கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி

போலச் செய்தல் சிறுபிள்ளகள்

செய்யும் செயல்.

நாம் என்ன செய்கிறோமோ அதை அப்படியே 

செய்து காட்ட நினைப்பது

குழந்தைகளின் இயல்பு.

அது வேடிக்கையாக இருக்கும்.

அதுதான் அவர்களுக்குப்

 படிப்பினையாகவும்

இருக்கும்.


அதுபோல நாமும் பிறரைப் போல

நடக்க வேண்டும் என்று முயற்சிப்போம்.

அது நல்லதா கெட்டதா என்பது

செய்யும் செயலைப் பொறுத்தே

அமையும்.


எல்லா இடங்களிலும் இந்தப்

போலச் செய்தல் எடுபடாது.


ஒவ்வாத ஒரு செயலை 

பிறரைப் போல செய்ய நினைத்தால்

பிறருடைய பார்வைக்கு அது 

நகைச்சுவையாகதான்

இருக்கும். எப்போதுமே நாம்

நாமாக இருப்பதுதான் நல்லது.

 அப்போதுதான்

நம் தனித்தன்மை வெளிப்படும்.


ஒரு பேச்சாளர் இன்னொரு பேச்சாளர் போல

பேச நினைத்தால் அவர் தோற்றுத்தான் 

போவார்.

நமது எழுத்தோ அல்லது பேச்சோ 

யாரைப் போன்றும் இருக்கக்

கூடாது.

அவரைப்போல இவரைப் போல

என்று ஒன்றிரண்டு படித்து

வைத்துவிட்டுச் பேசவோ எழுதவோ

 நினைத்தால் நாம் நினைப்பதை

வார்த்தைகளில் கொண்டு வர முடியாது.

 

இப்போது கவிதைக்கு வருவோம்.

ஒருவருக்குக் கவிதை பாட 

ஆசையாம்.  புகழ்பெற்ற புலவர் ஒருவரின்

கவிதையை மனப்பாடம் செய்து

வைத்துக்கொண்டார்.

அவ்வாறு தான் மனப்பாடம்

செய்து வைத்திருந்த கவிதையை

 தான் எழுதியது போல 

 பெருமையாக வாசித்து நின்றாராம்.

அது இயல்பாக இருக்குமா?


கவிதை உச்சரிப்பும் 

பாவனைகளும் எந்தெந்த இடங்களில்

நிறுத்த வேண்டும்.

எந்தெந்தச் சொற்களைச்

சேர்த்துப் படிக்க வேண்டும்

என்பது கவிதையை எழுதியவருக்கு

மட்டுமே தெரியும்.


இந்தக் கவிதையைக் கேட்ட ஒருவருக்கு

சட்டென்று இன்னொரு நினைப்பு

வந்திருக்கிறது.

அது என்ன நினைப்பு

என்று கேட்கிறீர்களா?


இதோ பாடலைக் கேளுங்கள்

உங்களுக்கே புரியும்.

"கான மயிலாடக் கண்டிருந்த 

வான்கோழி

தானு மதுவாகப் பாவித்துத்-

தானுந்தன்

பொல்லாப் சிறகைவிரித் தாடினாற்

போலுமே

கல்லாதான் கற்ற கவி"


 மூதுரை - பாடல் - 14



"கல்வி அறிவில்லாத  ஒருவன்

பிறர் எழுதிய கவிதையை

மனப்பாடம் செய்துகொண்டு

தான் எழுதியதாக பிறர் 

முன்னால் வாசித்து நிற்கிறானே

இது எப்படி இருக்கிறது தெரியுமா?

காட்டில்  மயில் தோகை விரித்து ஆடுவதைப்

பார்த்து நானும் அதுபோல் ஆடுவேன் என்று

ஒரு வான்கோழியானது

தன் அழகில்லாதத் தோகையை

விரித்து  ஆடுவதுபோல

 இருக்கிறது"

என்கிறார் ஔவையார்.


மயிலும் வான்கோழியும்

ஆடுவதை நம் கண்முன்

கொண்டுவந்து நிறுத்தி

கவிதையை யார் வாசித்தால்

அழகாக இருக்கும் என்று

நீங்களே  முடிவு செய்து

கொள்ளுங்கள் என்கிறார்

ஔவை.

இதில் ,
யார் மயில்
யார் வான்கோழி?


Comments