பெரியோர் எல்லாம் பெரியோரும் அல்லர்...


பெரியோர் எல்லாம் பெரியோரும் அல்லர்...


"பெரியோர் எல்லாம் பெரியோரும் அல்லர்
சிறியோர் எல்லாம் சிறியோரும் அல்லர்"

எவ்வளவு அருமையான சிந்தனைக்குரிய
வரிகள்!

படித்து முடித்ததும் எனக்குள் ஆயிரம்
கேள்விகள்.

அப்படியானால் 
யார் பெரியவர்?
யார் சிறியவர்?
என்பதை எப்படித்
தெரிந்து கொள்வது?
யாரிடம் கேட்டு என் கேள்விக்கான 
விடையைப் பெறுவது?
என்ற தேடலோடு எனது பயணம்
தொடர்ந்தது.
அப்போது கண்ணில் பட்டது
அதிவீரராம பாண்டியன் எழுதிய
வெற்றி வேற்கை .

நறுந்தொகை என்றும் அழைக்கப்படும்
இந்த வெற்றி வேற்கை வரிகள்
என்னை ஒரு தேடலுக்குள் தள்ளியது.

ஆள் வாட்டசாட்டமாக இருந்தால் அதற்கு
ஒரு மரியாதை.
நல்ல நேர்த்தியாக உடை அணிந்திருந்தால்
முதல் வரிசையில் இடம்.
நிறைய பணம் வைத்திருந்தால்
பெரியவர் என்ற அங்கீகாரம்.
முதல் மரியாதை.
இப்படி தோரணைக்கு என்றே ஒரு
மரியாதை உண்டு.

இதனை நாம் பல இடங்களில் 
கண்டிருக்கிறோம்.
அதுதான் பெரியவருக்கான அடையாளம் என்று
நம்பி வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆனால் இந்த ஆடை அலங்காரத்தாலும்
உருவ அமைப்பாலும் பணத்தாலும்
ஒருவரை இன்னார் என்று 
கணித்து விடலாமா?
ஆடையும் உருவமும் பணமும் ஒருவருக்குப்
பெரியவர் என்ற மரியாதையை
வாங்கிக் கொடுத்துவிடுமா?
என்றால் இல்லை என்கிறார்
அதிவீரராம பாண்டியன்.

அது எப்படி?
அதுதானே கள நிலவரம்.
வேறு என்னதான் வேண்டுமாம்?
என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா!

இதற்கான விடையையும்
அதிவீரராம பாண்டியன் கூறுகிறார். 
கேளுங்கள்.


"தேம்படு பனையின் திரள் பழத்து ஒரு விதை
வானுற ஓங்கி வளம் பெற வளரினும்
ஒருவருக்கு இருக்க நிழலாகாதே"

அப்புறம்....வேறு என்ன சொல்ல வருகிறீர்கள்
என்று குறுக்கு விசாரணை நடத்தினால்....

"தெள்ளிய ஆலின் சிறு பழத்து ஒரு விதை
தெண்ணீர் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணியதே ஆயினும் அண்ணல் யானை
அணிதேர்ப் புரவி ஆட்பெரும் படையொடு
மன்னர்க்கு இருக்க நிழலாகுமாமே!"

என்று ஒரு அருமையான விளக்கம் தந்து
நம் கேள்விக்கான விடையைக்
கூறி கடந்து போய்விட்டார்.


"பெரியோர் எல்லாம் பெரியரும் அல்லர்
சிறியோர் எல்லாம் சிறியரும் அல்லர்"
அவர் கூறியிருக்கும் பாடலுக்கும்
இந்த பணிகளுக்கும் என்ன தொடர்பு?


பெரியோருக்கும் சிறியோருக்கும்
அவர்கூறும் வேறுபாடு என்ன என்பதற்கு
 உவமையோடு விளக்கம் கொடுத்திருக்கிறார். 
கேளுங்கள்.
 
பனை மரத்து விதை பெரியது தான்.
அதிலிருந்து வளரும் பனைமரமும்
ஓங்கி உயர்ந்துதான்.
ஆனால் அதன் நிழலைப் பாருங்கள்.
அதன்கீழ் எத்தனைபேர் இருந்து
இளைப்பாறிவிட முடியும்?
ஒன்று அல்லது இரண்டு.


ஆனால் ஆலின் நிழலைப் பாருங்கள்.
மீன் முட்டை அளவிலும் சிறியதாகக் தான்
ஆலமர விதை இருக்கும். ஆனால் அதிலிருந்து 
பெரிய ஆலமரம் வளர்ந்து
தன் கிளைகளை விரித்து பரந்து
கிடக்கும்.
யானைப்படை ,வேர்ப்பட்டை,
குதிரைப்படை ,காலாட்படை
 ஆகியவற்றோடு அரசனும் வந்து தங்கி 
இளைப்பாறிச் செல்லும் அளவுக்குப்
பெரும் பயன் தரும்.

இந்தச் சிறிய விதையால் அப்படி 
என்ன பெரிய பயன் விளைந்து விடப்
போகிறது என்று தாழ்வாக 
நினைத்திருப்பீர்கள்.
அப்படி நினைத்திருந்தால்
இப்போதிலிருந்து உங்கள் எண்ணத்தை
மாற்றிக் கொள்ளுங்கள்
என்கிறார் அதிவீரராம பாண்டியன்.

சிறிய விதையால் இவ்வளவு பெரிய 
ஆலமரமாக வளர முடிகிறது என்றால்
உருவத்தால் சிறியவரான ஒருவரால்
பெரிய காரியங்களைச் செய்ய
முடியாதா என்ன?

அதனால் யாரையும் உருவத்தை 
 வைத்து குறைவாக
எடைபோட்டு விடாதீர்கள்.

அருமையான விளக்கம் .

இதையேதான் வள்ளுவரும்

"உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து"
என்றார்.


அச்சாணி சிறியது தான் .அதுதான் 
பெரிய தேரையே குடைசாய விடாமல்
காக்கும் திறன் கொண்டது.
உருவத்தைப் பார்த்து 
இது எதற்கு என்று ஒதுக்கி வைத்துவிட்டால்...
என்ன நிகழும்?
இவ்வளவு பெரிய தேரால் ஒரு
அச்சாணி இல்லாமல் நகர முடியாதா?

முடியும். ஆனால் போக வேண்டிய இடத்திற்குப்
பாதுகாப்பாக போய்ச் சேர
சிறிய அச்சாணியின் உதவி
வேண்டும்.

வள்ளுவரும் அதிவீரராம பாண்டியனும்
ஒரே கருத்தைத்தான் வேறு வேறு
உவமைகள் தந்து விளக்கியிருக்கிறார்கள்.

உருவத்தை பார்க்காதீர்கள். 
செயலைச் பாருங்கள்.
ஒருவர் செய்யும் செயல்தான் ஒருவரைப்
பெரியவரா சிறியவரா என்பதைத்
தீர்மானிக்கும் என்கின்றனர்.


அருமையான கருத்து இல்லையா?

"பெரியோர் எல்லாம் பெரியோரும் அல்லர்
சிறியோர் எல்லாம் சிறியோரும் அல்லர்"






Comments

Popular Posts