வினையாலணையும் பெயர் என்றால் என்ன
வினையால் டையும் பெயர் என்றால் என்ன
ஒரு வினைமுற்று வினையை உணர்த்தாது
அவ்வினைக்கு உரிய கருத்தாவை உணர்த்தி,
எழுவாயாக நின்று, வேற்றுமை உருபை
ஏற்றும் ஏற்காமலும் வருவது
வினையாலணையும் பெயர் எனப்படும்.
மனப்பாடமாகப் படித்துவிட்டோம்.
இப்போது வினைமுற்று என்றால்
என்ன?என்ற கேள்வி எழுகிறது.
ஒரு வினைச்சொல்லானது ஒரு செயல்
முடிவுற்ற நிலையில் அது வினைமுற்று
என்று அழைக்கப்படும்.
மாதவன் பாடினான் .
மலர் ஆடினாள்.
தலைவர் கொடுத்தார்.
கொடி அசைந்தது
பறவைகள் பறந்தன.
பாடினான்,ஆடினாள்,கொடுத்தார்,
அசைந்தது,பறந்தன
இவை முற்று பெற்ற வினைச் சொற்கள்
ஆதலால் வினைமுற்று என்கிறோம்.
இப்போது வினையாலணையும் பெயருக்கு வருவோம்.
ஆடியவன் பரிசு பெற்றான்.
___________
பரிசு பெற்றவர் யார் என்ற கேள்விக்கு விடையாக வருவது எது?
ஆடியவன்.
இங்கே 'ஆடியவன் 'வினையாலணையும்
பெயர்.
ஆடியவன் பெயர்த்தன்மை
பெற்று வந்துள்ள வினையாலணையும்
பெயர்.
பாடியவனுக்கு பணம் வழங்கப்பட்டது.
_______________
பாடியவனுக்கு என்ற சொல்லில்
நான்காம் வேற்றுமை உருபான
'கு' சேர்ந்து வந்துள்ளது.
இது வேற்றுமை உருபை ஏற்று வந்துள்ள வினையாலணையும்
பெயர் ஆகும்.
வினையாலணையும் பெயர்
எதிர்மறைப் பொருளிலும்
வருவதுண்டு.
படிக்காதவர் தேர்வாக முடியாது.
____________
யார் தேர்வாக முடியாது என்ற கேள்விக்கு
படிக்காதவர் என்பது விடையாக வருகிறது.
இதில் படிக்காதவர் என்பது
எதிர்மறைப் பொருளில் வந்துள்ள
வினையால் டையும் பெயர்.
வந்தவன் விழுந்தான்.
இதில் வந்தவன் என்பது வினையாலணையும் பெயர்.
இதனைப் போன்ற மேலும் பல
வினையாலணையும் பெயர்கள்
உள்ள சொற்றொடர்கள் இதோ:
பாடியவள் வந்தாள்.
____________
நாடியவன் பெற்றான்.
___________
வந்தவர்கள் நின்றனர்.
___________
பேசியவர் பாடினார்.
__________
உண்டவர் உறங்கினார்.
__________
நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
ஒரு வினைமுற்று வினையை உணர்த்தாது
அந்த வினையைச் செய்த கருத்தாவை
உணர்த்துமானால் அது வினையாலணையும் பெயர் .
Comments
Post a Comment