எடுத்துக்காட்டு உவமை அணி

   எடுத்துக்காட்டு உவமை அணி


உவமையும் உவமேயமும் தனித்தனித்
தொடர்களாக வந்து அவ்விரண்டையும்
இணைக்கின்ற உவம உருபு
வெளிப்படாமல் மறைந்து நின்று
பொருள் தருமானால் அது
எடுத்துக்காட்டு உவமை அணி எனப்படும்.


தெரிந்த ஒரு பொருளைக் கொண்டு தெரியாத
ஒரு பொருள் விளக்கப்படுகிறது.
ஆனால் உவம உருபு 
காணப்படவில்லை.


"பண்ணெண்ணாம் பாடற் கியைபின்றேல் கண்ணென்னாம்
கண்ணோட்டம் இல்லாத கண்"

இந்தக் குறளில்,

பாடலோடு பொருந்தவில்லை என்றால்
இசையால் என்ன பயன்?
அதுபோல இரக்கம் இல்லை என்றால் 
கண்களால் என்ன பயன்?
என்று கேட்டிருக்க வேண்டும்.

ஆனால் இங்கே 'போல 'என்ற உவம உருபு
மறைந்து நின்று
பாடலோடு பொருந்தவில்லை என்றால் 
இசையால் என்ன பயன்?
இரக்கம் இல்லை என்றால் கண்களால்
என்ன பயன் ?
என்று மட்டும் சொல்லப்பட்டுள்ளது.

'போல' என்ற உவம உருபு 
மறைந்து நின்று அதற்கான பொருளை
விளக்குகிறது.


இங்கே,

உவமை -  பாடலோடு பொருந்தாத இசை
உவமேயம்-  இரக்கம் இல்லாத கண்கள்
உவம உருபு-   போல (மறைந்து வந்துள்ளது)

உவமைக்கும் உவமேயத்திற்கும்
இடையே உள்ள உவம உருபு மறைந்து
நின்று பாடலின் பொருளை விளக்குகிறது. 
இவ்வாறு வருவது எடுத்துக்காட்டு
உவமை அணியாகும்.

அடுத்து இன்னொரு பாடலைப்
பார்ப்போம்.

தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு
கற்றனைத் தூறும் அறிவு

மணற்கேணியை எவ்வளவு ஆழமாகத்
தோண்டுகிறோமோ அதற்கேற்ப நீர்
ஊற்று இருக்கும்
(அதுபோல )மனிதன் எவ்வளவுக்கவ்வளவு 
கற்கின்றானோ அதற்கு ஏற்ப
அறிவு பெருகும்.

இங்கேயும் 'போல' என்ற உருபு
 மறைந்து வந்துள்ளதால்
இந்தக் குறளும் எடுத்துக்காட்டு உவமை அணியாகும்.


உவமை அணிக்கும்
எடுத்துக்காட்டு உவமை அணிக்கும்
ஒரு சிறிய வேறுபாடு மட்டுமே உண்டு.

நினைவில் கொள்க

உவமைக்கும் உவமேயத்திற்கும் இடையில்
உவம உருபு வெளிப்படையாக வருவது
உவமை அணி.

உவமைக்கும் உவமேயத்திற்கும் இடையில்
உவம உருபு மறைந்து வருவது 
எடுத்துக்காட்டு உவமை அணி.

Comments

Popular Posts