காளமேகத்தின் எழுத்து விளையாட்டு
காளமேகத்தின் எழுத்து விளையாட்டு
பொருளற்ற ஒற்றை எழுத்தை அடுக்கி வைத்து பொருள் உள்ள பாடல் புனையநல்ல கவித்துவம் வேண்டும்.
'து 'வரிசையில் பாடுக.' தா 'வரிசையில் பாடுக என்று எளிதாகச் சொல்லிவிடலாம்.
வெறுமனே எழுத்தை அடுக்கி வைத்தால் போதுமா?
பொருள் இருக்க வேண்டும்.
கவித்துவம் இருக்க வேண்டும்.
எழுத்தை வைத்து விளையாட்டுக்காட்டி மகிழ்வதில் சிலருக்கு ஆசை இருக்கும்.
உண்டு.
காளமேகத்திடம் இப்படியொரு விளையாட்டு விளையாட
பார்க்க ஒருவருக்கு ஆசை.
தனது ஆசையை காளமேகம் முன்னர் வைத்தார்.
"அதனால் என்ன பாடி விட்டால் போயிற்று.
எந்த எழுத்தொடு விளையாட வேண்டும்" என்று கேட்டார் காளமேகம்.
'டுடுடு 'என்று சாதாரணமாக சொல்லிவிட்டார் அந்த மனிதர்.
வெறும் 'டு'வை வைத்து எப்படி பாடல் பாட முடியும்
என்றுதானே நினைக்கிறீர்கள்.
காளமேகத்திடமேயேவா?
பாடல் உங்களுக்காக...
"ஓகாமா வீதோநே ரொக்க டுடுடுடுடு
நாகர் குடந்தை நகர்க்கதிபர் - வாகாய்
எடுப்பர், நடமிடவர், ஏறுவர்அன் பர்க்குக்
கொடுப்பர், அணிவர் குழை'
என்று பாடி அசத்திவிட்டார் காளமேகம்.
'டு 'என்ற எழுத்துக்குத் தனித்த பொருள் உண்டா என்றால் இல்லை என்பதுதான் நமது பதிலாக இருக்கும்.
ஆனால் பாடலின் முதல் வரியில் உள்ள ஓ, கா, மா, வீ, தோ ஆகிய ஐந்து நெடில் எழுத்துகளுடன் தனித்தனியே "டு' சேர
ஓடு, காடு, மாடு, வீடு, தோடு எனச் சொற்கள் அமைகிறதல்லவா?
அவற்றைக் கீழேயுள்ள வினைச்சொற்களுடன் முறையே சேர்த்து சிவனது இயல்பை அறிந்துகொள்ளச் செய்தி திருக்கிறார் காளமேகம்.
சிவனின் பிச்சைப் பாத்திரம் ஓடு.
அவர் நடனமிடும் இடம் காடு.
ஏறும் வாகனம் மாடு.
வணங்குவார்க்கு அளிப்பது வீடு.
காதில் அணிந்திருப்பது தோடு .
இப்படிச் சேர்த்துப் படிக்க வைத்து
நம்மையெல்லாம் அசர வைத்துவிட்டார் காளமேகம்.
எழுத்தோ சொல்லோ சேருமிடம் சேர்ந்தால்
பெருமை சேராதா என்ன!
"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே' என்று தொல்காப்பியர் கூறியபடி, எழுத்துக்கு பொருள் கொடுத்து
கவி விளையாட்டு விளையாடி நம்மையும்
களிக்க வைத்துவிட்டார் காளமேகம்.
.
டு டு டு மட்டுமல்ல. எந்த எழுத்தோடும்
இன்னொரு சொல் சேருமானால் பொருளிருக்கும்.
அது காளமேகம் முன்னர் வந்து நின்று கவி
நடம் புரியும்.
இதுதான் இங்கே நிகழ்ந்துள்ளது.
அருமையான பாடல்
விடுகதையைச் சொல்லி விடுவிக்க வைத்தது போல இருக்கும்
அருமையான பாடல் இல்லையா?
Comments
Post a Comment