பாரி பாரி என்று பல ஏத்தி
பாரி பாரி என்றுபல ஏத்தி
கபிலரும் பாரியும் சிறந்த நண்பர்கள்.
முல்லைக்குத் தேர் கொடுத்த நிகழ்வுக்குப் பின்னர் பாரியின் புகழ்
அண்டை நாடுகள் எங்கும் பரவியது.
பாரியைப் பார்த்தால் நம் வறுமை ஒழியும் என்று புலவர்கள் நம்பினர்.
அதனால் நாள்தோறும் புலவர்கள் வந்து
பரிசில் பெற்றுச் சென்றனர்.
எப்போதும் பாரியின் அவையில் புலவர்கள்
இருந்துகொண்டே இருப்பர்.
அப்படி வருகிற புலவர்களோடு
ஒருநாள் கபிலர் பேசிக் கொண்டிருந்தார்.
பேசும் ஒவ்வொருவர் வாயில் இருந்தும்
எப்படியாவது ஒரு முறை பாரி என்ற பெயர் உச்சரிக்கப் பாடுவதைக் கவனித்தார் பாரி.
உள்ளுக்குள் பெருமிதம்.
ஆனால் இவர்கள் எல்லாம் உண்மையாகவே பாரியைப் புகழ்கிறார்களா இல்லை பரிசில் பெற வேண்டும் என்ற நோக்கிற்காக ஏதோ புகழ்ந்து சொல்லி விடுவோம் என்று சொல்கிறார்களா என்று உள்ளுக்குள் ஒரு விவாதம் நடத்திப் பார்த்தார்.
அப்போது பாரிக்கு இணையான வள்ளல் இந்த உலகில் வேறு யார் இருக்கிறார்கள் என்ற தேடல் வந்தது.
"ஏனில்லை இதோ இவர் இருக்கிறாரே" என்ற குரல் செவியோரம் புள்ளொன்று வந்து செய்தி ஒன்று சொல்லிப் போனது.
முகம் மகிழ்ச்சியால் மலர்ந்து நின்றது.
பாரியின் முகம் மலர்ந்து போகும் அளவிற்கு பாரியின் காதோரம் சொல்லிச் சென்ற செய்தி எனானவாக இருக்கும்?
பாரிக்கு இணையான வள்ளல் யாராக இருக்கும்?
விடைகிடைத்த அந்த மகிழ்ச்சியோடு பாரி பாடிய பாடல்
இதோ உங்களுக்காக ...
"பாரி பாரி என்றுபல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டுஈண்டு உலகுபுரப் பதுவே"
-புறநானூறு 107.
" பாரி பாரி என்று பலவாறு உயர்த்தி, வள்ளண்மைக்குப் பாரி ஒருவனையே செவ்விய மொழி ஆளுமை பெற்ற புலவர் பெருமக்கள் அனைவரும் புகழ்கின்றனர். தனது வள்ளல் தன்மையால் உலகைக் காப்பது பாரி ஒருவன் மட்டுமல்லன்.இந்த உலகைக் காக்க எதையும் எதிர்பாராமல் வாரி வழங்குவதற்கு மழையும்
இங்கு உண்டு"
என்பது பாடலின் பொருள்.
ஈதென்ன? பாரி மட்டும்தான் வள்ளலா ? மழையும் தான் உண்டு" என்று பாரியை இகழ்வது போல கபிலர் இப்படிப் பாடி விட்டாரே என்று புலவர்கள் வாயடைத்துப் போய் நின்றனர்.
ஆனால் உண்மையில், பாரியின் வள்ளண்மைக்கு நிகர் மாமழையே என்று
புகழ்ந்து சொல்வதுதான் கபிலரின் நோக்கம்.
ஆதலின் இது இகழ்தல் போல புகழும் வஞ்சப்புகழ்ச்சியாக அமைந்த பாடல்.
பாரியைக் கபிலர் இகழ்வாரா என்ன?
பாரி -கபிலர் நட்புக்கு இந்தப் பாடல்
நல்லதொரு சான்று.
இப்பாடலில் பாரியின் வள்ளண்மையைத் திறம்பட உலகோர்க்கு உரைக்க நினைத்த கபிலர் எளிய வரிகளில் வளமான பொருள்
கொண்ட இந்தப் பாடலைப் பாடி
அனைவர் உள்ளங்களிலும் உயர்ந்து நிற்கிறார் .
ஒரு சிலரை ஒப்பாரும் மிக்காரும் இல்லாத் தலைவர் என்று புகழ்வதைக் கேள்விப்பட்டிருப்போம்.
ஆனால் பாரிக்கு ஒப்பார் ஒருவர் உண்டு. அவர் வேறு யாருமல்ல . மாரி ஒருவர்தான். மாரிக்கு இணையான வள்ளண்மை உடையவன் இவ்வுலகில் என் நண்பன் பாரி ஒருவன் மட்டுமே என்று தன் நண்பன் மீது கொண்ட உயர்வான எண்ணத்தை உரைத்துச் செல்லும்
அருமையான பாடல்
"பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டு ஈண்டு
உலகு புரப்பதுவே"
Comments
Post a Comment