முதுமொழிக்காஞ்சியின் பழியாப் பத்து
முதுமொழிக்காஞ்சியின் பழியாப் பத்து
முதுமொழிக் காஞ்சியின் மூன்றாம் பத்து பழியாப் பத்து ஆகும்.
இதில் யார் யார்
யார் யாரை
எந்தெந்த தருணத்தில்
பழித்துரைக்க மாட்டார் என்பது சொல்லப்பட்டுள்ளது. பாடலும் விளக்கமும் உங்களுக்காக...
1. "ஆர்கலி யுலகத்து மக்கட் கெல்லாம்
யாப்பி லோரை இயல்புகுணம் பழியார்."
கடல் சூழ்ந்த உலகத்து மக்கள் எல்லாருள்ளும் தமக்கு
உறவில்லாதவரிடம் இயற்கையாகவே அமைந்திருக்கும் குணநலனை அறிவுடைய எவரும் பழித்துரைப்பதில்லை.
2. "மீப்பி லோரை மீக்குணம் பழியார்."
மேன்மைக் குணமும் செய்கையும் சிறிதும் இல்லாத கீழ்மக்களின் இயல்பினை மேன்மக்கள் எவரும் பழித்துரைக்கமாட்டார்.
3. "பெருமை யுடையதன் அருமை பழியார்."
பெருமைக்குரிய செயலை செய்து முடித்தலின் அருமையை அறிந்தோர் அதனை செய்ய நினைப்பவரை ஒருபோதும் பழித்துரைக்கமாட்டார்.
4. "அருமை யுடையதன் பெருமை பழியார்."
ஒருவர் அருமையான ஒரு செயலைச் செய்ய முனையும்போது இது செய்வதற்கு அரிதான செயல் என்று அவருடைய நல்முயற்சியை அறிவுடையோர் பழித்துரைக்க மாட்டார்.
5. "நிறையச் செய்யாக் குறைவினை பழியார்."
ஒரு செயலைச் செய்து முடிக்கும் முன்னரே
அந்தச் செயலில் இருக்கும் குறைகளை
மதிப்பீடு செய்து பழித்துரைக்கும் செயலை அறிவுடையவர் எவரும் செய்வதில்லை.
6. "முறையி லரசர்நாட் டிருந்து பழியார்."
நல்ல நேர்மையான முறையில் அரசாட்சி நடைபெறாத நாட்டில் வாழ்ந்துகொண்டு அரசன் நல்லாட்சி செய்யவில்லை என்று அழிவுடையோர் பழித்துப் பேசுவதில்லை.
7. "செயத்தக்க நற்கேளிர் செய்யாமை பழியார்."
நமக்கு உதவி செய்யத்தக்க நிலையில் இருந்தும் உறவினர் உதவி செய்யாதிருந்தாலும் நல்லவர்கள் அவர்களை ஒருபோதும் பழித்துரைப்பதில்லை.
8. "அறியாத் தேசத் தாசாரம் பழியார்."
அறியாத நாட்டுக்குச் சென்று அங்குள்ள மக்கள் கடைபிடிக்கும் ஒழுக்கநெறி
சரியில்லை என்று அறிவுடையோர்
ஒருபோதும் பழித்துரைப்பதில்லை.
9. "வறியோன் வள்ளிய னன்மை பழியார்."
பொருளில்லாதவனிடம் ஈகைத் தன்மை இல்லை என்று அறிவுடையோர் ஒருபோதும் பழித்துரைக்கமாட்டார்.
10. "சிறியா ரொழுக்கம் சிறந்தோரும் பழியார்."
எளியோரிடம் இயல்பாக காணப்படும் ஒழுக்க நெறியை கற்றறிந்த மேன்மக்கள் ஒருபோதும் பழித்துரைப்பதில்லை.
Comments
Post a Comment