ஒளியார் முன் ஒள்ளிய ராதல்....

ஒளியார்முன் ஒள்ளிய ராதல்....


ஒளியார்முன் ஒள்ளிய ராதல் வெளியார்முன்
வான்சுதை வண்ணம் கொளல்"


                 குறள் :.  714

ஒளியார்-நல்ல அறிவுடையார்
முன் - முன்னால்
ஒள்ளியர் - அறிஞர்
ஆதல் - ஆகுக
வெளியார்- பேதையர் 
முன் - முன்னால்
வான் - வெண்மையான
சுதை- சுண்ணாம்பு
வண்ணம்- நிறம்
கொளல்- கொள்க


அறிவுடையார் முன்னால் நாம்
அறிவுடையவராகப் பேச வேண்டும்.
அறிவில்லாத பேதையர் முன்னால்
நாம் ஒன்றும் தெரியாதவர்போல்
இருந்து கொள்ள வேண்டும்.


விளக்கம்:

அறிவுடையவர் முன்னால் அறிவார்ந்த
செயல்களில் ஈடுபட வேண்டும்.
அறிவோடு பேச வேண்டும்
நாமும் அறிவுடையவராக
நடந்துகொள்ள வேண்டும்.
அறிவிலிகள் முன்னால் நாமும்
அவர்களைப் போலவே
ஒன்றும் தெரியாதவர் போல
 நடந்து கொள்ள வேண்டும்.
 
ஏன்?  அப்படி நடந்துகொள்ள வேண்டும்
என்ற கேள்வி எழுகிறதல்லவா?

அறிவுடையவர்கள் முன்னால் நம்
அறிவை மெய்ப்பிப்பது நல்லது.
அவர்களால் நம்மைப் புரிந்துகொள்ள முடியும்.
நமது கருத்துக்கான  அங்கீகாரம்
கிடைக்கும்.பெருமையும் புகழும்
வந்து சேரும்.

ஆனால் அறிவற்றவர்கள் முன்னால்
நம் அறிவைக் காண்பித்தால் அவர்களுக்கு
அதனைப் புரிந்துகொள்ளும் திறன் இருக்காது.
ஏதோ பேசுகிறார் என்ற மனநிலைதான்
இருக்கும்.அறிவின் மதிப்பு
தெரிந்திருக்க வாய்ப்பிருக்காது.
அதனால் பேதையர் முன்னால் 
அவர்களைப்போலவே
நாமும் ஒன்றும் தெரியாதவர் போல
நடந்து கொள்வது நல்லது.

ஒளியார்முன் ஒள்ளியராகுக என்பது சரி.

வெளியார் முன் எப்படி 
நடந்துகொள்ள வேண்டும்?
என்று சொல்லும்போது மட்டும்
வான்சுதை வண்ணங் கொளல்
என்று வள்ளுவர் சொல்லியிருக்கிறரே 
அது என்ன வான்சுதை 
வண்ணங் கொளல்?


வெண்மை வண்ணம்
கொண்டது சுண்ணம் .
வெண்மை அறியாமையைக் குறிக்கும்.
வெள்ளை மனம் என்றால் கள்ளம் கபடம்
இல்லாதிருப்பது .அதாவது வெள்ளத்தியாய்
இருப்பது. அப்பாவியாக ஒன்றும் தெரியாதவராக
இருப்பதைக் குறிப்பிட வேண்டும்.
அதற்கு வள்ளுவர் கையாண்ட உவமைதான்
வான் சுதை வண்ணம்  கொளல்.
அருமையான உவமை இல்லையா?

ஒளியார் முன் அறிவோடு நடந்து கொள்க.
வெளியார் முன் வான்சுதை வண்ணமென 
வெண்மையாய் அவர்களைப்போல
இருந்து கொள்க.

யார் யாரிடம்
எப்படி எப்படி நடந்துகொள்ள வேண்டும்
என்று சொல்லித் தரும் அருமையான
குறள் .


English couplet :

"Before the bright ones shine as doth the light!
Before the full ones be as purest stucco white"


Explanation :

Before brilliant people be brilliant.
Before plain people be as plain as white chalk.

Transliteration :

"Olyaarmun olliya raadhal veliyaarmun
Vaansudhai vannam kolal"Comments

Popular Posts