பலவுறு நறுஞ்சாந்தம்.....

பலவுறு நறுஞ்சாந்தம்.....

அன்றொருநாள்....
அதிகாலை வேளை.... கதிரவன் செம்முகம்
காட்டித் தன் சிரிப்பலையைச்  சிந்திவிட
சோம்பல் முறித்துப் படுக்கையிலிருந்து
எழுந்தாள் செவிலித்தாய்.
கண்கள் அருகில் படுத்திருந்த
 அழகு மகளைத் தேட... அதிர்ச்சியுற்றாள்.
 படுக்கை அப்படியே விரிந்து கிடக்க...
 அழகு  பதுமை இல்லாது 
 அறை வெறுமையாய்க்  கிடந்தது.
 அக்கம்பக்கம் தேடினாள்.
அண்டை அயலாரிடம்  போய்
கேட்டுப் பார்த்தாள். எல்லோரும் கையை விரித்தனர்.
அங்குமிங்கும் ஓடினாள்....
இப்போது முகத்தில் கூடுதலாக ஒரு கலக்கம்
வந்து அப்பிக் கொண்டது.
அவனோடு ஓடி இருப்பாளோ...
என்ற ஐயம் வந்து தொற்றிக் கொள்ள...

காண்போரிடம் எல்லாம் என் செல்வம்
யாருடனும் செல்வதைக் 
கண்டீரோ என வெளிப்படையாகவே
விசாரிக்க ஆரம்பித்தாள்.

எந்த தகவலும் கிடைக்காதவளாய்
வியர்க்க விறுவிறுக்க 
கால் போன போக்கில் நடந்தாள்.
அப்போது எதிரே முதியவர் ஒருவர்
வருவதைக் கண்டாள்.
அவரிமிருந்தாவது தனக்குச் சாதகமான பதில்
கிடைக்காதா என்ற ஏக்கத்தோடு
சற்று நேரம் அவரையே பார்த்தபடி
நின்றாள்.

என்னம்மா எதையாவது தொலைத்துவிட்டாயா?
என்று கேட்டார் பெரியவர்.

என் அருமை மகளைத் தொலைத்துவிட்டேன்
ஐயா....
என் மகள் பிறள் மகன்
ஒருவனோடு செல்லக் கண்டீரோ ?
எனக் கேட்டாள் செவிலி.

சிரித்துக் கொண்டார் பெரியவர்.

"என் பரிதவிப்பு தங்களுக்கு 
நகைப்பைத் தருகிறதோ?"

"நகைப்பதைத் தவிர வேறென்ன 
தந்துவிட முடியும் என நினைக்கிறாய்?
பார்த்தேன் என்றால் எங்கே பார்த்தீர்? 
எப்போது பார்த்தீர் ? 
ஆண்மகனோடு சென்றாளா என்று
ஆயிரம் கேள்வி கேட்பாய்."

"அதைத்தானே நான் கேட்கிறேன்? 
அவள் ஒரு ஆண்மகனோடு சென்றதை
நீர் பார்த்தீரோ? "

"அவள் தனியாகப் போகவில்லை.
தனக்குப் பிடித்த கட்டழகு நாயகனோடு 
களிப்போடு
போய்க் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.
போதுமா..."என்றார் பெரியவர்.

"ஐயோ... அவள் என்னை மறந்து
இன்னொருவனோடு மகிழ்ச்சியாக
சென்று கொண்டிருக்கிறாளா?"

"இதில் என்ன தவறு இருக்கிறது?
அவள் தனக்குப் பிடித்த
ஆண்மகனோடுதானே சென்றிருக்கிறாள்."

"ஒரு தாயின் பரிதவிப்பு உங்களுக்குப்
புரியவில்லையா? "

"புரிகிறது....நன்றாகப் புரிகிறது."

"புரிந்துமா இப்படி வேடிக்கை செய்கிறீர்?"

"அன்னையே! நான் சொல்வதை சிறிது 
கேட்பீரா?"

"வேறென்ன சொல்லிவிடப் போகிறீர்கள் ?"

"சந்தனமரம் மலையில் வளர்கிறது.
ஆனால் சந்தனத்தைப் பூசிக் 
கொள்பவர்களுக்குப் பயன்படுமே தவிர 
மலைக்கு அதனால் ஏதாவது பயன் உண்டோ? "

"இல்லை..."

" நினைக்குங்கால் நின்மகளும் நினக்கு 
ஆங்கு அனையளே !"

"முத்து கடலில் பிறக்கிறது.
முத்தை எடுத்து அணிந்து அழகு
பார்ப்பவர்களுக்குத்தான் அதனால்
அழகு கிடைக்குமே தவிர
கடலுக்கு அதனால் எந்த 
அழகும் கிடைத்துவிடக் கூடுமோ?"

"அது எப்படி கிடைக்கும்?".

நினைக்குங்கால் நின்மகளும் நினக்கு 
ஆங்கு அனையளே!

"யாழிலிருந்து இசை பிறக்கிறது. 
யாழை மீட்டி இசைத்து இன்பம்
காண்பவருக்கு மட்டும் அல்லாமல்
யாழுக்கு அதனால் ஏதேனும்
இன்பம் கிடைத்திடுமோ?"

"இது என்ன வேடிக்கையான கேள்வி....
இசையால் யாழுக்கு எந்த இன்பமும் இல்லை.
மீட்டுபவர்க்குத்தானே இன்பம்"

"நினைக்குங்கால் நின்மகளும் 
நினக்கு ஆங்கு அனையளே !"

அப்படியே பெரியவர் முகத்தைப் பார்த்தபடி
அமைதியாக நின்றாள் செவிலி.

"தாயே!  உன் மகள் இன்பத்தையும்
மகிழ்ச்சியையும் பெறுவதற்குத்தான்
சென்றிருக்கிறாள்.
கலக்கம் வேண்டாம்.
பிள்ளைகளை வாழ்த்தி
அனுப்பி வைப்பதுதான் பெற்றோரின்
கடமை. 
அதுதான் தர்மம் "என்று சொல்லி 
செவிலியைச் சமாதானப்படுத்தி அனுப்பி 
வைத்தார் முதியவர்.

உடன்போக்குக்கு உரிய அறிவுரை
தந்தப் பாடல் இதோ: 

பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு  அல்லதை
மலையுளே பிறப்பினும்  மலைக்கவைதாம்  என்செய்யும்
நினையுங்கால் நும்மகள் நுமக்குமாங்கு அனையளே !
சீர்கெழு வெண்முத்தம்  அணிபவர்க்கு  அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என்செய்யும்
தேருங்கால் நும்மகள் நுமக்குமாங்கு  அனையளே !
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுளே பிறப்பினும் யாழுக்கு அவைதாம் என்செய்யும்?
சூழுங்கால் நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே !
                                                   _  கலித்தொகை 

 
 உடன்போக்கு மகிழ்ச்சியாக நடந்திருக்கிறது.
இடையில் சென்று வெட்டுவேன்... குத்துவேன்
என்று இடைமறித்து
நிற்பதால் என்ன பயன்? 
வாழச் சென்றவர்களை வாழ்த்தி அனுப்புங்கள்.
இடையில் இந்த ஆணவப் பேச்சும்
ஆணவக் கொலைகளும் வேண்டாமே
என்பதை  அழகாகச் சொல்லியிருக்கிறார்
புலவர்.
 சிந்திக்கச் சொல்லும் சிறப்பான கருத்து.
 
 

Comments

Popular Posts