கள்வம் என்பார்க்கும் துயிலில்லை
கள்வம் என்பார்க்கும் துயிலில்லை
படுத்தால் தூக்கமே வரமாட்டேங்கிறது.
கண்ட கண்ட சிந்தனை எல்லாம்
கண்முன்னர் வந்து நின்று
வேடிக்கை காட்டுகிறது.
தூக்க மாத்திரை போட்டு தூங்குகிறேன்
என்று புலம்பும் பெரிய மனிதர்கள்
மிகுதியான காலம் இது.
ஆனால் ஒரு சாதாரண கூலித்தொழிலாளி
படுத்ததும் தூங்கிவிட்டுகிறான்.
இந்தத் தூக்கம் ஏன் பாரபட்சம் காட்டுகிறது?
எதனால் இப்படி நடக்கிறது?
இருக்கிறவனுக்கு தூக்கம் இல்லை.
இல்லாதவனுக்கு தன் தூக்கம் வரவில்லையே என்று கவலை இல்லை.
இந்த இருவருக்கு மட்டும் தான் தூக்கம் இல்லையா?
இன்னும் சிலருக்கும் தூக்கம் வருவதில்லையாம்.
யார் சொன்னார்?
யார் சொன்னால் என்ன?
சொன்ன கருத்தில் உண்மை
இருக்கிறதா ?
நமக்கு அவர் சொல்லிய கருத்தில் உடன்பாடு இருக்கிறதா என்று பார்த்து விடுவோம் வாருங்கள்.
கள்வம்என் பார்க்கும் துயில்இல்லை; காதலிமாட்(டு)
உள்ளம்வைப் பார்க்கும் துயல்இல்லை; ஒண்பொருள்
செய்வம்என் பார்க்கும் துயில்இல்லை; அப்பொருள்
காப்பார்க்கும் இல்லை துயில்.
-நான்மணிக்கடிகை
"திருடுவதற்காக ஆள் நடமாட்டம் இல்லாத நேரம் பார்த்து செல்ல வேண்டும் என்று காத்திருக்கும்
கள்வருக்கு உறக்கம் வாராது .
காதலியிடம் மனதைப் பறிகொடுத்துத் தவியாய்த் தவிக்கும் காதலனுக்குத் தூக்கம் வராது.
செல்வம் சேர்க்கவேண்டும் என்று இரவு பகல் பாராமல் உழைப்பவர்களுக்குத் தூக்கம் வாராது .
தேவைக்கு அதிகமாக சேர்த்த வைத்திருக்கும் பொருளைக் காப்பற்ற வேண்டும் என்ற கவலை உள்ளவர்களுக்கும் தூக்கம் வராது."
என்கிறார் விளம்பி நாகனார்.
திருடன், காதலன் ,பொருள்ஈட்ட ஓடிக்கொண்டே இருப்பவன்,
ஈட்டிய பொருளை பாதுகாக்க வேண்டுமே என்ற கவலை உள்ளவன்
ஆகிய நால்வரும் தூக்கம் தொலைத்தவர்களாம்.
பணத்தால் தூக்கத்தை வாங்க முடியாதா?
வேடிக்கையான தூக்கம் தொலைத்த மனிதர்கள்!
"கள்வம் என்பார்க்கும் துயிலில்லை; காதலிமாட்டு
உள்ளம் வைப்பார்க்கும் துயிலில்லை; ஒண்பொருள்
செய்வம் என்பார்க்கும் துயிலில்லை; அப்பொருள்
காப்பார்க்கும் இல்லை துயில்."
நல்ல பாடல் இல்லையா?
Comments
Post a Comment