முதுமொழிக்காஞ்சியின் தண்டாப் பத்து
முதுமொழிக்காஞ்சியின் தண்டாப் பத்து
முதுமொழிக்காஞ்சியின் பத்தாம் பத்து தண்டாப் பத்து எனப்படும்.
'தண்டான் ' என்றால் தவறமாட்டான்,
தவிர்க்க மாட்டான்,
விலக்க மாட்டான் என்று பொருள்படும்.
யார் யாரெல்லாம் எதை எதைத் தவிர்க்க
மாட்டார்கள் என்பதை மதுரை கூடலூர் கிழார் தண்டாப் பத்து என்ற கடைசிப் பத்தில் அருமையாகக் கூறியுள்ளார்.
பாடல் உங்களுக்காக...
1. "ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
ஓங்கல் வேண்டுவோன் உயர்மொழி தண்டான்.
கடல் சூழ்ந்த உலகில் வாழும் மக்கள்
தவிர்க்கக் கூடாதவை யாதெனில்,
முன்னேற விரும்புபவன்
உயர்ந்தோர் நல்மொழிகளைப்
பின்பற்றி நடக்கத் தவறமாட்டான்.
2. "வீங்கல் வேண்டுவோன் பல்புகழ் தண்டான்.
வளர்ச்சியை விரும்புகிறவன் புகழுக்குரிய செயல்களைச் செய்யத் தவறமாட்டான்.
3. "கற்றல் வேண்டுவோன் வழிபாடு தண்டான்."
கல்வியைப் பெற நாட்டம் கொண்டவன் ஆசிரியருக்கு மரியாதை செய்வதிலிருந்து தவறமாட்டான்.
4. "நிற்றல் வேண்டுவோன் தவம்செயல் தண்டான்.
உலகில் புகழுடன் நிலைத்து நிற்க விரும்புகிறவன் உயர்ந்த தவம் புரிதலில் இருந்து தவறமாட்டான்.
5. "வாழ்க்கை வேண்டுவோன் சூழ்ச்சி தண்டான்."
நல்லமுறையில் வாழ வேண்டும் என்று விரும்புகிறவன் பெரியோரிடம் ஆலோசனை பெறுவதைத் தவிர்க்கமாட்டான்.
6. "மிகுதி வேண்டுவோன் வருத்தம் தண்டான்.
வளர்ச்சியை விரும்புகிறவன் உழைப்பைத் தவிர்க்க மாட்டான்.
7. "இன்பம் வேண்டுவோன் துன்பம் தண்டான்.
"
இன்பம் பெற விரும்புகிறவன்
இடையில் ஏற்படும் துன்பத்தைக் கண்டு
விலகிப்போக மாட்டான்.
8. "துன்பம் வேண்டுவோன் இன்பம் தண்டான்.
துன்பத்தில் வலிய விழுபவன் தேவையில்லாத இன்பங்களை நுகர்வதிலிருந்து விலகியிருக்க மாட்டான்.
9. "ஏமம் வேண்டுவோன் முறைசெயல் தண்டான்.
குடிமக்களின் நன்மையை விரும்பும் அரசன் செங்கோல் முறை தவறாமல் ஆட்சி செய்வதைக் கைவிட மாட்டான்.
10. "காமம் வேண்டுவோன் குறிப்புச்செயல் தண்டான்."
இன்பம் விரும்புகிறவன் குறிப்பறிந்து செயலாற்றுதலைத் தவிர்க்க மாட்டான்.
(முதுமொழிக்காஞ்சி முற்றும்)
Comments
Post a Comment