ஒட்டக்கூத்தன் பாடலுக்கு இரட்டை தாழ்ப்பாள்

ஒட்டக்கூத்தன் பாடலுக்கு இரட்டைத் தாழ்ப்பாள் 


தூது இலக்கியம் பற்றி பெரும்பாலும்

நாம் தெரிந்து வைத்திருப்போம்.

நாரைவிடு தூது படிக்காமல் பள்ளிப்

பருவத்தை யாரும் கடந்து வந்திருக்க

முடியாது.


 காதலுக்குத் தூது செல்வதற்கு என்றே தலைவனும்

தலைவியும் பாங்கனையும் பாங்கியரையும்

கூடவே வைத்திருப்பர்.

இது சங்க இலக்கிய அகப்பாடல்களின் மூலம்

நாம்  அறியும் செய்தி.


இருவரிடையே பேச்சு நிகழ்வதற்குத்

துணையாக இருப்பவரைத் தூதுவர் 

என்கிறோம். எல்லா நாட்டிற்கும் தூதரகங்கள்

இருப்பதும் அங்கு அந்தந்த நாட்டு தூதர்கள் 

அமர்ந்து மற்ற நாடுகளோடு பேச்சு வார்த்தையில்

ஈடுபடுவதும் அரசியல் நிகழ்வாக

நாளும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் செயல்.


பண்டைக் காலத்திலும் தூது நடைபெற்றிருக்கிறது.

அது இலக்கியமாக வளர்ச்சியடைந்திருக்கிறது.

 தமிழிலுள்ள சிற்றிலக்கிய 

வகைகளுள் ஒன்றான தூது இதற்குச் 

சான்றாக அமைகிறது.


முதன் முதலாக தமிழர் நெஞ்சைத்தான்

தூதாக விட்டு வந்தனராம்.

முதல் தூது இலக்கியமே நெஞ்சுவிடு தூது

என்பதாக கூறப்படுள்ளது.

அதனைத் தொடர்ந்து தமிழ் விடு தூது, அன்னம் விடு

தூது, மேகம் விடு தூது, காக்கை விடு தூது,

மான்  விடு தூது, கிள்ளை விடு தூது என்று

 தூதுவர்கள்

அதிகமாகிக் கொண்டே வந்தனர்.

 உயிர் உள்ளவற்றைத் தூதாக அனுப்பியதுபோக 

 உயிரில்லா காற்றையும் மேகத்தையும் தூதாக அனுப்பிய

பெருமை உடையவர்கள் தமிழ்ப் புலவர்கள்.


ஆரம்ப காலத்தில் இவை எல்லாம் 

காதலுக்காக மட்டுமே தூதாக அனுப்பப்பட்டன.


பின்னர் அதியமானுக்காக தொண்டைமானிடம்

போர் சமரசம் செய்ய ஔவையார் போனதாகப்

படித்திருப்போம்.

இது காதல் தூதைவிட ஒருபடி உயர்ந்தநிலை.


இதற்கு அடுத்த நிலையாக

மன்னனுக்குப் பெண் கேட்பதற்காக

வேற்று நாட்டிற்கு  தூது சென்றாராம் ஒட்டக்கூத்தர்

என்ற புலவர்.

இதுவும் சமூகப் பணிதான். 

பாராட்டிவிட்டுப் போகலாம்.

மன்னருக்கும் அரசியாருக்கும் இடையில் ஏற்பட்ட ஊடலைத் தீர்க்க அரசியிடம் தூதாகப் போனாராம் ஒரு புலவர்.


வேடிக்கையாக இருக்கிறதல்லவா?

யார் அந்தப் புலவர்?

பார்த்துவிடலாம் வாருங்கள்.


குலோத்துங்க மன்னனோடு ஊடல் கொண்டு அரசி

கதவை மூடிக்கொண்டு அரண்மனையிலுள்ள தன்

அறையில் அமர்ந்து கொண்டாள்.


மன்னனுக்காக கதவைத் திறந்துவிடு என்று 

சொல்ல தூது போனவர் ஒட்டக்கூத்தர்

என்ற புலவர்.


போய் என்ன சொன்னார்

 என்பது தெரியுமா?

 

 பாடல் இதோ உங்களுக்காக...


நானே இனியுன்னை வேண்டுவதில்லை


நளினமலர்த் தேனே கபாடந் திறந்திடு


திறவா விடிலோ


வானேறனைய வாள் விரவிகுலாதிபன்


வாசல் வந்தால்


தானே திறக்கு நின் கையிதழாகிய


தாமரையே !



"அழகான  மலரில் இருக்கும் தேன்

போன்ற இனிமையான பெண்ணே!

மன்னனுக்காகக் கதவைத் திறந்துவிடு என்று

உன்னை வேண்டிக் கொள்ள வேண்டும்

என்ற அவசியம்  எனக்கில்லை.

வானளாவிய புகழ் கொண்ட

ஆண் சிங்கத்துக்கு நிகரானவன்

என் மன்னன் குலோத்துங்கன். 

வாள் வீரனாகிய குலோத்துங்கன் 

உன் அறையின் பக்கம் வந்தாலே போதும்.

தாமரை போன்ற உன் கைகள்

தானாக வந்து கதவைத் திறந்து

வைத்துவிடும் ."


இதுதான் பாடலின் பொருள்.


பாடலில் மன்னனைப்பற்றிய பெருமை

இருந்தது. எந்த இடத்திலும் மன்னிப்பு

கேட்கப்படவில்லை.

என் மன்னன் பெரியவன்.

வீரன் .மன்மதன்.

என்ற தொனியில் பாடல் இருக்க

அட போய்யா உன் மன்னன் யாராய் இருந்தால் எனக்கென்ன 

 என்று முன்பைவிட

அதிக கோபம் கொண்டவளானாள் அரசி.


அதுவரை ஒற்றைத் தாழ்ப்பாளை மட்டுமே

போட்டு வைத்திருந்த அரசி 

ஒட்டக்கூத்தர் பாடலைக் கேட்டதும் இரட்டைத் தாழ்ப்பாளையும் சேர்த்துப் போட்டு கதவைச் 

சிக்கென்று மூடிக் கொண்டாள்.


தூதாகப் போனவருக்குத் தோதாகப் பேசி 

அரசியின் மனதை மாற்றத் தெரியவில்லை.

ஒற்றைத் தாழ்ப்பாள் போட்டிருந்தவளை இரட்டைத் தாழ்ப்பாள் போட வைத்து

பழிச்சொல்லுக்கு ஆளாகும் நிலைமைக்குத் தள்ளப்பட்டார் ஒட்டக்கூத்தர்.

இதனால்தான் "ஒட்டக்கூத்தன் பாடலுக்கு இரட்டைத்

தாழ்ப்பாள் "என்ற சொற்றொடர் உருவானது.










Comments