பாவி யார்

பாவி யார் 

பாவம்  செய்தவர்கள் நரகத்துக்குப்

போவார்கள்.

நல்லது செய்பவர்கள் மோட்சத்திற்குப்

போவார்கள் இப்படிச் சொல்ல 

கேட்டிருக்கிறோம்.

மோட்சம் எங்கே இருக்கிறது என்றால்

மேலேயும் நரகம் எங்கே

இருக்கிறது என்றால்

கீழேயும் கையைக் காட்டி

வழியைச் சொல்லித் தந்து வளர்க்கப்பட்டிருக்கிறோம்.

உண்மையில் நரகத்தையோ 

சொர்க்கத்தையோ பார்த்தவர்

எவரும்

உண்டா என்றால்....


கண்டவர் விண்டிலர்.

விண்டவர் கண்டிலர்

இதுதான் பதிலாக இருக்கும்.


பாவி யார் என்று கேள்வி கேட்டால்

தீயசெயல்கள் செய்பவர் அனைவரும்

பாவிகள் என்று பட்டென்று

சொல்லிவிடுவோம்.

எவை தீயசெயல் என்று

கேட்டால் ஆளாளுக்கு சற்று

மாறுபட்டு நிற்போம்.

ஒருவர் தீமை என்று நினைப்பது

இன்னொருவருக்குத் தீமையாகத்

தெரியாது.

காலமும் சூழலும் ஒவ்வொருவருக்கும்

மாறுபட்ட பாடங்களைக் கற்பித்திருக்கும்.


அதனால்தான் சிந்தையில்

மாறுபாடும் வேறுபாடும் கொண்ட

மனநிலையோடு வளர்ந்திருக்கிறோம்.

பாவம் செய்தவன் பாவி.


என்ன பாவம் செய்தவன்

பாவி?

இந்தக் கேள்விக்கு   நீங்கள் எதிர்பாராத

பதிலைத் தருகிறது விவேக சிந்தாமணி.


யார் பாவி என்று சொல்லும் விவேக் சிந்தாமணி பாடல் உங்களுக்காக...


"கருதிய நூல் கல்லாதான் மூட னாகும்

கணக்கறிந்து பேசாதான் கசட னாகும்

ஒரு தொழிலும் இல்லாதான் முகடி யாகும்

ஒன்றுக்கும் உதவாதான் சோம்ப னாகும்

பெரியோர்கள் முன்நின்று மரத்தைப் போலும்

பேசாமல் இருப்பவனே பேய னாகும்

பரிவு நழுவினவன் பசப்பனாகும்

பசிப்பவருக்கு இட்டு உண்ணான்

பாவி யாகும்"


    -   விவேக சிந்தாமணி 



 நல்ல நூல்களைக் கற்றறியாதவன்

 அறிவில்லாதவன் ஆவான்.

 எங்கே எப்படி யாரிடம் எந்த அளவுப்

 பேசவேண்டும் என்ற அறிவு இல்லாதவன்

ஒழுக்க நெறி அறியாதவனாவான்..

 ஒரு வேலையும் செய்யாது முடங்கிக்

 கிடப்பவன் சோம்பேறியாவான். 

 பெரியவர்கள் முன்னால் பணிவு இல்லாது

 மரம் போல் ஒன்றுமே பேசாது நின்றிருப்பவன்

மதிகெட்டவனாவான். 

வேலை செய்யாது இருப்பதற்காக

ஏதேதோ காரணங்கள் சொல்லி

தட்டிக்கழிப்பவன் ஏமாற்றுக்காரன் ஆவான்..

பசியோடு இருப்பவனைப் பார்க்க

வைத்து தான் மட்டும் உண்பவன் பாவியாவான்"

என்கிறது விவேக சிந்தாமணி.


இதுவரை பாவம் செய்கிறவன் பாவி

என்று நினைத்திருந்தோம்.

அதாவது அறம் அல்லாதவற்றைச் செய்கிறவர்களை எல்லாம் பாவிகள் என்ற பட்டியலில் சேர்த்து வைத்திருந்தோம்.


பிறர்க்கு தீமை செய்வது பாவம்

என்பது நமது கணிப்பு.

நாம் தீமை என்று கணித்து வைத்திருந்த

பட்டியலில் அன்னமிடாதிருத்தல்

பாவமாக சேர்ந்திருக்காது.

ஆனால் பசித்தவனுக்கு உணவு 

வழங்காது தான் மட்டும் 

உண்ணுவது பாவங்களிலேயே

பெரும் பாவமாம்.

பாவி என்றால் பசித்தனுக்கு உணவு கொடுக்காதவன்தான் பாவி என்கிறது

விவேக சிந்தாமணி.


இனி இப்படியொரு பாவம் செய்ய மனம் 

வருமா?

வராதல்லவா?


பசித்தவரையும் புசிக்க வைத்து பழி பாவங்களிலிருந்து விலகியிருப்போம்.

"பசியோடு இருப்பவனைப் பார்க்க

வைத்து தான் மட்டும் உண்பவன் பாவியாவான்" என்பதை மனதில் எழுதி வைத்து

பாவி என்ற பெயர் இல்லாது

நற்பெயரோடு  வாழ்ந்திருப்போம்.




 

 

 



Comments