பிரட் சீஸ் புட்லா செய்வது எப்படி?
பிரட் சீஸ் புட்லா செய்வது எப்படி?
பிரட் சீஸ் புட்லா என்ற பெயரைக் கேட்டதும் இது
ஒரு வட இந்திய உணவு வகையாகத்தான்
இருக்கும் என்பது புரிந்திருக்கும்.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு
பிரட் மேல் ஜாம் தடவி
அப்படியே டப்பாவில் அடைத்துக்
கொடுத்து அனுப்புவோம்.
வீட்டில் இருக்கும் நேரத்தில் பிரட் ஆம்லெட்
அல்லது பிரட் புரூஜி இதுதான்
பெரும்பாலான நேரங்களில் நமது
தயாரிப்பாக இருக்கும்.
ஆனால் பிரட் வைத்து வகைவகையான
பண்டங்கள் தயாரிக்கலாம்.
அவற்றுள் எனக்கு பிடித்த ஒன்று உண்டென்றால்
அது பிரட் சீஸ் புட்லா.
மும்பை ரோட்டோர கடைகளில் கிடைக்கும்
இந்தப் பிரட் பீஸ் புட்லா மணமே
அட்டகாசமாக இருக்கும்.
ஜவேரி பஜார் போன்ற பெரிய
மார்க்கெட் பக்கம் போனால் முதலாவது
நம்மைச் சுண்டி இழுப்பது பிரட் புட்லா
வாசனை தாங்க.
அந்தக் கடையைத் தாண்டி செல்லவே கால்
தடுமாறும்.
அப்படி ஒரு ஈர்ப்பு பிரட் சீஸ் புட்லாவுக்கு உண்டு.
ஒருமுறை சாப்பிட்டு ருசி
கண்டுவிட்டால் மறுபடியும் மறுபடியும்
அந்தப்பக்கம் போய் பிரட் சீஸ் புட்லா
சாப்பிட வேண்டும் என்று
ஆசை வந்துவிடும்.
பட்டரும் மல்லித்தழையும்
கலந்த ஒருவித மணமும்
மொறுமொறுவென்ற
அதன் சுவையும் நம்மை புட்லாவுக்கு
அடிமையாக்கி விடும்.
அதற்காக அடிக்கடி ஜவேரி பஜார்
போக முடியுமா என்ன?
வாங்க நாம் வீட்டிலேயே
செய்து சாப்பிடுவோம்.
புட்லா செய்வதற்குத் தேவையான பொருட்கள்:
பிரட் - ஒரு பாக்கெட்
கொத்தமல்லித்தழை -ஒரு சிறிய கட்டு
( நறுக்கியது)
பட்டர் -ஒரு பாக்கெட்( 100 கிராம்)
சீஸ்-50 கிராம்
கடலைமாவு- (200கிராம்)
உப்பு- சிறிதளவு
மஞ்சள் பொடி- அரை தேக்கரண்டி
வற்றல் பொடி- ஒரு தேக்கரண்டி
இஞ்சி பூண்டு பேஸ்ட்- ஒரு தேக்கரண்டி
சீரகப்பொடி- கால் தேக்கரண்டி
மிளகுத்தூள்-கால் தேக்கரண்டி
செய்முறை :
1.கடலை மாவினை பஜ்ஜி செய்வதற்கு
தயார் செய்வதுபோல் உப்பு,
வற்றல் பொடி ,மஞ்சள் பொடி,
இஞ்சி பூண்டு பேஸ்ட் ,சீரகப்பொடி
மிளகுத்தூள் ஆகியவற்றைப் சேர்த்து கட்டி
விழாமல் கரைத்து வைத்துக் கொள்ள
வேண்டும்.(கெட்டியாக கரைத்து
விட வேண்டாம்)
2. இப்போது தவாவை எடுத்து அடுப்பில்
வைத்து சிறிது பட்டர் தடவி
மெதுவாக சூடாக்க வேண்டும்.
3. தவா சூடாகியதும் இரண்டு பிரட்
எடுத்து கடலை மாவில் இரண்டு
பக்கமும் மாவு ஒட்டும் படி முக்கி
எடுத்து தவாவில் வைக்கவும் .
அடுப்பு நிதானமாக எரியட்டும்.
4. பிரட்டின் மேல் பக்கத்தில்
ஒரு கையளவு கொத்தமல்லித்தழை
எடுத்து பிரட்
முழுவதும் சமமாகத் தூவ வேண்டும்.
5. . சற்று வெந்ததும் பிரட்டைத் திரும்பிப்
போட்டு ஒரு தேக்கரண்டி பட்டர் எடுத்து
மேல் பக்கம் முழுவதும் தடவ வேண்டும்.
6. சற்று பட்டர் உருகியதும் மறுபடியும்
திருப்பிப் போட்டு கொத்தமல்லித்
தழை தூவிய பக்கம் அரை தேக்கரண்டி
பட்டர் தடவி மறுபடியும் திரும்பிப்
போட்டு சூடு பண்ண வேண்டும்.
7.. ஓரளவு இண்டுபக்கமும் பட்டரில் வெந்ததும்
இரண்டு பிரட்களிலும்
கொத்தமல்லித் தழை உள்ள பக்கங்களில்
சீஸ் துருவிப் போட வேண்டும்.
8. இப்போது சீஸ் போடப்பட்ட
பக்கம் இரண்டையும்
சேர்த்து ஒன்றுபோல் வைத்து
தவாவில் வைத்து சூடு
பண்ண வேண்டும்.
8. இப்போது திரும்பிப் போடும்போது
மறுபடியும் மேல் பக்கமும்
கீழ்ப்பக்கமும் அரை தேக்கரண்டி
பட்டர் தடவி
இரண்டுமுறை மேலும்
கீழும் தவாவில் திரும்பிப்
போட்டு போட்டு
எடுத்து வைத்தால்
பிரட் சீஸ் புட்லா ரெடி.
( கருகவிட்டு விடக்கூடாது )
9. நான்காக கட் பண்ணி
வைத்து தக்காளி சாஸ்,
கொத்தமல்லிச் சட்னி
வைத்துப் பரிமாறுங்கள்.
புளிப்பும் காரமுமான இந்த
இரண்டு சட்னிகளும்
பிரட் சீஸ் புட்லாவோடு
வைத்துத் தொட்டு
சாப்பிட்டால்....ஐயோ போங்க
இப்பவே சாப்பிட வேண்டும் போல்
தோணுதே!
பட்டர் - சீஸ் -கொத்தமல்லி
சேர்ந்த மணமும்
கடலை மாவின் மொறுமொறுப்பும்
அப்பப்பா.... அட்டகாசமாக இருக்கும்.
கிரீன் சட்னி,
ரெட் சட்னி காம்பினேசன்
பிரட் சீஸ் புட்லாவைத் தூக்கிவிடும்.
செய்து கொடுத்து அசத்துங்க.
அன்பை அள்ளுங்க.
Comments
Post a Comment