முதுமொழிக்காஞ்சியின் பொய்ப்பத்து

முதுமொழிக்காஞ்சியின் பொய்ப்பத்து


முதுமொழிக்காஞ்சியின் ஏழாம் பத்து

பொய்ப் பத்து எனப்படும்.

நாம் மெய்யாக கருதக் கூடியவைசில நேரங்களில் பொய்யாகவும் இருக்கக்கூடும்.

அப்படி மதுரைக் கூடலூர் கிழார் பார்வையில் பொய்யாக கருதப்பட்டவை எவை எவை என்பதை அவர் பொய்ப் பத்து என்ற தலைப்பில் வரிசைப் படுத்திக் கூறியுள்ளார்.

வாருங்கள் எவையெல்லாம் பொய்யென அறிந்து கொள்வோம்.

பாடல்கள் உங்களுக்காக...

1."ஆர்கலி உலகத்து மக்கட்கு எல்லாம்-

பேர் அறிவினோன் இனிது வாழாமை பொய். "

ஆரவாரம் மிக்க உலகில் வாழும் மக்களுக்கெல்லாம்  பொய்யாக கருதப்படுவது யாதெனில்,

மிக்க அறிவுடையவன் சிறப்பாக வாழமாட்டான் என்பது பொய். 

2. பெருஞ் சீரோன்தன் வெகுளி இன்மை பொய். 

செல்வம் மிக்கவர்   சினம் கொள்ளாதிருப்பார் என்று நினைப்பது பொய். 

3."கள் உண்போன் சோர்வு இன்மை பொய்." 

கள் உண்பவன் ஒழுக்கக் குறைபாடு 

இல்லாதிருப்பான் என்று நம்புவது பொய். 

4."காலம் அறியாதோன் கையுறல் பொய்."

உரிய காலம் அறிந்து செயல்படாதவன் 

அந்தச் செயலை செய்து முடிப்பான் 

என்று நம்பி இருப்பது  பொய். 

5."மேல் வரவு அறியாதோன் தற் காத்தல் பொய். "

வரவு  அறிந்து செலவு செய்யாதவன் தன்னைக் காத்துக்கொள்வான் என்று நினைப்பது பொய். 

6."உறு வினை காய்வோன் உயர்வு வேண்டல் பொய். "

வரும் துன்பத்தைப் பொறுத்துக்கொள்ளாதவன் உயர நினைப்பது  பொய்.

7."சிறுமை நோனாதோன் பெருமை வேண்டல் பொய். "

தனக்கு ஏற்படும் சிறுமைகளைப் பொறுத்துக்கொள்ள இயலாதவன்

பெருமையை விரும்புவது பொய்.

8."பெருமை நோனாதோன் சிறுமை வேண்டல் பொய்." 

பெருமையைப் போற்றாதவன் சிறுமைப்படமாட்டான் என்று நினைப்பது பொய்.

9."பொருள் நசை வேட்கையோன் முறை செயல் பொய். "

பொருளாசை கொண்டவனிடம் நீதியை எதிர்பார்ப்பது  பொய்.

10."வாலியன் அல்லாதோன் தவம் செய்தல் பொய். "

மனத்தூய்மை இல்லாதவன் தவம் செய்தல் பொய். 


(தொடரும்)




Comments