதான் நாட்டில் பசிப்பிணியோ
 வறுமையோ  இருக்காது.
பொருட்செல்வமும்  கல்விச் செல்வமும்
இருந்தால்தான் நாடு வளர்ச்சிப் பாதையை
நோக்கி செல்ல முடியும்.


 
வேளாண் தொழில்கள்மூலம் 
நல்ல விளைச்சல் கிடைக்க வேண்டும்.
அதனால் உழைப்பவர்க்கும் அதனை 
கொண்டு சேர்க்கும் வணிகர்களுக்கும்
நல்ல பலன் வந்து சேரும்.அதோடு மட்டுமல்லாமல்
உற்பத்திப் பொருட்கள் பெருக வேண்டும்.

இரண்டும் விளைவு என்றே கருத்தில்
சொல்லப்பட்டுள்ளது.

மக்கள் மனதில் அடிமைத்தனம்
இல்லா  நிறைவான மகிழ்ச்சி
குடி கொண்டிருக்க வேண்டும்.

நல்ல காவல் இருக்க வேண்டும்.
பசியும் பிணியும் இல்லாதிருந்து 
பகை இருக்குமானால் மகிழ்ச்சி தொலைந்து
போகும்.
பகைவர் அஞ்சும் வகையில் படையானது
பாதுகாப்பு அரணாக இருந்து செயல்பட வேண்டும்.
நல்ல பாதுகாப்பாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்
என்ற நம்பிக்கை எப்போதும்
மக்கள் மனதில் இருந்து 
கொண்டே  இருக்க வேண்டும்.
அப்போதுதான் குடிமக்கள் அச்சமின்றி
மகிழ்ச்சியாக வாழ முடியும்.

இப்படிப்பட்ட நாடுதான் மக்கள் வாழ்வதற்கு
உகந்த நாடு என்று அனைவராலும் 
விரும்பப்படும் அழகிய நாடாக இருக்கும்.

இந்த ஐந்தும் இருப்பதுதான் ஒரு நல்ல நாட்டிற்கு
அணி என்கிறார் வள்ளுவர்.

இதில் எது ஒன்று குறைபட்டாலும்
நாட்டு மக்கள் வாழ்வில் மகிழ்ச்சி
இருக்காது.

English couplet :

"A country's jewels are these five:unfailing health,
Fertility ,and joy, a sure defence and wealth"

Explanation :

Freedom from epidemics , wealth, produce, happiness
and protection to subjects, these five , the learned say, 
are the  ornaments of a kingdom.

Transliteration : 

Piniyinmai selvam vilaivinpam Emam
Aniyenpa Naattiv Vaindhu

Comments

Popular Posts