சென்னா மசாலா செய்வது எப்படி ?
சென்னா மசாலா செய்வது எப்படி?
பூரி சப்பாத்தி என்றால் கூடவே
சென்னா மசாலா வேண்டும்.
அப்போதுதான் முழு திருப்தியோடு சாப்பிட்டது
போல இருக்கும்.
மற்ற எந்த கூட்டுகளையும்விட
சென்னா மசாலாவுக்கு அப்படி ஒரு மவுசு.
பஞ்சாபிக்காரர்கள் சென்னா மசாலா செய்வதில்
கைதேர்ந்தவர்கள்.
அவர்களிடம் கேட்டுக் கேட்டு
நானும் கற்றுக்கொண்டேன்.
சென்னா மசாலா செய்வதற்கு
கற்றுக்கொள்ளணுமா?
சென்னா மசாலா கடைகளில்
கிடைக்கிறது வாங்கிப்
போட்டுச் செய்தால் கமகமக்கும்
சென்னா மசாலா ரெடி என்பீர்கள்.
எதுவும் பக்குவமாகச் செய்ய வேண்டும்.
இல்லை என்றால் உன்னை எல்லாம்
யார் சென்னா மசாலா வைக்கச்
சொன்னது? என்று
கிண்டலடிப்பார்கள்.
வாருங்கள் யாரும் குறை சொல்லாதபடி
சுவையான சென்னா மசாலா
செய்வது எப்படி என்று பார்ப்போம்.
சென்னா மசாலா கிரேவி
செய்வதற்குத் தேவையான பொருட்கள்:
கொண்டைக்கடலை: மூன்று கப்(வெள்ளை)
வெங்காயம் : இரண்டு ( பெரியது)
(பொடியாக நறுக்கியது)
தக்காளி - மூன்று
(அரைத்து வைத்துக் கொள்ளவும்)
இஞ்சிப்பூண்டு விழுது: இரண்டு தேக்கரண்டி
கொத்தமல்லித்தழை : இரண்டு கையளவு( நறுக்கியது )
கரம் மசால தூள் - ஒரு தேக்கரண்டி
சென்னா மசாலாத்தூள் -இரண்டு தேக்கரண்டி
எண்ணெய் -மூன்று தேக்கரண்டி
உப்பு- தேவையான அளவு
மல்லித்தூள்- இரண்டு தேக்கரண்டி
சீரகத்தூள் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - இரண்டு
பட்டை- ஒரு விரலளவு
கிராம்பு- ஐந்து
ஏலக்காய் - நான்கு
பிரிஞ்சி இலை - இரண்டு
சோம்பு-அரை தேக்கரண்டி
செய்முறை:
1 .கொண்டைக்கடலையை ஆறுமணி நேரம்
நன்றாக ஊற வைத்து
எடுத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் ஊற வைத்த கொண்டைக்கடலையை
ஒரு குக்கரில் வைத்து
ஏழு விசில் வரும் வரை விட்டு
நன்றாக வேக வைக்கவும்.
2. அடுத்ததாக ஒரு கடாயில் மூன்று
தேக்கரண்டி எண்ணெய்
ஊற்றி சோம்பு,கிராம்பு
ஏலக்காய், பட்டை ,பிரிஞ்சி இலை
ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.
வதக்கும்போது அடுப்பை மெதுவாக
எரிய விடவேண்டும்.
கரிய விடாமல் சிறிதுநேரம்
வறுத்தால் போதும்.
இரண்டு மிளகாயையும் போட்டு சிறிது
வதக்குங்கள்.
3. இப்போது அதோடு நறுக்கி வைத்த
வெங்காயத்தைச் போட்டு வதக்கவும்.
வெங்காயம் பொன்னிறமாக வரும்போது
இஞ்சிப் பூண்டு விழுதினைச் சேர்த்து
வதக்கவும் .பின்னர் மல்லித்தூள்,
கரம் மசாலா தூள் இவற்றைப் போட்டு
சிறிது எண்ணெயில் பிரட்டி
விடவும்.
4.பின்னர் அரைத்து வைத்த
தக்காளியை ஊற்றி
நன்றாக பச்சை வாடை போகும்வரை
வதக்க வேண்டும்.இப்போது
ஒரு கைப்பிடி அளவு
மல்லித்தழை போட்டு சிறிது
நேரம் வதக்கவும்.
பின்னர் இந்தக் கலவையோடு
ஒரு தேக்கரண்டி வற்றல் தூள் ,
அரை தேக்கரண்டி சீரகத்தூள்
இரண்டையும் போட வேண்டும்.
இப்போது சிறிது உப்பு
போட்டுக் கொள்ளவும்.
சிறிது தண்ணீர் விட்டு
கொதிக்க விடவும்.
5. இப்போது அவித்து வைத்தக்
கொண்டைக்கடலையில்
இரண்டு கையளவு எடுத்துவிட்டு
மீதியை மசாலாவோடு கொட்டவும்.
கூடவே கொண்டைக்கடலை
அவித்த தண்ணீரையும் ஊற்றி
கொதிக்க விடவும்.
மசாலா கொதிக்கும்போது
இரண்டு தேக்கரண்டி
சென்னா மசாலாப் பொடியைப் போடவும்.
6. கடைசியாக எடுத்து வைத்திருந்த
இரண்டு கையளவு
சென்னாவையும்
மிக்சியில் போட்டு இரண்டு சுற்று சுற்றி
மசாலாவோடு கொட்டி தேவையான அளவு
தண்ணீர் விட்டு கொதிக்க விடவும்.
மீதம் இருக்கும் ஒரு கைப்பிடியளவு
கொத்தமல்லித்தழையையும்
போட்டு கிளறி விடவும்.
கிரேவி பதம் வந்ததும்
அடுப்பை அணைத்து விட்டு
ஒரு தேக்கரண்டி
நெய் விட்டு மூடி வைத்துவிடுங்கள்.
இப்போது கமகமக்கும்
சென்னா மசாலா கிரேவி
ரெடி.
சப்பாத்தியோடு சாப்பிட்டால்
அட்டகாசமாக இருக்கும்.
இன்னும் இரண்டு சப்பாத்தி வேண்டும்
என்று கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள்.
செய்து கொடுத்து
அசத்துங்கள்.
அனைவரின் பாராட்டுதலையும் அள்ளுங்கள்.
Comments
Post a Comment