அன்னச்சேவலே....
அன்னச்சேவலே....
கோப்பெருஞ் சோழனும் பிசிராந்தையாரும்
ஒருவரை ஒருவர் பார்க்காமலேயே
நண்பர்களாக இருந்து வந்தனர் என்பது
வரலாறு.
அதற்கு இந்தப் பாடலும் ஒரு சாட்சி.
இது தூது இலக்கியம் என்பது
பாடலை வாசித்த உடனேயே புரியும்.
தூது செல்வது சேவல்.
ஒரு மாலைப்பொழுது.மாலைஒளி
பிசிராந்தையாரை மயக்கமடைய
செய்கிறது.
நண்பனைப் பார்க்க வேண்டும் என்ற
வேட்கை உந்திக் தள்ள நிலை தடுமாறிப்
போகிறார்.
நேரில் போக முடியாத சூழல்.
என்ன செய்வது?
அதோ தொலைவில்
ஒரு அன்னச்சேவல் வருகிறதே!
அதனைத் தூதுவிட்டால் என்ன?
என்று நினைக்கிறார்.நினைத்த மாத்திரத்தில்
அன்னத்தை அழைக்க ஆரம்பித்தார்.
அன்னச் சேவல்! அன்னச்சேவல்!
ஆடுகொள் வென்றி அடுபோர் அண்ணல்
நாடுதலை அளிக்கும் ஒண்முகம்போலக்
கோடுகூடு மதியம் முகிழ்நிலா விளங்கும்
மையல்மாலை யாம் கையறுபு கரையக்
குமரிஅம் பெருநதுறை அயிரை மாந்தி
வடமலைப் பெயர்குவை ஆயின்,இடையது
சோழ நன்னாட்டுப் படியே,கோழி
உயர்நிலை மாடத்துக் குறும்பறை அசைஇ
வாயில் விடாது கோயில் புக்கு எம்
பெருங் கோக் கிள்ளி கேட்க,இரும்பிசிர்
ஆந்தை அடியுறை எனினே,மாண்ட நின்
இன்புறுபேடை அணியத் தன்
அன்புறு நன்கலம் நல்குவன் நினக்கே!
- புறநானூறு
பாடியவர் : பிசிராந்தையார்
பாடப்பட்டோன்: கோப்பருஞ்சோழன்
அன்னச்சேவலே! அன்னச்சேவலே!
போரில் வென்று நாடு காக்கும் நல் மன்னனின்
முகம் ஒளிவிவிடுவதுபோல முழுநிலா
ஒளிசிந்தி நிற்கும் மாலைப் பொழுது.
இந்த முழுநிலவும் மாலையும்
என் மன்னனை நினைவுபடுத்துகிறது.
நானோ என் நண்பனான மன்னனிடம்
செல்ல முடியாமல் இங்கே தவித்துக்
கொண்டிருக்கிறேன்.
நீயோ தென்திசை குமரிப் பெருந்துறையில்
நீராடி வடதிசை நோக்கி சென்று கொண்டிருக்கிறாய்.
போகும் வழியில் தான் உறையூர்
உள்ளது.அப்படி உறையூருக்குச்
சென்றாயானால் அங்கே உறையூரிலுள்ள
மன்னனின் உயர்மாடத்தே
நின் பேடையோடு சென்று
தங்குவாயாக.
அங்கேதான் என்மன்னன் கிள்ளி
தன் அரண்மனையில் இருப்பான்.
நீ அரண்மனையினுள் சென்று மன்னன்
காதில்விழும்படியாக பிசிராந்தையாரின்
அடியேன் வந்திருக்கிறேன் என்று
உரக்கச் சொல்.
நீ அப்படிச் சொன்னால் போதும்.
உன் பேடை அணிந்து மகிழ அணிகலன்களைத்
தந்து உன்னை சிறப்பு செய்வான் மன்னன்.
அதுதான் என் நண்பன் கோப்பெருஞ்சோழன்
பண்பு என்று தன் நண்பன்
கோப்பெருஞ்சோழன் பற்றி
பெருமையாகச் சொன்னார் பிசிராந்தையார்.
கோப்பெருஞ்சோழன் பிசிராந்தையார் இருவரும்
ஒருவரை ஒருவர் பார்க்கவில்லை என்றாலும்
ஒருவர்மீது ஒருவருக்கு பெரும் மதிப்பு
இருந்தது என்பதற்கு இந்தப்பாடல்
சாட்சி.
Comments
Post a Comment