கொண்டைக்கடலை குருமா செய்வது எப்படி?

கொண்டைக்கடலை  குருமா செய்வது எப்படி?

ஆப்பம் என்றால் கொண்டைக்கடலை குருமா வேண்டும்.
ஆப்பத்திற்குக் கொண்டைக்கடலைக்
குருமாதான் முதல் தேர்வு.
மற்றவை எல்லாம் இரண்டாம் தரம்தான்.

ஆப்பம் சுட்டுப் பழகியாகிவிட்டது
குருமா வைக்கத் தெரியாவிட்டால் எப்படி?
ஆப்பம் தின்ற திருப்தியே இல்லையே!

கொண்டைக்கடலை குருமாவோடு
ஆப்பம் சாப்பிடவில்லை என்றால்....

கொண்டைக் கடலைக் குருமாவோடு ஆப்பம்
தின்றால்தான் ஆப்பம் தின்ற முழு திருப்தியும்
கிடைக்கும்.

கொண்டைக்கடலைக் குருமா எப்படிச்
செய்வது என்று பார்ப்போமா?

கொண்டைக்கடலைக் குருமா செய்ய
தேவையான பொருட்கள்:

கொண்டைக்கடலை - இரண்டு கப்
(ஊற வைத்தது)
தக்காளி - மூன்று
வெங்காயம்- மூன்று
மிளகாய்த்தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலாத் தூள் - ஒரு தேக்கரண்டி
மல்லித் தூள் - அரை தேக்கரண்டி
சென்னா மசாலாத்தூள் - ஒன்றரை தேக்கரண்டி
இஞ்சிப் பூண்டு விழுது -ஒரு தேக்கரண்டி
முந்திரிப் பருப்பு- ஐந்து
தேங்காய் - துருவியது (ஒரு கையளவு மட்டும்)
பட்டை-சிறிய துண்டு
கிராம்பு- நான்கு
கசகசா- கால் தேக்கரண்டி(ஊற வைத்தது)
பெருஞ்சீரகம்- அரை தேக்கரண்டி
கொத்தமல்லி இலை- ஒரு கையளவு (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய்- மூன்று
அரை கைப்பிடி கஸ்தூரி மெய்த்தி

முதலாவது ஊற வைத்து எடுத்து
வைத்திருக்கும் கொண்டைக்கடலையை
நன்றாக வேக வைத்து எடுத்து வைத்துக்
கொள்ளுங்கள்.

தக்காளியை பொடியாக வெட்டிய
வைத்துக் கொள்ளுங்கள்.

வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டி
எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

இரண்டு பச்சை மிளகாயை நீளவாக்கில்
கீறி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

தேங்காய்த் துருவல்,முந்திரிப் பருப்பு
கசகசா மூன்றையும் அரைத்து எடுத்து
வைத்துக் கொள்ளுங்கள்.

அடுப்பில் கடாயை வைத்து
தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்
 பட்டை, கிராம்பு போட்டு வதக்கவும்.
 பின்னர் பெருஞ்சீரகம் போட்டுப்
 பொரிந்ததும் வெங்காயத்தைப் போட்டு வதக்குங்கள்.
 வெங்காயம் சற்று வதங்கியதும்
 தக்காளியைப் போட்டு வதக்குங்கள்.
 கூடவே மிளகாய் வெட்டி வைத்ததைப்
 போடுங்கள்.
 தக்காளியைப் போட்டதும் சிறிது உப்பு 
 போட்டுவிட வேண்டும்.
 அப்போதுதான் தக்காளி நன்றாக வதங்கும்.
  தக்காளி வதங்கும் போதே
  இஞ்சி பூண்டு விழுது சேர்த்து
  அடிபிடிக்காமல் வதக்க வேண்டும்.

இப்போது மிளகாய்த்தூள்,கொத்தமல்லித்தூள்,கரம்
மசாலாத்தூள்,சென்னா மசாலாத்தூள்
மஞ்சள்தூள் என்று ஒவ்வொன்றாகப் போட
 வேண்டும்.
அடிபிடித்துவிடக்கூடாது. சிறிது
எண்ணெய் கூடுதலாக ஊற்றி வதக்குங்கள்.
ஒரு நிமிடத்திற்கு மேல் மசாலாப்
பொடிகளை வதக்க வேண்டாம்.

இப்போது அவித்து வைத்திருக்கும்
கொண்டைக்கடலையை ஒருகை எடுத்துக்
தனியாக வைத்துவிட்டு
மீதியை வாணலியில் போட்டு சிறிது
தண்ணீர் ஊற்றி மசாலாவோடு கொதிக்க
விடுங்கள்.
கொதிக்கும்போதே 
கொத்தமல்லி இலை உப்பு
அரைத்து வைத்த தேங்காய் 
முந்திரி கசகசா விழுது சேர்த்து
கொதிக்கவிட வேண்டும்.

இப்போது தனியாக எடுத்து வைத்திருக்கும்
கொண்டைக்கடலையை மிக்சியில் போட்டு
மூன்று சுற்று சுற்றி கொதிக்கும் மசாலாவோடுப்
போடுங்கள்.

கடைசியாக அரை தேக்கரண்டி 
கஸ்தூரி மெய்த்தி கையில் எடுத்து
கசக்கிக் போட்டு இறக்கி வைத்து
விடுங்கள்.
கமகமக்கும் கொண்டைக்கடலைக் 
குருமா ரெடி.
ஆப்பத்தோடு வைத்து சாப்பிடுங்கள்.
ருசி அட்டகாசமாக இருக்கும்.

மறுபடியும் மறுபடியும் வேண்டும் 
என்று நாக்கு
சொல்லும்.
கொண்டைக்கடலைக் குருமாவும்
ஆப்பமும் செய்து கொடுத்து
அனைவரின் அன்பையும் அள்ளுங்கள்.







Comments

Popular Posts