ஈ ஏற மலை குலுங்குமா

ஈ ஏற மலை குலுங்குமா


ஒரு குறிப்பிட்ட சொல்லைக் கொடுத்து இந்தச் சொல்லில் உடனே கவி பாடுக

என்று கேட்டுக் கொண்டதும் அதிக  நேரம் எடுத்துக்கொள்ளாமல்    உடனே பாடுவது ஆசுகவி எனப்படும் .


ஆசுகவி என்றதும் முதல் ஆளாக கண் முன்னர் வந்து நிற்பவர் கவி காளமேகம் .


பருவத்தில் பொழியும் மழை போலன அல்லாமல்   கருக்கொண்டதும் பொழியும் மேகம் போல விரைந்து பாடும் ஆற்றல் காளமேகப் புலவரிடம்  உண்டு.


இவர் நாற்கவியிலும் பாடும்  புலமையுடையவர். இவருடைய பாடல்கள்   சொற்சுவை, பொருட்சுவை கொண்டவையாக இருக்கும்.  

இத்தகைய தனித்தன்மை காளமேகப் புலவரிடம் உண்டு.. 


எப்போதும் ஒருவருடைய திறமையை மற்றொருவருடைய மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கும்.

அவர் ஒன்றும் அப்படியொரு புலமைமிக்கவரல்ல என்பதை நாலுபேர் மத்தியில் மெய்ப்பித்துவிட வேண்டும் என்று மனம் துடியாய்த் துடிக்கும்.


இது பொறாமையின் வெளிப்பாடு.

அதனால் சாத்தியமில்லாதது என்று நினைக்கும் ஒரு எழுத்தையோ, சொல்லையோ, சொற்றொடரையோ கொடுத்து

ஒரு பாடல் பாடுக என்று கேட்டு 

காளமேத்தை மடக்க வேண்டும் என்று

பலர் கேட்டு தோற்றுப்போனதுண்டு.


இந்த வரலாறு தெரியாமல் இன்றும்

ஒருவருக்கு இப்படி  ஒரு குதர்க்கமான ஆசை ஏற்பட்டிருக்கிறது.


 "ஈ ஏற மலை குலுங்கி

யது' என்பதாக உடனே ஒரு பாடல் பாடுக எனக் கேட்டுவிட்டு நமட்டுச் சிரிப்பு

சிரித்தார்.


ஈ ஏற மலை குலுங்குமா?

இது சாத்தியமா?


சாத்தியமில்லாததைச் சாத்தியமாக்குவதில்தான்

காளமேகத்தின் புலமையே இருக்கிறது.


"ஈ ஏற மலை குலுங்கி வேண்டும். அவ்வளவுதானே?

இதோ குலுங்க வைக்கிறேன் பாருங்கள் "

என்றார் புன்னகை மாறாமல்.


பாடல் மழை பொழிய ஆரம்பித்தது. 

ஈ ஏறி மலையைத் குலுங்க வைத்த

பாடல் உங்களுக்காக...



"வாரணங்கள் எட்டும் மாமேரு வும்கடலும்
தாரணியும் எல்லாம் சலித்தனவாம்-நாரணனைப்
பண்வாய் இடைச்சி பருமத்தி னாலடித்த
புண்வாயில் ஈமொய்த்த போது!'


"வெண்ணெய்த் திருடிய கண்ணனை ஆயர்குல இடைச்சிப் பெண்  ஒருத்தி மத்தால் அடிக்க, ஏற்பட்ட புண்ணில் ஈ மொய்த்ததாம். இதனால்   அண்ட சராசரம் என்று அழைக்கப்படும் பலமிக்க யானை போன்ற எட்டுத் திசைகளை உள்ளடக்கிய கடலும் மாமேரு மலைகளும் குலுங்கினவாம்."

இதுதான் பாடலின் பொருள்.


பாடலில் பொருள் உண்டு . புராணம் உண்டு.

கவி நயமும் உண்டு. வேறென்ன வேண்டும் என்பதுபோல கேட்டவரை நிமிர்ந்து பார்த்தார் காளமேகம்.

இனி கேட்டவர் காளமேகம்  முன்னர் வருவாரா என்ன?


 ஈயேற மலையைக்  குலுங்க வைத்து

காளமேகம் அனைவர் மனதிலும் 'ஆசுகவி" என்ற சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் காளமேகம் .















மதுரகவி என்றால் என்ன


மதுரகவி என்பது கவிதை புனையும் புலமையை வெளிப்படுத்தும் ஒரு பாங்கு. ஆசுகவி, மதுரகவி சித்திரக் கவி, வித்தார கவி என்னும் நான்கு வகைப் புலமைகளில் பலர் சிறப்புற்று விளங்கிய புலமைநெறி மதுரகவி.

பொருள்வளமும், சொல்வளமும் உடையதாய், பல்வேறு வகையான தொடைநலன்கள் அமையப்பெற்று, உருவகம் முதலான அணி நயங்கள் பொலிந்து வர, ஓசைநயம் கொண்டதாய், கற்போருக்கு அமிழ்தம் போல அமைந்திருப்பது மதுரகவி. சொல்லப்பட்ட பலவகையான இன்பங்கள் தந்து மயங்கவைக்கும் மது இது. [1]



பொருளற்ற ஒற்றை எழுத்தை அடுக்கு வைத்து பொருள் உள்ள பாடல் புனைய

நல்ல கவித்துவம் வேண்டும்.


து வரிசையில் பாடுக

 தா வரிசையில் பாடுக என்று எளிதாகச் சொல்லிவிடலாம்.

வெறுமனே அடுக்கி வைத்தால் போதுமா?

இப்படியொரு கவி  விளையாட்டு 

உண்டு.


காளமேகத்திடம் இப்படியொரு விளையாட்டு விளையாட

ஒருவர்க்கு ஆசை.

ஆசையை காளமேகம்  முன்னர்  வைக்க அதனால் என்ன பாடி விட்டால் போயிற்று என்று பாடல் பாடி விட்டார் காளமேகம்.


பாடல் உங்களுக்காக...

 

"ஓகாமா வீதோநே ரொக்க டுடுடுடுடு
நாகர் குடந்தை நகர்க்கதிபர் - வாகாய்
எடுப்பர், நடமிடவர், ஏறுவர்அன் பர்க்குக்
கொடுப்பர், அணிவர் குழை'


என்று பாடி முடித்தார்.


டு என்ற எழுத்துக்கும் தனித்த பொருள் உண்டா என்றால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும்.

,  ஆனால் பாடலின் முதல் வரியில் உள்ள  ஓ, கா, மா, வீ, தோ ஆகிய ஐந்து நெடில் எழுத்துகளுடன் தனித்தனியே "டு' சேர 

ஓடு, காடு,  மாடு,  வீடு,  தோடு எனச் சொற்கள் அமைகிறதல்லவா?


அவற்றைக் கீழேயுள்ள வினைச்சொற்களுடன் முறையே சேர்க்க, சிவனது இயல்பை அறிந்துகொள்ளச் செய்கிறார் காளமேகம்.

சிவனின் பிச்சைப் பாத்திரம் ஓடு

அவர் நடனமிடும் இடம் காடு

ஏறும் வாகனம் மாடு

வணங்குவார்க்கு அளிப்பது வீடு

காதில் அணிந்திருப்பது தோடு 

என்று சேர்த்துப் படிக்கும்படி செய்து

நம்மையெல்லாம் அசர வைத்துவிட்டார் காளமேகம்.



 "எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்று தொல்காப்பியர் கூறியபடி, எழுத்து

சொல்லாகி  பொருள்தரும் புதுமையைப் படைத்திருக்கிறார் காளமேகம்.


 


Comments