எள்ளற்க என்றும் எளியரென்று
எள்ளற்க என்றும் எளியரென்று
பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று நான்மணிக்கடிகை.
இந்நூலை இயற்றியவர் விளம்பி நாகனார். இந்நூலிலுள்ள பாடல்களின் மொத்த எண்ணிக்கை 106 ஆகும்.
ஒவ்வொரு பாடலிலும் 4 மணி மணியான கருத்துகள் இடம்பெற்றிருக்கும். அறிவுரைகள் ,அறவுரைகள்
என்று மொத்தப் பாடல்களும்
படிக்கப் படிக்கத் திகட்டாத தெள்ளமுதாக இனிக்கும்.
நான்கு வகை மணியான கருத்துகளைச் சொல்லும் நூல் என்பதால் ‘நான்மணிக்கடிகை’ என்று அழைக்கப்படுகிறது. ‘கடிகை’ என்றால் துண்டம் என்று பொருள்படும். எனவே, நான்மணிக்கடிகை என்னும் சொல் நான்கு ரத்தினத் துண்டங்கள் கொண்டது என்று பொருள்படும்.
நான்மணிக்கடிகையின் முதல் பாடல்
உங்களுக்காக..
"எள்ளற்க என்றும் எளியரென்று; என்பெறினும்
கொள்ளற்க கொள்ளார்கை மேற்பட; உள்சுடினும்
சீறற்க சிற்றில் பிறந்தாரை; கூறற்க
கூறு அல்லவற்றை விரைந்து. "
"செல்வச் செழிப்பில்லாத ஏழை வறியவர் என்பதற்காக ஒருபோதும் ஒருவரை இகழ்ந்து பேசக்கூடாது.
எதன் பொருட்டும் எதைப் பெறுவதற்காகவும் தகாதவர்கள் கை மேலாகவும் தம் கை கீழாகவும் இருக்கும்படி எதையும் பெற்றுக் கொள்ளக்கூடாது.
வறுமையில் வாடும் ஏழை மக்கள் தகாத செயல்களைச் செய்து நோகடித்தாலும், மன வருத்தத்தை ஏற்படுத்தினாலும் அவர்கள் மீது சினமோ கோபமோ கொண்டு எந்தவொரு வார்த்தையும் சொல்லிவிடகக்கூடாது.
பிறர் மனம் பதைபதைக்கும் வகையில், கேட்பவர் உள்ளம் வருந்தும் வகையில், சொல்லக் கூடாத சொற்களைஉணர்ச்சி வசப்பட்டு ஒருபோதும் சொல்லக்கூடாது " என்கிறார் விளம்பி நாகனார்.
ஏழைகளை ஏளனம் செய்யாதே.
பிறரிடம் கையேந்தாதே.
வறியவரை காயப்படுத்தாதே.
பிறர் மனம் பதைபதைக்கப் பேசாதே.
நான்கு மணியான கருத்துக்கள் இல்லையா?
மனதில் எழுதி வைத்து நடைமுறைப்படுத்திப் பாருங்கள்.
நாமும் மகிழ்ச்சியாக இருக்கலாம்.
மற்றவரையும் மகிழ்ச்சிப்படுத்திப் பார்க்கலாம்.
Comments
Post a Comment