முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல் 


அப்பாக்களுக்குப் பெண் பிள்ளைகள் மீது

பாசம் அதிகம். தன் பெண்ணை

தன் அம்மாவாகவே  பார்ப்பர்.

மகள் கண்கலங்கினால் தாங்காது

மனசு.


அதனால்தான் பார்த்துப் பார்த்துத்

திருமணம் முடித்து வைப்பர்.


ஒரு நினைப்பு வந்ததும் ஓடிச் சென்று பார்த்து வருவர்.

கண்களாலேயே தன் மகள்

கணவன் வீட்டில் மகிழ்ச்சியாக

இருக்கிறாளா என அறிந்து 

கொள்வர்.

பெற்றோர் தரப்பு இப்படியிருக்க 

மகளுக்கு தன் புகுந்த வீட்டின்

மரியாதையினைக் காப்பாற்ற

வேண்டிய கடமை இருக்கிறது. எந்த இடத்திலும்

தன் கணவனை விட்டுக் 

கொடுத்துவிடக்

கூடாது. அதற்காக மெனக்கெடுவது உண்டு.

குறிப்பாக கணவன் வீட்டு வறுமையை

வெளியில் தெரியாமல்

மறைப்பதில் பெண்பிள்ளைகள்

புத்திசாலிகள்.


அதுதானே வேண்டும்.


இங்கே ஒரு பெண் கணவன் வீட்டில் இருக்கிறாள்.

போனவள்  எப்படி இருக்கிறாளோ ? 

வீட்டில் இருக்கும் போது சாப்பிட்ட

பாத்திரத்தைக்கூட கழுவ விடுவதில்லை.


வேலை செய்தால் கையில்

காய்ப்பு பிடித்துவிடும்.

அடுப்பில் வேலை செய்தால்

புகை பட்டு முகம்

பொலிவிழந்து போகும்.

இது அம்மாக்களின் கவலை.


நம்ம வீட்டில் நம் மகள் மகிழ்ச்சியாக வாழ்வாள்.

போன இடத்தில் அப்படி ஒரு 

மகிழ்ச்சியும் வாய்ப்பும் கிடைக்குமா?


மகள் காதல் திருமணம் முடித்து சென்றுவிட்டாள்.

தனியாக வாழ்கிறாள்.

எப்படி இருக்கிறாளோ?

சமையல் செய்யத்தெரியாத பெண். வேலை செய்ய முடியாமல் 

என்னென்ன கஷ்டப்படுகிறாளோ?

இப்படி பலவாறு நினைத்து பெத்தமனம்

புலம்புகிறது.


அட போங்கம்மா.

நான் போய் ஒரு எட்டு பார்த்துவிட்டு வருகிறேன்

என்று கிளம்புகிறாள் செவிலித்தாய்.


போய் பார்க்கிறாள்.

தன் வளர்ப்பு எப்படி இருக்கிறது? 

அசந்து போகிறாள். மெல்ல புடவை

தலைப்பை எடுத்துக் கண்ணீரைத்

துடைத்துக் கொள்கிறாள்.


விதவிதமாக சாப்பிட்டு வளர்ந்தவள்.

இங்கே....

என்னவொரு பக்குவம்!

நம்ம பெண்ணா இப்படி நடந்து

கொள்கிறாள்.?

நம்ப முடியவில்லை.


தான் கண்ட காட்சியை அப்படியே

பெற்ற தாயிடம் போய்ச் சொல்கிறாள்.

இதோ பாடல் உங்களுக்காக...


"முளி தயிர் பிசைந்த

காந்தள் மெல்விரல்

கழுவுறு கலிங்கம்

கழாஅ துடாஇத்

குவளையுண் கண்

குய்ப் புகை கழுமத் 

தான் துழந் தட்ட

தீம்புளிப் பாகர்

இனிதெனக் கணவனுண்டலின்

நுண்ணுதின் மகிழ்ந்தன்

றெண்ணுதன் முகனே

            -குறுந்தொகை 



காட்சியில் கரைந்து போகிறாள்.

மனம் நெகிழ்ந்து போகிறாள்.


"அம்ம கேள்....கணவன் உணவு உண்டுகொண்டிருக்க

அருகில்  நம் வீட்டுப்

பைங்கிளி.

தயிர் பிசைந்த கையைக்கூட

கழுவாமல் நல்ல துவைத்து உடுத்திருந்த தூய்மையான சேலையின் முந்தானையில்

துடைத்துக் கொண்டு நிற்கிறாள்.

தயிர்க்குழம்பு தாளிக்கிறாள்.

புகை வந்து குவளை மலர் போன்ற கண்களை

 அப்பிக் கொள்கிறது.

அதையெல்லாம் அவள் கண்டு கொள்ளவில்லை.

அவள் கண்கள்

கணவன் உண்பதையே பார்த்துக்

கொண்டிருக்கின்றது.

அவனோ மோர்க்குழம்பு ஊற்றி அருமையாக சுவைத்து உண்டு கொண்டிருக்கிறான்.

அதனைக் கண்டு மகிழ்ந்து கொண்டிருக்கிறாள் நம் மகள் "என்று நெகிழ்ச்சியுடன்

கூறுகிறாள்.


அருமையான செய்தி.

நீ உன் மகளைப் பற்றி

கவலைப் போட்டுக்கொண்டிருக்கிறாய் .


அவளோ தன் வறுமையிலும் செம்மையாக

கணவனோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பதுதான் செய்தி.

 பெற்றவர்களுக்கு

இதைவிட வேறென்ன மகிழ்ச்சி வேண்டும்.


இலக்கியநயமிக்க 

அருமையான பாடல்.

மறுபடியும் மறுபடியும் படிக்கத் தூண்டும் வரிகள்.

உண்மைகளைச் சொல்லி உவக்க வைத்த பாங்கு.

வறுமை என்பதை நேரடியாக உரைக்காமல்

தயிரோடு தாளித்துக் கொண்டு சென்ற

இனிமை.

புகை அப்பிய கண்கள்.

இறுதியில் ஒண்நுதல் மலர்ந்து நின்ற

காட்சி என்று வீட்டின் நிலைமையையும்

மகளின் மகிழ்ச்சியையும் கட்டி இழுத்துக்

காட்சிப் படுத்தி நம் மனதில்

பதிய வைத்துவிட்டார்

கூடலூர் கிழார்.







Comments