பாவ் பாஜி செய்வது எப்படி?
பாவ் பாஜி செய்வது எப்படி?
பாவ் பாஜி என்ற பெயரைக் கேட்டதுமே
இப்போதே தின்ன வேண்டும் போல்
நாக்கில் எச்சில் ஊறும்.
அதன் மணமும் சுவையும் நம்மை அப்படியே
கட்டிப்போட்டு விடும்.
வேறு எந்த உணவுக்கும் இல்லாத
ஈர்ப்புசக்தி பாவ் பாஜிக்கு உண்டு.
ஊரில் இருக்கும்போது இது எதுவும்
தெரியாது.
தோசை, இட்லியை தவிர
வேறு என்ன தெரிந்திருக்கும் என்று
நினைப்பீர்கள்.
உண்மையும் அதுதான்.
மும்பை கற்றுக்கொடுத்தவை
ஏராளம்.
எங்கு சென்றாலும் உணவுதானே முதல்
தேவை. அந்தத் தேவையை நாடிச் செல்லும்போது
என்னை ஈர்த்ததுதான்
இந்த பாவ் பாஜி.
சாதாரணமான ஒரு ஹோட்டலுக்குள் சென்றால்
நீங்கள் ஏதோ ஒன்று சாப்பிட்டுவிட்டு
வர வேண்டும் என்று நினைத்து சென்றிருப்பீர்கள்.
ஆனால் ஹோட்டல் வாசலுக்கு
அருகில் வெளியிலேயே
ஒரு மசாலா தயாராகிக் கொண்டிருக்கும்.
அதன் மணம் உங்களை அந்தப்பக்கம்
திரும்பிப் பார்க்க வைக்கும்.
ஹோட்டலுக்குள் சென்று உட்கார்ந்ததும்
ஒரு பிளேட் பாவ்பாஜி என்றுதான்
ஆர்டர் பண்ணுவோம்.
அந்த அளவுக்கு அதன் மணம்
நம்மைத் தன்பக்கம் இழுக்கும்.
மணம் மட்டும்தானா?
சுவை ....அப்பப்பா..
வெறும் பாவுக்கு எப்படி இத்தனை
சுவையூட்ட முடிந்தது?
என்று நினைத்து வட இந்தியர்களை வெகுவாகப்
பாராட்டியிருக்கிறேன்.
அதன் சுவை மறுபடியும் மறுபடியும்
பாவ் பாஜி கடைப்பக்கம் என்னை ஓட
வைத்தது.
ஒருநாள் நாமும் அப்படி
ஒரு மசாலாவை வீட்டில்
செய்தால் என்ன என்ற கேள்வி எழுந்தது.
முயன்றால் முடியாதது ஏதும் உண்டா?
முயற்சி செய்து பார்த்தேன்.
முதன்முறை செய்யும் போது
அதிக காரமாகிவிட்டது
அடுத்தமுறை காய்கறிகள் அதிகமானதால்
சரியான கலர் கிடைக்கவில்லை.
எப்படியோ செதுக்கிச் செதுக்கி
ஓரளவு சுவையைக் கொண்டுவந்து விட்டேன்
என்று வீட்டிலுள்ளவர்களிடம் சான்றிதழ்
வாங்கிவிட்டேன்.
ஹோட்டலில்
ஒரு பிளேட் (இரண்டு பாவு மட்டும்)
நூறு ரூபாய்க்கும் அதிகம்.
வீட்டில் செய்தால் செலவும் குறைவு.
நீங்களும் செய்து பார்க்கலாமே
இதோ உங்களுக்காக:
தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - இரண்டு
(அவித்து தோல் உரித்து வைக்கவும்)
பச்சை பட்டாணி - இரண்டு கையளவு
கேரட்- அரை கப் (நறுக்கியது)
காலிப்பிளவர் - ஒரு கப்
வெங்காயம் - மூன்று (நறுக்கியது)
குடமிளகாய்- ஒன்றரை கப் (நறுக்கியது)
தக்காளி - இரண்டு கப் கப்(நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது- இரண்டு தேக்கரண்டி
கொத்தமல்லி தழை- இரண்டு கையளவு(நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
பட்டர் - நூறுகிராம்
வற்றல் பொடி- ஒரு தேக்கரண்டி
பாவ் பாஜி மசாலா பொடி - இரண்டு தேக்கரண்டி
(கடைகளில் கிடைக்கும்)
கரம் மசாலா பொடி - அரை தேக்கரண்டி
பாவ் - பத்து
எலுமிச்சை -இரண்டு
வற்றல் -ஆறு
வற்றல் பொடி- ஒரு தேக்கரண்டி
வற்றலை உள்ளே இருக்கும் விதைகளை
எடுத்துவிட்டு வெறும் தோலை நன்கு
ஊறவைத்து
பின்னர் அதனை மையாக அரைத்துத்
தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அப்போதுதான் கலர் கிடைக்கும்.
செய்முறை:
பட்டாணி,கேரட், காலிபிளவர்
எல்லாவற்றையும் மொத்தமாக போட்டு
அவித்து
எடுத்து வைத்துக் வைத்துக்
கொள்ளுங்கள்.
சூடு ஆறியதும் நன்றாக மசித்து
வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது வாணலியில் சிறிது பட்டர் போட்டு
தக்காளியைப் போட்டு வதக்க
வேண்டும்.
அத்தோடு இஞ்சி பூண்டு விழுது
சேர்க்க வேண்டும். கூடவே
உப்பு போட்டுக் கொள்ளுங்கள்.
நன்றாக வதங்கட்டும்.
பின்னர் குடமிளகாயைப்போட்டு
சிறிது தண்ணீர்விட்டு வேக விடுங்கள்.
பின்னர் வற்றல் அரைத்து வைத்ததைப்
போட வேண்டும்.இப்போது
கரம் மசாலாவையும் போடுங்கள்.
மசாலா வாடை போகும்வரை வதக்கிவிட்டு
மறுபடியும்
ஒரு கரண்டி பட்டர் போட்டு வதக்குங்கள்.
பின்னர் காய்கறி மசியலைக் கொட்டி
தண்ணீர் தெளித்து தெளித்து வதக்கவும்.
இப்போது பாவ் பாஜி மசாலாவைப் போடவும்
மல்லித்தழை ஒரு கையளவு
போட்டு வதக்கிக் கொண்டே இருங்கள்.
இப்போது வேக வைத்து வைத்த
உருளைக்கிழங்கையும்
மசித்துப்போட்டு மத்தால்
மேலும் நன்றாக மசிய வைக்க வேண்டும்.
மசாலா காய்கறியோடு நன்றாக
ஈர்க்கப்பட வேண்டும்.உப்பு ,காரம்
பார்க்க வேண்டும்.
பட்டர் காரத்தைக் குறைத்துவிடும்.
காரம் குறைவாக இருந்தால்
கூடவே மறுபடியும்
ஒரு தேக்கரண்டி வற்றல் பொடி போடுங்கள்.
பதம் வரும்வரை
மசித்து மசித்து கூடவே மீதி இருக்கும்
மல்லித்தழையையும்
பட்டரையும் போட வேண்டும்.
பட்டரும் மசாலாவும் தனித்தனியாக
பிரிந்து போகும் அளவிற்கு வதக்க வேண்டும்.
பின்னர் மீதிஇருக்கும்
மல்லித்தழையையும் போட்டு
அடுப்பை அணைத்து விடுங்கள்.
ஒரு எலுமிச்சையிலிருந்து சாறு
பிழிந்து கலந்து கிளறிவிடவும்.
மேலே நறுக்கி வைத்த வெங்காயம்
சிறிது கொத்தமல்லித்தழை தூவி
அலங்கரித்து எடுத்து வைத்தால்
சுவையான பாவ் பாஜி ரெடி.
அடுத்து தனியாக
ஒரு வாணலியில்
சிறிது பட்டர் போட்டு
பாவை இரண்டாக கீறி வைத்து
மேலும் கீழும் பிரட்டி எடுக்க
வேண்டும்.
இப்போது ஒரு தட்டில் இரண்டு பாவும்
சிறிது பாவுபாஜியும் வைத்து
பாவுபாஜிமீது பொடியாக நறுக்கி
வைத்த வெங்காயத்தைத் தூவி
ஒரு சிறிய துண்டு எலுமிச்சையையும்
வைத்துப் பரிமாறுங்கள்.
மணமும் கலரும் அசத்தும்.
அட்டகாசமான பாவுபாஜி வீட்டிலேயே ரெடி.
ஒருமுறை வீட்டில் செய்து
பழகிவிட்டால் மறுபடியும் மறுபடியும்
நாக்கு கேட்கும்.
செய்து கொடுத்து அசத்துங்கள்.
Comments
Post a Comment