ஆகுபெயர் வகைகள்

ஆகுபெயர்  வகைகள்

ஒருசொல் அதன் பொருளைத் குறிக்காமல்
அச்சொல்லோடு தொடர்புடைய வேறு ஒரு
பொருளைக் குறிப்பது ஆகுபெயர் எனப்படும்.


எடுத்துக்காட்டாக

நெல் அறுத்தான் என்ற சொற்றொடரை
வைத்துக் கொள்வோம்.
உண்மையில் அறுக்கப்பட்டது
நெல்லா?

இல்லை.

உண்மையிலேயே அறுவடை செய்யப்பட்டது
நெற்பயிர் தான்.
நெல் அறுத்தான் என்பது
இங்கே நெற்பயிரைக் குறிக்கிறது.

இதேபோன்றுதான்
வெற்றிலை நட்டான் என்பதும்
வெற்றிலைக்கொடி நட்டான்
என்பதைத்தான் வெற்றிலை நட்டான்
என்று கூறுவோம்.
இப்படி ஒன்றின் பெயர் மற்றொன்றிற்கு
ஆகி வருவது ஆகு பெயர் எனப்படும்.

"பொருள் முதல் ஆறோடு
அளவை சொல் தானி
கருவி காரியம் கருத்தன் ஆதியுள்
ஒன்றன் பெயரான் அதற்கு இயை பிரிவைத்
தொல்முறை உரைப்பன ஆகு பெயரே"
                     -   நன்னூல்
                    

ஆகுபெயர் பதினாறு வகைப்படும்.

1. பொருளாகுபெயர்
2. சினையாகுபெயர்
3. இடவாகுபெயர்
4. காலவாகு பெயர்
5. பண்பாகு பெயர்
6. தொழிலாகு பெயர்
7 எண்ணலளவை ஆகுபெயர்
8 .எடுத்தலளவை ஆகுபெயர்
9.முகத்தலளவை ஆகுபெயர்
10.நீட்டலளவை ஆகுபெயர்
11.சொல்லாகுபெயர்
12..தானியாகு பெயர்
13. கருவியாகு பெயர்
14.காரியவாகு பெயர்
1 5.கருத்தாவாகு பெயர்
1 6.உவமையாகு பெயர்

முதலாவது பொருளாகு பெயரிலிருந்து
பார்ப்போம்.

1.  பொருளாகு பெயர்:

ஒரு பொருளின் பெயர் அதனோடு
தொடர்புடைய இன்னொரு
பொருளுக்கு ஆகி வருதல்
பொருளாகுபெயர் எனப்படும்.
இதனை முதலாகு பெயர் என்றும்
கூறுவர்.

ராணி மல்லிகை சூடினாள்.

மல்லிகை என்பது வேர்,கொடி,இலை,பூ
எல்லாம் சேர்ந்த ஒரு பொருளின்
முழுப்பெயர் . அந்த முழுப்பெயர்
 சினையாகிய அதாவது ஒரே ஒரு
 உறுப்பாகிய
 பூவிற்கு ஆகி வந்துள்ளதால் இது
 பொருளாகு பெயராயிற்று.
.

தாமரை  மலர்ந்தது.
முல்லை மணம் வீசியது.2. சினையாகு பெயர்:

 ஒரு சினையின் பெயர் அதாவது
 ஒரு உறுப்பின் பெயர்
 அதன் முதற்பொருளுக்கும் ஆகி
 வருவது சினை ஆகு பெயர் எனப்படும்.
 
வெற்றிலை நட்டான்.

இதில் வெற்றிலை என்ற
ஒற்றை இலையை நடவில்லை.
வெற்றிலைக் கொடி நட்டான்
என்பதுதான் வெற்றிலை நட்டான்
எனச் சொல்லப்பட்டுள்ளது.
அதனால் வெற்றிலை நட்டான்
என்பது நினையாது பெயராயிற்று.


தலைக்கு ஒன்று கொடு.
தலைக்கு ஒரு பழம் கொடு.

என்றால் தலைக்குத் கொடுப்பதல்ல. 
ஒவ்வொருவருக்கும் ஒன்று கொடு 
என்பதைத்தான்
தலைக்கு ஒன்று கொடு என்கிறோம்.
இங்கே தலை என்னும் உறுப்பின் பெயர்
ஒவ்வொருவருக்கும் என்று முழு
மனிதரையும் குறிக்கின்றது.
அதனால் சினையாகு பெயராகும்.


3 இடவாகு பெயர்:

இடத்தின் பெயர் அந்த இடத்தோடு
தொடர்புடைய இன்னொன்றுக்கு
ஆகி வருவது இடவாகுபெயர்
எனப்படும்.

 ஊர் சிரித்தது.

இங்கு ஊரா சிரித்தது?
இல்லையே!
ஊரிலுள்ள மக்கள் சிரித்தார்கள்
என்பதை ஊர் சிரித்தது
என்று கூறுகிறோம்.
அதனால் ஊர் சிரித்தது
என்பது இடவாகு பெயர் ஆயிற்று.

ஊர் கூடியது.
உலகமே அழுதது.
உலகக்கோப்பையில் இந்தியா வென்றது.
மும்பை வென்றது.
     
4. காலவாகு பெயர்:
 
காலப்பெயர் காலத்தோடு
தொடர்புடைய வேறு ஒரு
பொருளுக்கு ஆகி வருவது
காலவாகு பெயர் எனப்படும்.

கார் விளைந்தது.

இங்கே கார் விளைந்தது
என்றது கார்காலத்தில்
நெல் விளைந்தது அல்லது
என்ன தானியம் விளைந்ததோ அந்தத்
தானியம் விளைந்து கிடப்பதைக்
கார் விளைந்தது என்று கூறுகிறோம்.
எனவே கார் விளைந்தது என்பது
காலவாகு பெயர் ஆயிற்று.

அத்திப் பூத்தது.
கார்த்திகைப் பூத்தது.
கோடை சுட்டெரித்தது.
பங்குனி அனல் பறக்குது.
டிசம்பர் சூடினாள்.
பொழுது சாய்ந்தது.

5.  பண்பாகு பெயர்: 

ஒரு பண்புப் பெயர் அந்தப்
பண்பைக் கொண்ட வேறு ஒரு
 பொருளுக்கு
ஆகி வருவது பண்பாகுபெயர்
எனப்படும்.
இதனைக் குணவாகுபெயர்
என்றும் கூறுவர்.
     
தலைவர்   இனிப்பு வழங்கினார்.

இதில் இனிப்பு என்பது இனிப்புத்
தன்மை கொண்ட பண்டத்தைக்
குறிப்பதால் இது பண்பாகுபெயர்
ஆயிற்று.

நீலம் சூடினாள்.
மயிலையைக் கட்டிப் போடு.
செவலையை வண்டியில் பூட்டு.

நீலம் என்பது நீல நிறத்துப் பூவைக் குறிக்கிறது.
மயிலை என்பது வெண்மை நிற
மாட்டைக் குறிக்கிறது.
செவலை என்பது காவி நிற மாட்டைக்
குறிக்கிறது.

அதனால் இவற்றைப் பண்பாகுபெயர்
என்கிறோம்.

6. தொழிலாகு பெயர்:

ஒரு தொழிற்பெயர் அத்தொழிலிலிருந்து
பெறப்படும் பொருளுக்கு ஆகி வருவது
தொழிலாகுபெயர் எனப்படும்.

வற்றல் குழம்பு உண்டேன்.

வற்றல் என்னும் தொழிற் பெயர் 
இங்கே அதனால் செய்யப்பட்ட
ஒரு குழம்பு வகையைக் குறிக்கிறது. 
அதனால் இது தொழிலாகு பெயர் ஆயிற்று.

பொரியல் உண்டேன்.

பொரியல் என்னும் தொழிற்பெயர்
பொரித்து வைத்த ஒரு பொருளுக்கு ஆகியதால்
இது தொழிலாகுபெயர் ஆயிற்று.

அவியல் நன்றாக இருந்தது.
ஆட்டம் முடிந்தது.
கூட்டம் கலைந்தது.
கூத்து முடிந்தது.
சுண்டல் உண்டான்.

அடுத்து வருபவை அளவையாகுப் பெயர்கள்.
அவை  நான்கு வகைப்படும்.
 
7.எண்ணலளவை ஆகு பெயர்.
8.எடுத்தலளவை ஆகு பெயர்(நிறுத்தலளவை)
3. முகத்தலளவை ஆகு பெயர்
4. நீட்டலளவை ஆகு பெயர்
:

7. எண்ணலளவை ஆகுபெயர்:

எண்ணைக் குறிக்கும் பெயர்
அது தொடர்புடைய  ஒரு பொருளுக்கு 
ஆகி வருவது
எண்ணலளவை ஆகுபெயர் எனப்படும்.

ஒன்று பெற்றால் ஒளிமயம்.

இங்கே ஒன்று என்னும் எண்ணும் பெயர்
அவ்வெண்ணோடு தொடர்புடைய
குழந்தைக்கு ஆகி வருவதால் இது
எண்ணலளவையாகு பெயர் ஆயிற்று.

எடுத்துக்காட்டாக....
இரண்டு உருப்படி உள்ளது.
ஒன்று கொடுத்தான்.
ஐந்து  தா.
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி.


ஒன்று,இரண்டு,மூன்று,....பத்து....
எண்ணுப் பெயர்கள் என்பதை 
மனதில் கொள்க.

8.. எடுத்தலளவையாகு பெயர் :(நிறுத்தலளவை)

 நிறுத்து வாங்கும்
அளவைப் பெயர்கள் எடுத்தலளவைப்
பெயர்களாகும்.
கிலோ,கிராம்,கழஞ்சு, மில்லிகிராம்....
போன்ற பெயர்கள் நிறுத்தலளவைக்குப்
பயன்படுத்துகிறோம்.
இப்படிப்பட்ட நிறுத்தல் அளவை பெயர்கள்
அவை தொடர்புடைய பொருளுக்கு
ஆகி வருவது எடுத்தலளவையாகுப்
பெயர் எனப்படும்.

நான்கு கிலோ வாங்கினேன்.
ஆறு கழஞ்சு வளையல் வாங்கினேன்.

கிலோ,கழஞ்சு என்னும்
எடுத்தலளவைப் பெயர்கள்
அவ்வளவையில் வாங்கிய
பொருட்களுக்கு  ஆகி வருவதலால்
 எடுத்தலளவை
ஆகுபெயராயிற்று.

9.முகத்தலளவை ஆகுபெயர்:

முகத்தல் அளவையின் பெயர்
அந்த அளவுள்ள பொருளுக்கு
ஆகி வருவது முகத்தல் அளவை ஆகு
பெயர் எனப்படும்.

முகத்தல் என்பது நீர்மப் பொருட்களை
அளக்கும் அளவைகளைக் குறிக்கும்.

ஐந்து லிட்டர் வாங்கி வா.

லிட்டர் என்னும் முகத்தல் அளவை பெயர்
அது தொடர்புடைய பால், எண்ணெய்
போன்ற நீர்மப் பொருள்களுக்கு ஆகி வருவதால்
முகத்தலளவையாகு பெயர் ஆயிற்று.

முகத்தல் அளவை பெயர்கள்

படி
ஆழாக்கு
நாழி
உழக்கு
மரக்கால்
கிலோ லிட்டர்
லிட்டர்
மில்லி லிட்டர் 
போன்றவையாகும்.

இரண்டு ஆழாக்கு  ஆக்கினேன்.
நான்கு படி கொடுத்தேன்.

10.  நீட்டலளவையாகு பெயர்.

நான்கு முழம் கொடு.
இத்தொடரில் முழம் என்னும் நீட்டலளவை
பெயர் பூவிற்கு ஆகி வந்ததால் இது
நீட்டலளவை ஆயிற்று.

சாண்
முழம்
ஏக்கர்
கிலோ மீட்டர்
மீட்டர் 
போன்றவை நீட்டலளவைப் பெயர்களாகும்.

11.சொல்லாகு பெயர்:

சொல்லைக் குறிக்கும் பெயர்
சொல்லிற்குத் தொடர்புடைய
பொருளுக்கு ஆகி
வருவது சொல்லாகு பெயர் எனப்படும்.

 தாய் சொல்லைத் தட்டாதே.
 
இங்கு  சொல்லை என்பது
சொல் என்ற பொருளைக்
குறிப்பிடவில்லை.

சொல் என்பது அறிவுரை என்ற
பொருளில் வந்துள்ளது.
எனவே இது சொல்லாகு பெயர்
ஆயிற்று.

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை.

12. தானியாகு பெயர்:

ஒரு இடத்திலுள்ள பொருளின் பெயர்
அந்த இடம் சார்ந்திருக்கும் இன்னொரு
பொருளுக்கு 
ஆகி வருவது தானியாகுபெயர்
எனப்படும்.

 பாலை  ஊற்றி எடுத்து வா.
 
பால் என்னும் ஒரு பொருள்
பாலை ஊற்றி எடுத்து வரும்
கோப்பைக்கு ஆகி வந்துள்ளமையால்
தானியாகு பெயர் ஆயிற்று.

அடுப்பில் உலையை வை.
அடுப்பில் பானையை வை என்பது
அடுப்பில் உலையை வை என்று
சொல்லப்பட்டுள்ளது.

ஏரி உடைந்தது.

13.  கருவியாகு பெயர் :

 ஒரு கருவியின் பெயர் அக்கருவியால்
 வரும் பொருளுக்கு ஆகி வருவது
 கருவியாகு பெயர் எனப்படும்.
 
 நான் குறள் படித்தேன்.
இதில் குறள் என்பது குறள்
வெண்பாவால் ஆகிய செய்யுளைக்
குறிக்கிறது.

குழல் கேட்டு என்னை மறந்தேன்.

இதில் குழல் என்னும் இசைக்கருவியின்
பெயர் அதனால் உண்டான குழலிசைக்கு 
ஆகி வந்துள்ளமையால் கருவியாகு
பெயர் ஆயிற்று.

தொலைக்காட்சி பார்த்தேன்.
யாழ் கேட்டு மகிழ்ந்தேன்.

14. காரியவாகு பெயர் :

   ஒரு காரியத்தின் பெயர்  அது உண்டாவதற்குக்
   காரணமான கருவிப் பொருளுக்கு
   ஆகி வருவது
   காரியவாகு பெயர் எனப்படும்.

சமையல் கற்றேன்.
பண்புடைமை படித்தேன்.
களவியல் படித்தேன்.
அவன் பிழைப்பு போயிற்று

15.கருத்தாவாகு  பெயர்:

 ஒரு கருத்தாவின் பெயர் அக்கருத்தாவால்
 செய்யப்பட்ட பொருளுக்கு ஆகி வருவது
கருத்தாவாகு பெயர் எனப்படும்.

வள்ளுவர் எனக்கு மனப்பாடம்.

இதில் வள்ளுவர் என்பது வள்ளுவர் என்னும்
கருத்தாவின்பெயர் வள்ளுவரால் எழுதப்பட்ட
குறளுக்கு ஆகி வருவதால் இது
கருத்தாவாகு பெயர் ஆயிற்று.

பாரதியைப் படி.
பாரதிதாசன் எனக்கு அத்துப்படி.
கம்பனைக் கற்றேன்.

16.உவமையாகு பெயர்:

ஒரு உவமானப் பெயர் அதனால் உணர்த்தப்
பெறும் உவமேயத்திற்கு ஆகி வருவது
உவமையாகுபெயர் எனப்படும்.

காளை வந்தான்.

இதில் காளை என்பது காளை போன்ற
வீரனுக்கு ஆகி வருவதால்
 இது உவமையாகு பெயர் ஆயிற்று.

பாவை ஆடினாள்.
போட்டியில் மலைகள் மோதின.


இவை தவிர
      
இருமடியாகு பெயர் 

அடையெடுத்த ஆகு பெயர்

இருபெயரொட்டு ஆகு பெயர்

போன்ற ஆகு பெயர்களும் உண்டு.

ஆனால் இவை எல்லாவற்றுள்ளும் முதலாவது
குறிப்பிட்ட பதினாறு வகை ஆகுபெயர்கள்
மிக முக்கியமானவை.
அவற்றைத் தெளிவாக மனதில் பதிய
வைத்துக் கொள்ளுங்கள்.
ஆகுபெயர்கள் பற்றிய தெளிவான அறிவு கிடைக்கும்.

     

Comments

Popular Posts