முட்டுவேன் கொல் தாக்குவேன் கொல்?

  முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்?


காத்திருப்பதை மாதிரி
கொடுமை வேறு எதுவும் இருக்க முடியாது.
காத்திருக்கும் போது ஒவ்வொரு வினாடி 
கழிவதும் ஒரு யுகம்
கழிவது போல இருக்கும்.
சாதாரணமாக ஒரு பேருந்து நிலையத்தில்
காத்திருக்கிறோம்.
ஒரு அரைமணி நேரம் பேருந்து
வரவில்லையென்றால் போதும்.
ஒரு மாதிரியாக
அங்குமிங்கும் நெளிய ஆரம்பித்துவிடுவோம்.
கூடவே இந்தப் பாழாய்ப் போன பேருந்து
எங்கே போய் தொலைந்தது என்று
பேருந்தை அர்ச்சனை செய்யத்
தொடங்கி விடுவோம்.
மணிக்கணக்கில் தொலைக்காட்சி முன்
இருப்போம்.
ஆனால் எதிர்பார்ப்போடு யாரோ 
ஒருவருக்காகக் காத்திருக்கும்போதுதான்
காத்திருப்பது மாதிரி கொடுமை
வேறு எதுவும் இல்லை என்பதை
உணருவோம்.

அதுவும் ஒரு எதிர்பார்ப்போடு
காத்திருக்கும் போது அது
நடைபெறாமல் போய்விடுமோ ?
ஏமாந்து போய்விடுவோமோ ?என்ற நினைப்பு
வந்து எட்டிப்பார்த்து நம்மைப் புலம்ப
வைக்கும்.உடலெல்லாம் வியர்க்கும்.


நாலு மணிக்கு வருகிறேன் என்று
சொல்லிச்சென்ற கணவர் நாலரை வரை 
வரவில்லை என்றால் ஒருமாதிரி
அலைமோதுவோமே அந்த அலைமோதல்
புலம்பல் எல்லாம் பார்ப்பவர்களுக்கு
வேடிக்கையாக இருக்கலாம்.

அந்த வலியை உணர்ந்தவர்களுக்குத்தான்
அந்த நேரத்தின் கொடுமை புரியும்.
மனம் தப்புத் தப்பாக கணக்குப்போடும்.
இதுக்குப் போய் இந்த அலட்டு அலட்டுறாளே என்று
சாதாரணமாக சொல்லிவிடலாம்.
யாருக்குத் தெரியும் காத்திருப்பின் வலியும்
அதன் பின்னணியில் ஓடும்
மனவோட்டமும்?

கடற்கரையில் காதலன் வருகைக்காகக்
காத்திருக்கிறாள் காதலி.
கடற்காற்று இதமாக வருடிச் செல்கிறது.
அந்த இனிமையைக் கொண்டாட
மனம் வருமா?

காற்றின் மீதே கோபம்
வரும்.
நேரங்காலம் தெரியாமல் இந்தக் காற்று
வேறு வீசி என்னை துன்பப்படுத்துகிறதே
என்று  காற்றின் மீது 
எரிச்சலடைவாள் காதலி.
அந்த நேரத்தில் கடற்கரையில் 
சுண்டல் விற்கும்
சிறுவன்  அக்கா சுண்டல்
என்று சொல்லிவிட்டால் போதும்.
கையில் கிடைத்ததைத் தூக்கி வீச
வேண்டும் போல் தோணும்.
இது எல்லாம் எதனால்?
பித்தம் தலைக்கேறி விட்டதா
என்று கேட்கத் தோன்றும்.

காத்திருப்பதின் வலிதாங்க
இத்தனைப் புலம்பலுக்கும் 
கோபத்திற்கும் காரணமாக
அமைகிறது.

வீசுகிற தென்றல் மீது கோபம்.
பூத்துக் குலுங்கும் மரங்களின் மீது
கோபம்.
மலர்ந்து நிற்கும் மலர்களின்மீது கோபம்.
சில்லென்று மேனியில் பட்டு
சிலிர்க்க வைக்கும் பனியின் மீது கோபம்.
பனித்துளியை வாங்கி நிற்கும்
புல்லின் மீது கோபம்.
கூவித்திரியும் குயில்கள் மீது கோபம்.
பறந்து திரியும் பறவையைப் 
பார்த்தால் கோபம்.
யார் மகிழ்ச்சியாக இருப்பதையும்
ஏற்றுக்கொள்ள மனம் மறுக்கிறது.

நான் மகிழ்ச்சியாக இல்லையே!
என்னை கிண்டல் செய்வதற்காகத்தான்
நீங்கள் எல்லாம்  மகிழ்ந்து திரிகிறீர்களா?
என்று மனம் தப்புத் தப்பாகக் கணக்குப்
போடுகிறது.
இந்தத் தப்புக்கணக்கும் கோபமும்
இன்று நேற்று நடப்பவை அல்ல.
சங்க இலக்கியத்திலேயே 
இவை எல்லாம் நடைபெற்றிருக்கிறது.
அதனைப் புலவர்கள் பதிவு செய்துள்ளனர்.

குறுந்தொகையில் ஒரு தலைவிக்கு
இப்படியொரு கோபம் வந்திருக்கிறது.
காரணம் பொருள் தேடச் சென்ற
தலைவன் திரும்பி வருவதாகச்
சொல்லிச் சென்ற நாட்களுக்குள்
திரும்பி வரவில்லையாம்.
பிரிவுத் துன்பம் வாட்டுகிறது.
தோழியிடம் சொல்லிச் சொல்லிப் 
புலம்புகிறாள். 


கோபத்தில் என்னவெல்லாம் பேசுகிறாள்
பாருங்கள்.
பாடலைப் படியுங்கள் புரியும்.
கூடவே சிரிப்பும் வரும்.
பரிதாபமாகவும் இருக்கும்.

"முட்டுவேன் கொல்? தாக்குவேன் கொல்?
ஓரேன்! யானும் ஓர் பெற்றி மேலிட்டு
ஆ அ ஒல் எனக் கூவுவேன் கொல்
அலமர  லசைவளி யலைப்ப என்
உயவு நோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே"
                          - குறுந்தொகை.

பாடியவர் யார் தெரியுமா?
நம்ம ஔவை தாங்க...

ஔவையாரைப் பற்றி நாம்
கட்டமைத்து வைத்திருந்த உருவத்தையெல்லாம்
உடைத்து காதல் உணர்வை கவித்துவத்தோடு
எழுதி நமக்கு இலக்கிய 
விருந்து படைத்திருக்கிறார் ஔவை.

முட்டுவேன் கொல்?
யாரை முட்டுவாளாம்?

தாக்குவேன் கொல்..... ?
அடேங்கப்பா சற்று விலகிக்
கொள்ள வேண்டியதுதான். நம்மைத்
தாக்கிவிடப் போகிறாள்.

அதோடு விட்டு விட்டாளா?
ஆ...அ..ஓல்  எனக் கூவுவேன் கொல்?
 
ஏம்மா...எதற்காக இந்தக் கூச்சல்
என்று கேட்கிறீர்களா?

அவளுக்கு தன் தலைவன் பிரிந்து
சென்றதால் ஏற்படும் காதல் நோய்
வந்துவிட்டதாம்.
அது தெரியாமல் ஊர் மக்கள் எல்லாம்
உறங்கிக் கொண்டிருக்கிறார்களாம்.
அதனால் ஊர்மக்கள் மீது கோபமாம்.
நான் தூக்கமில்லாமல் கிடக்கிறேன்.
நீங்கள் எல்லாம் நிம்மதியாகத் 
தூங்குகிறீர்கள்.

இது என்ன ஞாயம்?
தூங்க விடுவேனா?
முட்டுவேன் .தாக்குவேன்
ஆ...ஓ..என்று கூச்சலிட்டுவேன்.
உங்களைத் தூங்க விடமாட்டேன்.

எத்துணைக் கோபம் இந்தப்
பெண்ணுக்கு?
 கோபத்தின் வெளிப்பாடுதான் இந்த
முட்டலும் முனங்கலும் 
தாக்கலும் கூச்சலும்.

பிரிவினால் ஏற்பட்ட வலி.
அதனால் அவள் படும்பாடு.
அதற்காக அவள் ஊர் மக்கள் மீது
கொள்ளும் கோபம்.
கேட்கவே வேடிக்கையாக இருக்கிறதல்லவா!
கூடவே ஐயோ...பாவம் என்று
ஒரு பரிதாபத்தையும் அள்ளிக்
கொள்கிறாள் அந்தப் பெண்.

பிரிவு கொடுக்கும் வலி.
அதனை 
வெளிப்படுத்துவதற்காக ஔவை  கையாண்ட
சொற்கள் .
அடேங்கப்பா.....
ஔவையா காதல் உணர்வை இப்படி
வெளிப்படுத்தி இருக்கிறார்?

மூட்டுவேன் கொல்?
தாங்குவேன் கொல்?
ஆ அ ஒல் எனக் கூவுவேன் கொல்?

நம்மைக் காலத்திற்கும்
தூங்கவிடாது முட்டும். 
மோதும்.
காதுள்ளேயே வந்து கூச்சலிட்டு
எழுப்பும்  .
எளிய சொற்கள்.
அழகிய காட்சி.
உணர்வுக்கான மொழி...

மனசுக்குள்ளேயே நிற்கும்
அருமையான பாடல் இல்லையா!


Comments

Popular Posts