முதுமொழிக்காஞ்சியின் அறிவுப்பத்து
முதுமொழிக்காஞ்சியின்
அறிவுப் பத்து
முதுமொழிக்காஞ்சியின் இரண்டாம் பத்து அறிவுப் பத்து.
அறிவுப் பத்து பாடலும் விளக்கமும் உங்களுக்காக...
1. "ஆர்கலி உலகத்து மக்கட் கெல்லாம்
பேரில் பிறந்தமை ஈரத்தின் அறிப.
கடல் சூழ்ந்த இவ்வுலகில் உள்ள மக்கள் அனைவரும் அவர்வர்களுக்குள் இருக்கும் இரக்கக் குணத்தை வைத்து உயர் குலத்தார் என்று அறியப்படுவர்.
2. "ஈரம் உடைமை ஈகையின் அறிப."
ஒருவர் பிறர்க்கு அளிக்கும் ஈகையை வைத்துதான் அவர் கருணை உடையவர் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
3. "சோரா நன்னட்பு உதவியின் அறிப.
"ஒருவர் தன் நண்பர்களுக்குச் செய்யும் உதவியை அளவுகோலாகக் கொண்டு, அவர் எந்தச் சூழலிலும் நட்பை விட்டுக்கொடுக்காதவர் என்பதை அறிந்து கொள்ளலாம்.
4. "கற்றது உடைமை காட்சியின் அறிப."
ஒருவர் உலகைப் பார்க்கும் பார்வையிலிருந்து அவர் பெற்ற கல்வியின் திறன்
எத்தன்மையது என்பதை அறிந்து கொள்ளலாம்.
5. "ஏற்றம் உடைமை எதிர்கோளின் அறிப."
ஒருவருடைய வளர்ச்சியை அவர் எதிர்காலத்தில் வரப்போகும் இடர்களை முன் கூட்டியே அறிந்து திட்டமிட்டு செயல்படும் திறத்தைக் கொண்டு அறிந்து கொள்ளலாம்.
6. "சிற்றில் பிறந்தமை பெருமிதத்தின் அறிப.
"ஒருவன் பெருமைபேசி செருக்ககோடு நடந்து கொள்வதை வைத்து அவர் கீழ்க்குலத்தைச் சேர்ந்தவர் என்பதை அறிய முடியும்.
7. "குத்திரம் செய்தலின் கள்வனாதல் அறிப.
ஒருவரின் செயலில் வஞ்சகம் இருந்தால் அவர் கள்ளம் கபடம் நிறைந்தவர் என்பதை அறிந்து கொள்ளலாம்.
8. "சொற்சோர்வு உடைமையின் எச்சோர்வும் அறிப.
ஒருவரின் பேச்சில் இருக்கும் அலட்சியத்தை வைத்து அவருடைய
பேச்சில் ஒருபோதும் உண்மை இருக்காது என்பதை அறிந்து கொள்ளலாம்.
9. "அறிவுசோர்வு உடைமையின் பிறிதுசோர்பு அறிப.
ஒருவர் அறிவில் குறைபாடு உடையவராயிருப்பின், அவர் எல்லாவற்றிலும் குறைபாடு உடையவராகத்தான் இருப்பார் என்பதை அறிந்து கொள்ளலாம்
10. "சீருடை ஆண்மை செய்கையின் அறிப."
ஒருவர் செய்யும் செயல்களில் வெளிப்படும் திறனிலிருந்து
அவர் சிறந்த ஆளுமைத் தன்மை உடையவர் என்பதை அறிந்து கொள்ளலாம்.
Comments
Post a Comment