தீவக அணி என்றால் என்ன?



தீவக அணி என்றால் என்ன?


தீவகம் என்றால் விளக்கு என்று பொருள்.
அறையின் ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ள 
விளங்கானது அவ்வறை முழுவதும்
 வெளிச்சம் தந்து விளக்குதல் போலச்
 செய்யுளின் ஓரிடத்தில் வரும்
ஒரே ஒருசொல் அச்செய்யுளின்
பல இடங்களுக்களிலும் உள்ள 
சொற்களோடு சென்று பொருந்திப்
 பொருளை விளங்குவதால் இவ்வணி
தீவக அணி எனப்படுகிறது.

"குணம் தொழில் சாதி பொருள்
குறித்து ஒருசொல்
ஒருவயின் நின்றும்
பல்வயின் பொருள் தரின்
தீவகம்
செய்யுள் மூவிடத்து இயலும்"

என்கிறது தண்டியலங்காரம்.

ஒரு குணத்தையோ தொழிலையோ இனத்தையோ
பொருளையோ குறிக்கும் ஒரு சொல்
செய்யுளின் ஓரிடத்தில் நின்று
அச்செய்யுளில் பல இடங்களிலும்
உள்ள சொற்களோடு சென்று பொருந்திப்
பொருளைத் தருவது தீவகம் என்பது
தீவக அடித்துத் தண்டியலங்காரம் 
தரும் இலக்கணமாகும்.


தீவக அணி மூன்று வகைப்படும்.

1. முதல் நிலைத் தீவகம்
2. இடைநிலைத் தீவகம்
3. கடைநிலைத் தீவகம்


1. முதல் நிலைத் தீவக அணி:

   பாடலில் தீவகமாக வரும் சொல்
  முதலில் வந்தால் அது முதல்நிலைத்
  தீவகம் எனப்படும்.
  
  
"சேந்தன வேந்தன் திருநெடுங்கண்,
தெவ்வேந்தர்
ஐந்து தடந்தோள்,இழிகுருதி
பாய்ந்து
திசையனைத்தும்
வீரச்சிலை பொழிந்த அம்பும்
மிசை அனைத்தும் புள் குலமும்
வீழ்ந்து."


அரசனுடைய பெரிய கண்கள்
கோபத்தால் சிவந்தன.
அவை சிவந்த அளவில் பகை
மன்னர்களுடைய பெருந்தோள்கள்
சிவந்தன.
குருதி பாய்ந்து திசைகள் அனைத்தும்
சிவந்தன.
வலிமையான வில்லால் எய்யப்பட்ட
அம்புகளும் சிவந்தன.
குருதி மேலே விழுந்ததால்
பறவைக் கூட்டங்கள் யாவும்
சிவந்தன.

இப்பாடலில் சேந்தன அதாவது 
சிவந்தன என்ற பொருளுடைய
சேந்தன என்ற முதலாவது வந்த சொல்
கண்கள் , தோள்கள், திசைகள்,
அம்புகள் ,பறவைகள் என்று அனைத்தோடும்
பொருத்திப் பொருள் கொள்ளப்பட்டுள்ளதால்
இப்பாடல் முதல் நிலைத் தீவக அணியாயிற்று.

"ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்"

      குறள் -133
      


2. இடைநிலைத்தீவக அணி:

 தீவகமாக வரும் சொல்
பாடலின் இடையில் வந்து
பிற இடங்களில் உள்ள பல
சொற்களோடு பொருத்திப்
பொருள் கொள்ளப்படுமானால்
அது இடைநிலைத் தீவக அணி எனப்படும்.

"எடுக்கும் சிலைநின்று எதிர்ந்தவரும்
கேளும்
வடுக்கொண்டு உரம் துணிய,
வாளி தொடுக்கும்
கொடையும் திருவருளும் கோடாத
செங்கோல்
நடையும் பெரும்புலவர் நா"

அரசன் தன்னை எதிர்த்தவர்களும்
அவர்களைச் சார்ந்தவர்களும் 
வடுகொண்டு கீழே விழும்படி
தான் எடுத்த அம்பிலிருந்து வில்
தொடுப்பான்.

அதனைக் கண்ட புலவர்களுடைய
நாவானது மன்னனுடைய
ஈகையையும் அருளையும்
வளையாச் செங்கோல் சிறப்பையும்
பாடல்களில் தொடுக்கும்.


இப்பாடலில் இடையில் வந்துள்ள 
தொடுக்கும் என்ற சொல்
அம்பு தொடுக்கும்
நா தொடுக்கும் என்று பாடலின்
பிற இடங்களிலும் உள்ள சொல்லோடும்
பொருத்திப் பொருள் கொள்ளப்பட்டதால்
இது இடைநிலைத் தீவக அணியாகும்.

"உண்ணாமை உள்ளது உயிர்நிலை ஊன்
அண்ணாத்தல் செய்யா தன்று"

          குறள் - 255

3. கடைநிலைத் தீவகம் அணி


"புறந்தன ,ஊரன, நீரன ,மாவின்
திறந்தன ,கொல்சேரி யவ்வே-அறத்தின்
மகனை முறைசெய்தான் மாவஞ்சியாட்டி
முகனை முறைசெய்த கண்"

நீதி வழுவாநெறி காத்தலுக்காக தன்
மகனையே தேர்க்காலிலிட்டு கொன்ற மனுநீதிச் சோழனின்
வஞ்சி மாநகரில் வாழும் தலைவியின்
முகத்தை அழகு செய்த கண்கள்
வெளியிலுள்ள மான்களின்
கண்களைப் போன்றும் 
ஊரில் உள்ள அம்புகளைப் போன்றும் 
நீரில் உள்ள தாமரை மலர்களைப்
போன்றும் 
மாமரத்தில் உள்ள வடுக்களைப் போன்றும்
கொல்லன் சேரியில் உள்ள வாள்கள்
போன்றும்
 இருக்கின்றனவாம்.


இப்பாடலில் இறுதியில் வந்துள்ள 
கண் என்ற சொல் 

புறத்தன கண்
ஊரன கண்
நீரன கண்
மாவின் திறந்தன கண்
கொல்சேரி யவ்வே கண்

என்று ஒவ்வொரு சொல்லோடும் தனித்தனியே 
இணைந்து பொருள் கொள்ளப்பட்டமையால்
இது கடைநிலைத் தீவக அணி எனப்பட்டது.

"உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும்
கள்ளுக்கில் காமத்திற் குண்டு"
                       குறள் : 1281


நினைவில் கொள்க.

ஒரு சொல் செய்யுளின் பல இடங்களிலும் உள்ள
சொற்களோடு பொருத்திப் பொருள்
கொள்ளப்படுமானால் அது தீவக அணி
எனப்படும்

தீவக அணி மூன்று வகைப்படும்.

தீவகச் சொல் பாடலின் முதலில்
வந்தால் முதல்நிலைத் தீவக அணி.

பாடலின் இடையில் வந்தால்
இடைநிலைத் தீவக அணி.

பாடலின் இறுதியில் வந்தால்
கடைநிலைத் தீவக அணி.


Comments

Popular Posts