பணிநிறைவுப் பாராட்டு மடல்

      பணிநிறைவுப் பாராட்டு மடல்

  

                  திருமிகு. அ.    செல்வகணேசன்  B.Sc ,B.Ed,
                           பொறுப்பாசிரியர்,
                           திலக் நகர் மாநகராட்சித் தமிழ்ப்பள்ளி,
                           மும்பை.

பணி நாள் : 04. 12.1989.                                          ஓய்வு :.   31. 03.2022

அலையாடு எல்லை நகர்க்குமரி அருகமை

கலையாடு தொல்புகழ் செட்டிகுளம்பண்ணை

துறையாடு நல்லார் அருணாசலம் நாடார்

மனையாடு தங்கக்கனி யம்மாள் மடியாடி

வினையாட மும்பை வந்தார் செல்வகணேசன்!


அகரம் சொன்னது பண்ணையூர் இந்து நடுநிலைப்பள்ளி

சிகரம் கொடுத்தது செட்டிகுளம் அரசுஉயர்நிலைப்பள்ளி

உயரும் இளங்கலை தந்தது ஆதித்தனார் கலைக்கல்லூரி

பகரும் ஆசிரியர் பட்டயப்படிப்பு தந்தது வ.உ.சி கல்லூரி

நிகரில்லா பெருமை தந்தது மும்பைத் தமிழ்ப்பள்ளி!


இல்லறப்பணி  இனியதோர் இன்பக் களப்பணி

களப்பணி சாட்சியாய் மக்கள் இருவரணி

தேரணிக்குத்  தாரணியாய்க் கிடைத்த நல்லணி

முற்போக்குக் கூட்டணி யமைத்த மனைவி

வெற்றியணி தேரிழுக்க வந்த விவேகப் பெண்மணி!


முதலடி வைத்தது சஹாஜி நகர்த் தமிழ்ப்பள்ளி

குறளடி வேண்டுமென்றது ஜோகலேகர் தமிழ்ப்பள்ளி

சிந்தடிக்குச் செவிமடுத்தது கே டி காய்க்வாட் தமிழ்ப்பள்ளி

அளவடிக்காய் அடம்பிடித்தது எஸ் எல் ரோடு தமிழ்ப்பள்ளி

கழிநெடிலடியாய்  இனிமை சேர்த்தது திலக்நகர்பள்ளி!


கற்றவர் போற்றிடும் நற்றிணையே

கற்பவர்  யாவர்க்கும் நற்றுணையானவன் நீயே

உற்றவர் எவர்க்கும் சொற்றுணை கணேசனே!

பற்றினை பள்ளியில் வைத்தனை யாதலால்

பகரரும் நல்லாசிரிய விருதும் கொண்டனையே!


மாநகராட்சியில் உம்பணி ஆண்டு இருபதினாறு

பொய்யாது பாய்ந்த பைந்தமிழ்ப் பாலாறு

தொய்யாது ஓடிய இந்தச் செந்தமிழ் பேராறு

சங்கமமாகி சரித்திரமாகிய நாள் இதுவரலாறு-என்று

மெய்யாய் எழுதிச் செல்லும் தமிழ்வரலாறு!


ஓய்விலும் நின்பணி தொடர்ந்திடல் வேண்டும்

ஓயாது அறப்பணி நடந்திடல் வேண்டும்

எண்ணும்  செயல் யாவும் ஈடேற வேண்டும்

பண்ணும் பாவும்போல வாழ்வு இனித்திட வேண்டும்

விண்ணும் மண்ணும்போல நெடுநாள் நிலைத்திட வேண்டும்!


களிப்புகள் பெருகி செழிப்பினில் திளைத்து

குன்றென புகழ் வந்து அணிசெய வேண்டும்

நன்றென நாட்கள் நலம்தர வேண்டும்

என்றனை என்றும்  நினைத்திட வேண்டும்-காசினி

வந்தனை தந்துனை வாழ்ந்திட வேண்டும்.!

                                     -   செல்வபாய் ஜெயராஜ்

Comments

Popular Posts