முதுமொழிக்காஞ்சியின் நல்கூர்ந்த பத்து
முதுமொழிக் காஞ்சியின் நல்கூர்ந்த பத்து
முதுமொழிக்காஞ்சியின் ஒன்பதாம் பத்து
நல்கூர்ந்த பத்து எனப்படும்.
நல்கூர்ந்தன்று என்பது பயனில்லாதது எனப் பொருள்படும்.
மதுரை கூடலூர் கிழார் எவை எவை பயனில்லாதவை அதாவது நல்கூர்ந்தன்று என்பதை தனது ஒன்பதாம் பத்தில் சிறப்பாகக் கூறியுள்ளார்.
பாடல் உங்களுக்காக..
1."ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்
முறை இல் அரசன் நாடு நல்கூர்ந்தன்று. "
ஆரவாரம் மிக்க இவ்வுலகில் வாழ்பவர்க்கெல்லாம் நான் சொல்வது யாதெனில்,
முறையில்லா மன்னன் அரசாளும் நாட்டில் வாழ்தல் பயனில்லாதது.
2. "மிக மூத்தோன் காமம் நல்கூர்ந்தன்று. "
வயது முதிர்ந்த பின்னர் வரும் காமம் பயனில்லாதது.
3. "செற்று உடன் உறைவோனைச் சேர்தல் நல்கூர்ந்தன்று."
பகைவனுடன் கூடியிருத்தல் பயனில்லாதது.
4. "பிணி கிடந்தோன் பெற்ற இன்பம் நல்கூர்ந்தன்று. "
நோயில் வருந்துபவன் பெற்ற இன்பம்
பயனில்லாதது.
5."தற் போற்றாவழிப் புலவி நல்கூர்ந்தன்று."
தன்னைப் போற்றாத கணவனிடம் கூடி
வாழ்தல் பயனில்லாதது.
6. "முதிர்வு உடையோன் மேனி அணி நல்கூர்ந்தன்று. "
மூப்படைந்த பின்னர் உடலழகு பயனில்லாதது.
7."சொல் செல்லாவழிச் சொலவு நல்கூர்ந்தன்று. "
மதிப்பில்லாத இடத்தில் பேசப்படும் சொல் பயனில்லாதது.
8"அகம் வறியோன் நண்ணல் நல்கூர்ந்தன்று. "
வறுமையில் வாடுபவன் வீட்டுக்குச் செல்ல விரும்புவது பயனில்லாதது.
9 "உட்கு இல்வழிச் சினம் நல்கூர்ந்தன்று."
எதைக் குறித்தும் அச்சப்படாமல் கோபப்படுதல் பயனில்லாதது.
10 ."நட்பு இல்வழிச் சேறல் நல்கூர்ந்தன்று."
நட்பு பாராட்ட விரும்பாதவரை நண்பனாக்கிக்கொள்ள விரும்புவது பயனில்லாதது.
(தொடரும்)
Comments
Post a Comment