தன்வினை பிறவினை
தன்வினை பிறவினை விளக்கம்
ஒரு செயலைத் தானே செய்வது
தன்வினை எனப்படும்.
ஒரு செயலைச் பிறரைக் கொண்டு
செய்விப்பது பிறவினை எனப்படும்.
எடுத்துக்காட்டாக சேர்வான்,சேர்ப்பான்
என்ற இரண்டு சொற்களையும் எடுத்துக்
கொள்வோம்.
தானே சேர்தலாகிய தொழிலைச்
செய்கிறான்.ஆதலால்
சேர்வான் என்பது தன்வினை.
சேர்ப்பான் என்பது வேறு
யாரையோ சேரும்படி இவன்
செய்வான் என்று பொருள்படுகிறது.
அதனால் சேர்ப்பான்
என்பது பிறவினையாயிற்று.
தன்வினை செயப்படுபொருள்
குன்றிய வினையாகவோ
செயப்படுபொருள் குன்றாத வினையாகவோ
இருக்கும்.
பிறவினை செயப்படுபொருள்
குன்றாத வினையாகவே இருக்கும்.
இப்போது செயப்படுபொருள் குன்றிய வினை ,
செயப்படுபொருள் குன்றா வினை
என்றால் என்ன என்ற கேள்வி
எழலாம்.
செயப்படு பொருளை ஏற்காத வினை
செயற்படு பொருள் குன்றிய வினை
எனப்படும்.
எதை?
யாரை?
என்ற இரண்டு
கேள்விகளுக்கு விடை தரமுடியாத
வினை செயப்படுபொருள் குன்றிய வினை
எனப்படும்.
எடுத்துக்காட்டாக
போனான் என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம்.
எதைப் போனான்?
யாரைப் போனான்?
என்று கேள்விகள் கேட்க
முடியுமா?
முடியாதல்லவா?
வாசிக்கும் போதே தவறாக இருப்பது
புரிகிறதல்லவா?
இதுதான் செயப்படுபொருள்
குன்றியவினை.
படுத்தான்
வந்தான்
சிரித்தான்
விழுந்தான்
செயப்படுபொருள் குன்றா வினை என்பது
செயப்படுபொருளை ஏற்கக்
கூடியவினை.
எழுதினேன்
உண்டேன்
அடித்தேன்.
இப்போது யாரை?
எதை?
என்ற கேள்வியைக்
கேட்டுப்பாருங்கள்.
எதை எழுதினேன்?
எதை உண்டேன்?
யாரை அடித்தேன்??
விடை கிடைக்கிறதா?
பாடம் எழுதினேன் .
தோசை உண்டேன்.
தம்பியை அடித்தேன்.
விடை சரியாக அமைகிறதல்லவா?
இது செயப்படுபொருள் குன்றா வினை.
இப்போது முதலாவது சொல்லப்பட்ட
கருத்தை நினைவுபடுத்திப்
பாருங்கள்.
வந்தான் - செயப்படுபொருள் குன்றிய வினை
அடித்தான்- செயப்படுபொருள் குன்றா வினை
ஆனால் இவை இரண்டுமே தன்வினைச்
சொற்கள்..
பிறவினைச் சொற்கள்
செயப்படுபொருள் குன்றாத
வினையாக மட்டும்தான் இருக்கும்.
அடக்கினான்- செயப்படுபொருள் குன்றா வினை
தன்வினைச் சொற்களைப்
பிறவினைச் சொற்களாக மாற்றுவது
எப்படி?
அடங்கினான் - அடக்கினான்
வருந்தினான்- வருத்தினான்்
திருந்தினான்- திருத்தினான்
நடந்தான்- நடத்தினான்
மேற்கூறப்பட்ட சொற்களில் ங்,ந்
ஆகிய மெல்லினமெய் எழுத்துகள்
க,த் என்னும் வல்லின மெய்
எழுத்தாக மாறி பிறவினை பொருளைத்
தந்துள்ளது.
ஆடினான்-ஆட்டினான்
மாறுவான்- மாற்றுவான்
வாடினான்- வாட்டினான்
இந்தச் சொற்களில் ட்,ற்,என்னும்
சொற்கள் இரட்டித்து ட்ட்,
ற்ற் என்று மாறி பிறவினையாயிற்று.
தன்வினைச் சொற்களைப் பிறவினையாக
மாற்றுவதற்கு நன்னூலார் கூறும்
விதியினைப் பார்ப்போம்.
"செய்யன் வினைவழி விப் பி
தனிவரின் செய்விஎன் ஏவல்
இணையின் ஈர்ஏவல் "
என்கிறார் நன்னூலார்.
அதாவது செய் என்னும் வினைப்பகுதியின் பின்
வி என்ற எழுத்தையோ அல்லது பி என்ற எழுத்தையோ
சேர்த்து எழுதுவோமானால் அது
அது செய்வி
என்னும் வாய்பாட்டு ஏவல் பகுதியாகக்
கருதப்படும்.
எடுத்துக்காட்டாக
செய்வி
நடப்பி
வருவி
தருவி
உண்பி
இந்த வினைகளுடன் இவ்விரு
விகுதிகளுடன் ஏதேனும் ஒன்று
தன்னுடன் தானோ அல்லது
தன்னுடன் பிறவோ இணைந்து
வருமானால் அது செய்விப்பி
என்னும் வாய்பாட்டு ஏவல் பகுதியாகக்
கொள்ளப்படும்.
அதனைத்தான் ஈரேவல் என்கிறோம்.
எடுத்துக்காட்டாக
நடப்பி. - நடப்பிப்பி
விடுவி- விடுவிப்பி
வருவி - வருவிப்பி
தருவி- தருவிப்பி
உண்பி - உண்பிப்பி
நினைவில் கொள்க
வினையின் பயன் கருத்தாவைச் சாரும்.
அதாவது தன்னையே சாருமானால்
அது தன்வினை.
வினையின் பயன் பிரிதொருவரைச்
சாருமானால் அது பிறவினை எனப்படும்.
வீழ்ந்தான்- வீழ்த்தினான்
படித்தான்- படிப்பித்தான்
ஆடினான்- ஆட்டினான்
மாறுவான்- மாற்றுவான்
செய்தான்- செய்வித்தான்
படித்தார்- படிப்பித்தார்
Comments
Post a Comment