முதுமொழிக்காஞ்சியின் துவ்வாப் பத்து

முதுமொழிக்காஞ்சியின் துவ்வாப் பத்து


முதுமொழிக்காஞ்சியின் நான்காம் பத்து

துவ்வாப் பத்து எனப்படும்.

துவ்வா என்பது துய்த்தல் என்ற சொல்லின் எதிர்ச்சொல் ஆகும்.

துய்த்தல் -பயன்படுத்துதல்.

'துவ்வா 'என்பது பயனில்லாதது அல்லது

பயன்படுத்த முடியாதது என்று பொருள்படும்.

துவ்வாப் பத்தின் பாடல்கள் உங்களுக்காக...

1. "ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
  பழியோர் செல்வம் வறுமையின் துவ்வாது.


 கடல் சூழ்ந்த உலகில் உள்ள மக்களுள் பழியுடையவரிடம் இருக்கும் செல்வம் 

 வறுமையை விடவும் பயனில்லாததாக

கருதப்படும்.

2. "கழி தறுகண்மை பேடியின் துவ்வாது.

அளவுக்கு மிஞ்சிய துணிச்சல் கோழையாக இருப்பதைவிடவும் பயனற்ற செயலாகும்.

3. "நாணில் வாழ்க்கை பசித்தலின் துவ்வாது.

பழிபாவம் செய்ய நாணாத வாழ்க்கை பசியோடு கிடப்பதைக் காட்டிலும் பயனற்றதாகக் கருதப்படும்.


4. "பேணில் ஈகை மாற்றலின் துவ்வாது."

விருப்பம் இன்றிக் கடமைக்காக ஈவது  ஒன்றுமே கொடுக்காத கஞ்சத்தனத்தை விடவும் பயனற்றதாகும்.


5. "செய்யாமை மேற்கோள் சிதடியின் துவ்வாது."

செய்யக் கூடாதவற்றை

மேற்கொண்டு செய்துகொண்டிருப்பது 

மடமையினும் மடமையாக கருதப்பட்டு

பயனற்றதாகிவிடும்.


6. "பொய் வேளாண்மை புலைமையின் துவ்வாது.

பொய்யான உள்ளத்துடன்  செய்யப்படும் உதவி கீழ்மையினும் கீழ்மையானதாகக்

கருதப்பட்டு பயனற்றதாகிவிடும்


7. "கொண்டு கண்மாறல் கொடுமையின் துவ்வாது."


கொடுத்ததை வாங்கிக்கொண்டு உதாசீனப்படுத்தல் கொடுமை செய்வதைக் காட்டிலும் பயனற்றதாகும்.

8. "அறிவிலி துணைப்பாடு தனிமையின் துவ்வாது."

அறிவில்லாதவனைத் துணையாக வைத்திருத்தல்  தனிமையில் இருப்பதைக் காட்டிலும் பயனற்றதாக அமையும்.

9. "இழிவுடை மூப்புக் கதத்தின் துவ்வாது.

முதுமையை இழிவு செய்வது சினத்தைவிடவும்  கொடுமை தந்துபயனற்றதாகிவிடும்

10. "தானோர் இன்புறல் தனிமையின் துவ்வாது."

தனக்குத் தானே இன்பம் துய்த்தல் தனிமை வாழ்க்கையை விடவும் பயனற்றதாகக் கருதப்படும்.


(தொடரும்)






Comments