எழுத்தின் வனப்பே வனப்பு

எழுத்தின் வனப்பே வனப்பு


ஒருவன் தன் வாழ்வில் கிடைத்த மிகப்

பெரிய செல்வமாகக் கருதுவது கல்விச்

செல்வமாகும்.

கல்வியை ஒருமுறை பெற்றுவிட்டால்

வாழ்நாள் முழுவதும் கூடவே வரும்.

என்னிடம் நிறைய கல்வி இருக்கிறது.

 யாராவது களவாடி சென்று விடுவார்களோ ?

 அச்சமே வேண்டாம்.

 விலைமதிப்பற்ற பொருளைக் கூடவே

 வைத்துக் கொண்டு கவலை இல்லாமல்

 நிம்மதியாகத் தூங்கலாம்.

 

 ஐயோ பெருமழை வந்துவிட்டதே....

வெள்ளம் வந்து அடித்துச் சென்றுவிடுமோ ?

அஞ்ச வேண்டாம்.

அக்கம்பக்கத்தில் தீவிபத்து ஏற்பட்டு

விட்டதே . என் கல்வி எரிந்து சாம்பலாகிவிடுமோ?


நினைத்து நினைத்து வெதும்பிக் 

கிடக்க வேண்டாம்.

எப்போது நான் உங்களுடையவள்

ஆகிவிட்டேனோ

இனி எப்போதும் உங்களுடையவள்தான்.

எந்த ஒரு சக்தியாலும் உங்களிடமிருந்து

என்னைப் பிரிக்க முடியாது .

பிரிக்க முடியாத

பந்தம் உங்களுக்கும் எனக்கும் உண்டு

என்கிறது கல்வி.

இதையேத்தான் விவேக சிந்தாமணி ஆசிரியர்


"வெள்ளத்தால் போகாது

வெந்தணலால் வேகாது வேந்தராலும்

கொள்ளத்தான் முடியாது

கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது

கள்ளர்க்கோ மிக அரிது

காவலோ மிக எளிது

கல்வி என்னும் உள்ளத்தே

பொருளிருக்க உலகெலாம்

பொருள்தேடி உமல்வதேனோ !"


என்று கூறுகிறார்.

பெருவெள்ளம் வந்து கல்வியை அடித்துச் செல்ல முடியுமா?

முடியாது.


தீயால் எரித்துவிட முடியுமா?

அது எப்படி முடியும்?

வேந்தர்களால் வரி என்ற பெயரால்

நம்மிடமிருந்து பிடுங்கிச்செல்ல முடியுமா?

அதுவும்

முடியாது.

நீங்கள் பெற்ற கல்விச்செல்வத்தை ஒருவர்க்கு கொடுத்தாலும் குறைந்து போகுமா?

குறைவு படாது.

கள்ளர்களால் களவாடிச் செல்ல முடியுமா?

அது எப்படி முடியும்?

அதுவும் முடியாது.

உள்ளத்தில் இருக்கும் இந்தப்

பொருளைக் காப்பது எளிது.

இவ்வளவு பெருமைமிக்க பாதுகாப்பான இடத்தில் இருக்கும் கல்விச் செல்வத்தை விட்டுவிட்டு அழியும் செல்வத்தைத் தேடி அலைவதேனோ என்று கேட்கிறார் விவேக சிந்தாமணி ஆசிரியர்.

கல்விதாங்க செல்வம் என்று விவேக சிந்தாமணி 

சொல்ல....

இல்லை...இல்லை...இல்லை...

செல்வம்மட்டுமல்ல...உங்களுக்கு

அழகைத் தருவதும் நாங்கள்தான்

என்று முந்தி வந்துச் சொல்லி நிற்கிறது

ஒரு நாலடியார் பாடல்.


பாடல் இதோ உங்களுக்காக....


"குஞ்சியகுங் கொடுத்தானைக் கோட்டழகும்

மஞ்சளழகும் அழகல்ல _ நெஞ்சத்து

நல்லம் யாமென்னும் நடுவுநிலைமையால்

கல்வியழகே அழகு "

                         

கூந்தல் அழகும் ஆடை அலங்கார அழகும்

மஞ்சள் பூசிய முக அழகும்

அழகு என்று நினைத்துவிடாதீர்கள்.

பல நூல்களை கற்றுப் பெற்ற 

கல்விதான் இவை எல்லாவற்றைவிடவும்

அழகு என்று ஆணித்தரமாகக்

கூறுகிறார் நாலடியார்.


நாலடியார் மட்டும் சொன்னால் போதுமா?

என்னிடம் வாருங்கள்.

எது அழகு எது அழகல்ல என்று நான் உங்களுக்குச் சொல்லித் தருகிறேன் என்கிறார் 

சிறுபஞ்சமூல ஆசிரியர் காரியாசான்.

அழகுக்கு அழகு சேர்ப்பது கல்வி

என்பதை வழிமொழிய வந்த

சிறுபஞ்சமூலம் பாடல் இதோ

உங்களுக்காக...


"மயிர் வனப்பும் கண்கவரும் மார்பின் வனப்பும்

உகிர் வனப்பும் காதின் வனப்பும்_செயிர் தீர்ந்த

பல்லின் வனப்பும் வனப்பல்ல நூற்கியைந்த

சொல்லின் வனப்பே வனப்பு "

                                       _  சிறுபஞ்சமூலம்


"முடியழகு, முன்னழகு, நக அழகு,

காதின் அழகு, தெற்றில்லாப் பல்லழகு

இவை யாவும் அழகல்ல.நல்ல நூற்களைப்

படித்து அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள்.

இதுதான் உண்மையான அழகு.

என்று உச்சந்தலையில் உரைக்கும்படியாக

உரக்கக் கூறிவிட்டார் காரியாசான்.

                                       


நீங்கள் மட்டும் வழிமொழிந்தால் போதுமா..?

நானும் வழிமொழிகிறேன் என்கிறார்

ஏலாதி ஆசிரியர் கணிமேதாவியார்.

கல்வியைப் பாடுவதில் எவ்வளவு போட்டாப்

போட்டி பாருங்கள்

"இடை வனப்பும் தோள்வனப்பும் ஈடின் வனப்பும்

நடை வனப்பும் நாணின்வனப்பும் _ படைசால்

கழுத்தின் வனப்பும் வனப்பல்ல எண்ணோ

டெழுத்தின் வனப்பே வனப்பு "

         - ஏலாதி

அழகைச் சுற்றிதான் உலகமே இயங்கிக் 

கொண்டிருக்கிறது.

இன்றைய தொழில்நுட்பத்தின் பிரமிப்பூட்டும்

வளர்ச்சி... கல்வியால் மட்டுமே சாத்தியமாகியது.

இடைவனப்பும் தோள் வனப்பும்

நடைவனப்பும்

கழுத்தின் வனப்பும் வனப்பல்ல...

எண்ணோடு எழுத்தும் கற்று பெறும் கல்வி வனப்பே வனப்பு என்கிறது ஏலாதி.

 கல்விதான் அழகு ..மாற்றுக் கருத்து இல்லை.

ஆதலால் ,


"கற்கை நன்றே கற்கை நன்றே

பிச்சை புகினும் கற்கை நன்றே"



















Comments