இன்னாது அம்ம இவ்வுலகம்

இன்னாது அம்ம இவ்வுலகம் 


இந்த உலகம் எப்படிப் பட்டது? 

பணக்காரர்களுக்கான உலகமா?

ஏழைகளுக்கானதா?

ஒருபக்கம் வறுமை .

மற்றொரு பக்கம் ஆடம்பரமும் கொண்டாட்டமும்.

அன்றாட வாழ்வாதாரத்திற்கே 

அல்லாடும் மக்கள்  ஒருபுறம் இருக்க

கோடி கோடியாக பணம் புரளும் மனிதர்கள் 

மற்றொருபுறம் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஒன்றுமே புரியவில்லை.

ஏன் இந்த ஏற்றத்தாழ்வு?


கண்ணீர் ஒரு புறம்.

களியாட்டம் மறுபுறம்.

என்ன இது?


இப்படி மாறுபட்ட வேறுபட்ட உலகம்.

இதைப் படைத்தவர்  ஒருவரா?அல்லது

வெவ்வேறு ஆட்களா?

மனதிற்குள் எத்தனை எத்தனையோ குழப்பம்.

யாரைக் கேட்பது?

படைத்தவனிடம்தான் தான் கேள்வி கேட்க முடியும்.

இதற்கெல்லாம் காரணம் இறைவன்

என்றால்  எப்படி இப்படி 

ஏற்றத் தாழ்வான உலகை அவரால் படைக்க முடிந்தது.?


படைப்பின் மீதும் படைத்தவன்மீதும்

ஒரு  தார்மீகக் கோபம் எழுகிறது.

இப்படி படைத்தவன் மீது கேள்வி கேட்க வைத்து,அதற்கான விடையையும்

சொல்லிச் செல்லும் பாடல் ஒன்று புறநானூற்றில் உள்ளது.


 ஒரு வீட்டில் சாவிற்கான பறை ஒலிக்கிறது.

அழுகையும் கூப்பாடும் நெஞ்சைப் பிழிகிறது.

மற்றொரு வீட்டில் மகிழ்ச்சி தரும் முழவின் சங்கீதம் ஒலிக்கிறது. 


ஒரு வீட்டில் மணமக்கள் பூமாலை சூடி மகிழ்ச்சியோடு இருக்கின்றனர்.

மற்றொரு வீட்டிலோ துணையை இழந்த துக்கத்தில் இருக்கும் தலைவி . அவள் மையிட்ட கண்களில் நீர் கோர்த்து துன்புற்று வாடிக்கிடக்கிறாள்.


 இப்படி இன்பமும் துன்பமும் கலந்த இனிமையற்ற இவ்வுலகைப் படைத்தவன் நிச்சயமாக பண்பில்லாதவனாகத்தான்

இருக்க வேண்டும் .


இது ஒன்றும் புதியதல்ல.

இதுதான் உலகம்.

உலகின் இயல்பு இப்படித்தான் இருக்கும்.

இந்த உண்மையைப் புரிந்துகொண்டோர்

அதிலுள்ள இனியதை மட்டும் காண்பர். 

இப்படியொரு அருமையான கருத்தினைக்கொண்ட  புறநானூற்றுப் 

பாடல் உங்களுக்காக....


"ஓர் இல் நெய்தல் கறங்க, 

ஓர் இல் ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப்,

புணர்ந்தோர் பூவணி அணிய,

பிரிந்தோர் பைதல் உண்கண் பனிவார்பு உறைப்ப,

படைத்தோன் மன்ற, அப் பண்பி லாளன்!

இன்னாது அம்ம, இவ் வுலகம்;

இனிய காண்க, இதன் இயல்புணர்ந்தோரே."

              -புறநானூறு

                                                 பாடியவர் பக்குடுக்கை நன்கணியார் 

என்ற புலவர்.

"ஒரு வீட்டில்

நெய்தல் நிலத்திற்குரிய சாவு பறை

ஒலிக்க

ஒரு வீட்டில்

இனிய மகிழ்வான 

 சங்கீதம்

முழங்க

மற்றொரு வீட்டில் 

கூடினோர் அதாவது  மணமக்கள்

 பூமாலை

சூடி மகிழ்ந்த இருக்க

அடுத்த வீட்டில்

 கணவனை இழந்தவள்

துன்பம் மிகுதியால் 

அவளது மை எழுதிய கண் 

நீர் வார்த்து உதிர்த்து நிற்க

இது என்ன மாறுபாடான உலகம்!

 படைத்தவன் உறுதியாக   

 பண்பு இல்லாதவனாகத்தான் இருக்க வேண்டும்.

 கேளுங்கள் இவ்வுலகம் இனியது

என்று நம்பிக்கொண்டிருந்தால் அது தவறு

உலகம் இனியது அன்று.

இதுதான்  உலகு.  இப்படிப்பட்ட உலகில்தாம் நாம் வாழ்ந்தாக வேண்டும்.

அதனால் உலக எதார்த்தத்தைப் புரிந்துகொண்டு நல்லதை மட்டுமே காணுங்கள் "என்கிறார்  நன்கண்ணியார்.

நல்லதும் கெட்டதும் சேர்ந்ததுதான் உலகம்.

ஐயோ கெட்டது நடந்து விட்டதே என்று

புலம்பிக் கொண்டே இராமல்

நிகழும் நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு மகிழ்ச்சியாக கடந்து போய்விடுங்கள்.

கெட்டவை நிகழ்ந்து

விடுமோ என்று கலக்கினால் அதற்குமேல் ஓர் அடிகூட எடுத்து வைக்க முடியாது.

மகிழ்ந்திருக்க ஒரே வழி நல்லவற்றை மட்டும் மனதில் ஏற்றிக் கொண்டு

திரும்பிப் பார்க்காமல் முன்னேறுவதுதான்

 என்று சொல்லித் தந்திருக்கிறார் 

பக்குடுக்கை நன்கணியார் .



இன்னாது அம்ம, இவ் வுலகம்;

இனிய காண்க, இதன் இயல்புணர்ந்தோரே."


அருமையான சிந்தனைக்குரிய செய்தி

இல்லையா?


Comments