முதுமொழிக்காஞ்சியின் எளிய பத்து
முதுமொழிக்காஞ்சியின் எளிய பத்து
முதுமொழிக் காஞ்சியின் எட்டாம் பத்து
எளிய பத்து எனப்படும்.
யார் யாருக்கு எது எது எளிது
என்பதை மதுரை கூடலூர் கிழார்
ஒற்றை வரியில் உள்ளம் ஏற்கும்படி அழகாக எழுதிய பத்து வரிகள் உங்களுக்காக....
1. "ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்-
புகழ் வெய்யோர்க்குப் புத்தேள் நாடு எளிது."
ஆரவாரம் மிக்க உலகத்து மக்களுக்கு எல்லாம் எளிதாவது யாதெனில்,புகழை விரும்புபவர்களுக்கு தேவர் உலகம் எளிது.
2."உறழ் வெய்யோர்க்கு உறு செரு எளிது."
மாறுபட்டு நிற்பவர்களுக்கு பகை வந்து சேர்வது எளிது.
3."ஈரம் வெய்யோர்க்கு நசை கொடை எளிது."
அன்பை விரும்புபவர்களுக்கு வேண்டும் கொடையைப் பெறுதல் எளிது.
4."குறளை வெய்யோர்க்கு மறை விரி எளிது."
கோள் சொல்லுதலை விரும்புபவர்களுக்கு மறைக்கவேண்டிய செய்தியை வெளிப்படுத்தி நிற்றல் எளிது.
5".துன்பம் வெய்யோர்க்கு இன்பம் எளிது. "
துன்பத்தைப் பொறுத்துக்கொள்ளும் மனப்பக்குவம் உடையவர்க்கு இன்பம் வந்து சேர்தல் எளிது.
6 "இன்பம் வெய்யோர்க்குத் துன்பம் எளிது.'
அதிக இன்பத்தில் நாட்டம் கொள்பவர்களுக்கு துன்பம் வலிய வந்து சேர்தல் எளிது.
7."உண்டி வெய்யோர்க்கு உறு பிணி எளிது."
உணவைப் பெரிதும் விரும்பி உண்பவர்களுக்கு நோய் வருதல் எளிது.
8."பெண்டிர் வெய்யோர்க்குப் படு பழி எளிது."
பார்க்கும் பெண்களையெல்லாம் விரும்புவர்களுக்குப் பழி வந்து சேர்தல் எளிது.
9. "பாரம் வெய்யோர்க்குப் பாத்தூண் எளிது. "
மற்றவர்களின் துன்பத்தைச் சுமக்கும் பண்பு கொண்டவர்களுக்கு உணவைப் பகிர்ந்து உண்ணுதல் எளிது.
10."சார்பு இலோர்க்கு உறு கொலை எளிது."
" பாதுகாப்புக்குத் துணையாக யாரும் இல்லாதவர்கள் பகைவரால் கொல்லப்படுதல் எளிது. "
(தொடரும்)
Comments
Post a Comment