குணம்நாடிக் குற்றமும் நாடி....

குணம்நாடிக் குற்றமும் நாடி...

குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள்
மிகைநாடி மிக்கக் கொளல் 
                             குறள்  504

குணம் நாடி_ குணங்களை ஆராய்ந்து
குற்றமும் நாடி _ குற்றங்களையும் தேடி அறிந்து
அவற்றுள் _ அவற்றிற்கிடையே உள்ள
மிகை நாடி_ மிகுதியானவற்றை அறிந்து
மிக்க _      மிகுதியாக இருப்பனவற்றை
கொளல் _ கொள்க

ஒருவரது குணங்களையும் குற்றங்களையும்
ஆராய்ந்து அவற்றுள் எது மிகுதியாக
 உள்ளது என்பதை பகுத்து அறிந்த பின்னரே
 ஒருவரைப் பற்றிய 
 தெளிவான முடிவுக்கு வர வேண்டும்.

விளக்கம் :

நூறு விழுக்காடு நல்ல குணங்கள் உள்ளவர் இவர்
என்று எவரையும் சொல்லிவிட முடியாது.அதேபோல
நூறு விழுக்காடு குற்றம் மட்டுமே உடையவர்
என்றும் எவருமே இருக்க முடியாது.
எல்லாரிடமும் குணமும் உண்டு. 
குறைகளும் இருக்கலாம்.

 குறைகளைகளை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தால்
 நிறைகள் தெரியாது.
 நிறைகளை மட்டுமே பார்த்தால்
 குறைகள் கண்ணுக்குத் தெரிவதில்லை.

குணங்கள் என்னென்ன இருக்கிறது என்பதைத்
தனியாக ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
குற்றங்கள் என்னென்ன காணப்படுகிறது
 என்பதையும் ஆராய்ந்து பார்க்க வேண்டும்.
 முடிவாக குணமோ குற்றமோ எது மிகுதியாக
 உள்ளது என்பதைப் பகுத்தறிந்து அதன்படி
 ஒருவரைப் பற்றிய முடிவுக்கு வர வேண்டும்.
இதுதான் சரியான தேர்வாக இருக்கும்.

 மிகுதியாக நல்ல குணங்கள்  இருந்தால்
 தேர்வு செய்து கொள்ளலாம்.
 மிகுதியாக குற்றங்கள் இருந்து குறைவாக
 குணங்கள் இருந்தால் நிராகரித்து விடலாம்.

இது அரசனுக்கு மட்டுமல்ல.
நாமும் நல்ல நட்புகளைத் தேர்வு செய்யும்போது
இந்த நடைமுறையைக் கையாளலாம்.

எல்லோரிடமும் குணமும் இருக்கும்.
குற்றமும் இருக்கும். அவற்றின் அளவு
மட்டுமே மாறுபடலாம்.

ஒருசில நல்ல குணங்களைப் பார்த்துவிட்டு
ஒருவரை நல்லவர் என்று முடிவு
செய்து  விடாதீர்கள்.

சில குற்றங்களைக் கண்டு முற்றிலுமாக
 ஒருவரைத் தீயவர் என்று
 ஒதுக்கிவிடவும் வேண்டாம்.

நல்லதும் கெட்டதும் எல்லோரிடமும் இருக்கும்.
அவற்றுள் எது அதிகமாக உள்ளது என்று
ஆராய்ந்து அதன்படி ஒருவரைத்
தேர்வு செய்யும் பொறுப்பும்
கடமையும் நமது கையில்தான் உள்ளது
என்கிறார் திருவள்ளுவர்.

English couplet : 

"Weigh well the good of each, his failing closely scan
As these or those prevail, so estimate the man "

Explanation :

Let (a king )consider a man's good qualities ,   as well as his faults
and then judge of his character by that which prevails .

Transliteration  :

"Kunamnaatik kutramum Naati Avatrul
Mikainaati Mikka Kolal "

Comments

  1. இதில் பயின்று வரும் அணி

    ReplyDelete
    Replies
    1. சொற்பொருள் பின்வரு நிலையணி

      Delete

Post a Comment

Popular Posts