பார்கவி


                    பார்கவி


வானம் ஆசை தீர நீரை வாரி
இறைத்துக் கொண்டிருந்து.
தான் சேர்த்து வைத்திருந்த மொத்த நீரையும்
ஒரே நாளில் கொட்டித் தீர்த்துவிட வேண்டும்
என்று அடம்பிடித்து
அடாவடித்தனம் பண்ணிக் கொண்டிருந்தது
வானம்.
சடசடவென்ற மழையின் இரைச்சலைத்
தவிர வேறு எதுவுமே கேட்க முடியவில்லை.

அலுவலக சன்னல் வழியாக வெளியே
எட்டிப் பார்த்தாள் பார்கவி.
சாலை எங்கும் வெள்ளக்காடாக காட்சி அளித்தது.
ஓரிரு வாகனங்கள் மட்டும் தண்ணீரில்
தள்ளாடியபடி ஊர்ந்து கொண்டிருந்தன.

பாதசாரிகள் யாரும் கண்ணுக்கு எட்டிய
தூரம் வரை தென்படவில்லை.
வீட்டுக்கு எப்படிப் போவது?
மனசுக்குள்
பீதி வந்து ஆட்டம் காட்டியது.
ஆனால் வெளியில் எதையும்
காட்டிக் கொள்ளாதபடி மிடுக்காக
உட்கார்ந்திருந்தாள்.

மேசையின் மீது கிடந்த கோப்புகளை
எல்லாம் மூடி வைத்துவிட்டு
மழை குறைந்துவிட்டதா என்று மறுபடியும்
வெளியே எட்டிப் பாரத்தாள்.

மழை விட்டேனா பார் என்று மல்லுக்கட்டிக்
கொண்டிருந்தது.

பியூன் மானே
மெதுவாக வந்து" அம்மா... "என்றான்.

"என்ன..." என்பது போல தலையை
உயர்த்திப் பார்த்தாள் பார்கவி.
    
" அம்மா... ரயில் எல்லாம் நிப்பாட்டி
புட்டாகளாம்.... "தயக்கத்தோடு செய்தி
வாசித்துவிட்டுச் சென்றான்.

பிறகு வேறு எப்படி சொல்ல முடியும்?
பார்கவி என்றாலே அலுவலகத்தில்
அனைவரும் ஐந்து அடி எட்டி நின்றுதான்
பேசுவார்கள்.
சாதாரண பியூன் உரிமையோடு
வீட்டுக்குப் புறப்படுங்கம்மா....
என்று சொல்ல முடியுமா என்ன?

' ம்..என்றாளே தவிர  அதை ஒரு
பொருட்டாக எடுத்துக்கொண்டதாக
தெரியவில்லை.

ஒருமுறை பைலைக் கையில் கொடுக்கும்போது
கை தெரியாமல் கையில் பட்டுவிட்டது.
அவ்வளவுதான் காட்டுக் கத்தல் போட்டு
அலுவலகத்தையே கூட்டிவிட்டாள்.
தெரியாமல் நடந்துவிட்டது என்று எவ்வளவோ
சொல்லிப் பார்த்தான்.
ஒரு அதிகாரியிடம் எவ்வளவு தூரத்தில்
நின்று பேச வேண்டும் என்ற அறிவு
இல்லையா....
  என்று பாடம் எடுத்தவள் இந்தப் பார்கவி.
அன்று கூனிக்குறுகிப் போனவன்தான்.

இன்றுவரை அருகில் சென்று
விடுவதில்லை.

ஆண் ஊழியர்கள்கூட பார்கவியிடம்
பேசவே தயக்கம் காட்டுவர்.
எப்போது சிரிப்பாள்....
எதற்குக் கோபப்படுவாள் என்று எதுவுமே
கணிக்க முடியாத கடினமான கதாப்பாத்திரம்
இந்த பார்கவி.

ஆண் ஊழியர்கள் பார்கவியைப்
பெரிதாகக் கண்டு கொள்வதில்லை.

முடிந்த மட்டும் பார்கவியோடு
பேசாமல் இருக்கவே விரும்புவர்.

இன்றும்  அலுவலகம் முடிந்ததும்
அவர்கள்பாட்டுக்குக்
கிளம்பி சென்று விட்டனர்.

ஆனால் மானேயால் அப்படி
இருக்க முடியாது.
அனைவரும் சென்ற பின்னர் அலுவலகத்தைப்
பூட்டிச் செல்ல வேண்டிய பொறுப்பு
அவனுடையது.

நிமிடங்களுக்கு ஒருமுறை மழை எப்போ
விடும் வீட்டுக்குப் போகலாம் என்பது போல ...
ஜன்னல் பக்கத்தில் போய் எட்டிப்
பார்த்துவிட்டு சென்று இருக்கையில்
அமர்ந்தாள் பார்கவி.

இருக்க முடியவில்லை.
இனி பொறுத்திருந்து பலனில்லை.
கைப்பையை தூக்கிக்கொண்டு
வெளியே வந்தாள்.மழை ஓவென்று
ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தது.

மழைநீர் அலுவலக வாசலில் வந்து
எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.

வாசலில் அலுவலகத்து ஊழியர்கள்
பலர் நின்று கொண்டிருந்தனர்.

எவ்வளவு நேரம்தான் இப்படியே நிற்பது...
வாங்க ஒருவரை ஒருவர் கையைப் பிடித்தபடி
மெதுவாக பேருந்து நிறுத்தம்வரை
சென்று விடுவோம்  என்று சொன்னபடியே
தண்ணீரில் இறங்கினார் ஒரு அலுவலர்.

ஆ....தண்ணீர் இழுப்பதுபோல் இருக்கிறது.
பார்த்து....பத்திரமாக கால் வையுங்கள்
என்று எச்சரிக்கைக் குரல் கொடுத்தார்
இன்னொருவர்.

ஒருவர்பின் ஒருவர் மெதுவாக நீருக்குள்
இறங்கி தள்ளாடினர்.

பார்த்து....பார்த்து ஒருவரை ஒருவர் பிடித்துக் கொண்டு
நடங்க ...அப்போதான் தண்ணீர் இழுக்காது...
என்று கைகோத்தபடி அனைவரும் நடந்தனர்.

பார்த்துக் கொண்டே நின்ற பார்கவியால்
அதற்கு மேலும் நிற்க முடியவில்லை.
அவர்கள் பின்னாலேயே சென்றுவிடுவதுதான்
பாதுகாப்பு என்று தோணியது.

இன்னும் காத்திருந்தால் வீட்டுக்குப்
போய்விடாமலே போய்விடலாம் என்று பயந்தபடி
கையில் கைப்பையை இறுக்கமாகப்
பற்றிக் கொண்டு நீருக்குள் இறங்கத்
தயாரானாள்.

மழை ஜோர் என்று ஒரு இசையோடு
தனது கச்சேரியை நடத்திக் கொண்டிருந்தது.

மெதுவாக தண்ணீரில் கால் வைத்தாள்.
"பார்த்து...பார்த்து...தண்ணீர் இழுத்துவிடப்
போகுது..."குரல் கொடுத்தபடியே
அருகில் வந்தான் மானே.

கையில் வைத்திருந்த குடை காற்றில்
தள்ளாட்டம் கண்டது.

நாலு அடிதான் எடுத்து வைத்திருப்பாள்.
அதற்குள் குடைமேல் நோக்கி விரிந்தபடி
நீரில் போய் விழுந்து கவிழ்த்துப் போட்ட
கரப்பாரன்பூச்சிபோல நெழிந்து
தண்ணீரோடு மல்லுக்கட்டிக் கொண்டு
தோற்றுப்போய் கூடவே உருண்டது.

குடையை எட்டிப் பிடிக்க கையை நீட்ட
கைப்பை...குட்பை சொல்லி
அதுவும் நீருக்குள் விழ....

ஆ...என்று கத்தியபடி நீருக்குள் விழுந்தாள்
பார்கவி.
நல்ல வேளையாக பின்னாலேயே
வந்த மானே எட்டிப் பிடித்துவிட
பார்கவி மானே கையைப் பிடித்தபடி
எழுந்தாள்.

ஆனால் அவளால் தண்ணீருக்குள்
அடுத்த அடி எடுத்து வைக்க  முடியவில்லை.

காலுக்குள் இருந்த மண்ணை உருவி
மறுபடியும் மறுபடியும் கால்களைத்
தள்ளாட்டம் காண வைத்தது மழை நீர்.

"அம்மா வாங்க "என்றபடி பார்கவியின்
கரத்தை இறுக்கமாகப் பற்றிக்கொண்டு
கூடவே நகர்த்தி அழைத்துச் சென்றான்  மானே.

சற்று தூரத்தில் இருந்த பேருந்து
நிலையம் வரை வந்த மானே
அம்மா ....என்றபடி பார்கவியை
ஏறிட்டுப் பார்த்தான்.

அந்தப் பார்வையில் இனி போயிருவீங்க இல்ல
என்ற கேள்வி இருந்தது.

மானே முகத்தைப் பார்க்காதபடி
தலை கவிந்து நின்றாள் பார்கவி.
"அம்மா..."மறுபடியும் அழைத்தான்.

"ஆட்டோ டாக்சி ஏதாவது வருதா
என்று பார்க்கட்டுமா...."
பார்கவியின் கைகளிலிருந்து தன்
கரத்தை விடுவித்தபடி
கேட்டான் மானே.

ம்...அப்போதுதான் ஏதோ நினைவிலிருந்து
விடுபட்டவளாக மானேவைப் பார்த்தாள்.

"அம்மா இனி போயிருங்க இல்ல...
வீடுவரை கூட வரவா...."
வலிந்து வந்து மறுபடியும் கேட்டு வைத்தான்.

"இல்லை.. பரவாயில்ல....இனி போயிருவேன்.
நீங்க போங்க....உங்கள் வீட்டுக்குப் போய்
பிள்ளைகள் எல்லாம் பள்ளியில் இருந்து
வந்துட்டாங்களா என்று பாருங்க..."
என்றாள் பார்கவி.

" இல்லம்மா...உங்களை இப்படி
தனியா விட்டுட்டு எப்படிப் போவது...
யாராவது  உங்க இடத்துக்குப் போகிறவுங்க
இருக்காங்களா
என்று கேட்டு வரட்டுமா.."

"வேண்டாம்...நான் பார்த்துக்கிறேன்.
நீங்கப் போய்விடுங்க இல்ல....
டாக்சிக்கு ஏதும் பணம் வேண்டுமா....
என்றபடி கைப்பையைத் திறந்தாள்.

"அதெல்லாம் வேண்டாம்மா...
நான் நடந்தே போயிடுவேன் "

"இந்த மழையிலையா....
எதுக்கும் கையில் காசு வைத்துக் கொள்ளுங்கள்"
வலுக் கட்டாயமாக கையில் ஆயிரம்
ரூபாயைத் திணித்துவிட்டு
பத்திரமா போயிடுவீங்க இல்ல... "என்றாள்.

அந்தக் கேள்வியில்  முதன் முறையாக
ஒரு மகள் தகப்பன் மீது காட்டும்
கனிவு இருந்ததைப் பார்த்தான்.
மனிதனை மதிக்கும் நல்ல பண்பு
பார்கவிக்குள்ளும்
இருந்திருப்பதைக்  கண்டு நெகிழ்ந்து போனான்.

நம்ம பார்கவி அம்மாவா....என்ற வியப்பில்
அப்படியே பார்கவியைப் பார்த்தான்.

"என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்...நான்தான்
உங்கள் மகள் பார்கவி " என்றாள்.

அந்தப் பேச்சில் உயர் அதிகாரி என்ற ஆணவம்
கொஞ்சமும் இல்லாதிருந்தது.

இப்போது மழையின் கோரமும் கொஞ்சம்
கொஞ்சமாக
தணிந்து கொண்டிருந்தது.




         
                

Comments

Popular Posts