ஹைக்கூ கவிதை இலக்கணம்

ஹைக்கூ கவிதை இலக்கணம் 


ஹைக்கூ கவிதை என்றதும்

அங்கங்கே வார இதழ்களிலும்

நாளிதழ்களிலும் மாத இதழ்களிலும்

படித்த மூன்று வரி கவிதைகள்தான்

கண்முன் வந்து நிற்கும்.


பழையன கழிதலும் புதியன புகுதலும்

வழுவல  என்ற தொல்காப்பியரின் 

கருத்தை ஏற்று புதியனவற்றை நோக்கி

நடந்து கொண்டிருக்கிறோம்.


இந்த கணினி யுகத்தில் உட்கார்ந்து

சாப்பிடவே நேரமில்லை. கையில் 

அங்கங்கே கிடைப்பதை வாங்கி

அங்கேயே நின்று சாப்பிட்டுவிட்டு

கையைக் கழுவியும் கழுவாமலும்

பேப்பரில் துடைத்துப் போட்டுவிட்டு 

அப்படியே ஓடிக் கொண்டிருக்கிறோம்.


அப்படி இருக்கும்போது படிப்பதற்கு

எங்கே நேரம் இருக்கிறது? என்று

கேட்போர் தான் அதிகம்.


இப்படிப்பட்ட சூழலில்

இராமாயணம் ,மகாபாரதம்,

 சிலப்பதிகாரம் , பாஞ்சாலி சபதம்

போன்ற காப்பியங்களைப்

படிக்க நேரம் இருக்கப்போகிறதா என்ன?

அறுசீர் கழிநெடிலடி

எழுசீர் கழிநெடிலடி

எண்சீர் கழிநெடிலடி

என்று மிகவும் நீளமான கவிதை

வரிகளை வாசிக்கும் அளவுக்கு யாருக்கும்

பொறுமை இல்லை.


போகிற  போக்கில் ஏதோ ஒன்றிரண்டு

வரி கவிதைகளை வாசிக்கும்

பழக்கம்தான் பெரும்பாலோரிடம் உள்ளது.


அதனால்தான் என்னவோ 

இரண்டு வரி மூன்றுவரி

ஹைக்கூ 

கவிதைகளும் பெருகிவிட்டன.


அதென்னப்பா ஹைக்கூ கவிதைகள்?

பெயரே சற்று மாறுபட்டு இருப்பதால்

கண்டிப்பாக இது எங்கிருந்தோ இறக்குமதியான

கவிதை வடிவமாகத் தான் இருக்கும்

என்பது மட்டும் புரிகிறது.


உண்மைதாங்க... 

ஹைக்கூ கவிதைகளின் பிறப்பிடம்

 ஜப்பானாம்.

 ஜப்பானில் இவை ஆரம்ப காலத்தில் 

 ஐக்கூ கவிதைகள் என்று 

 அழைக்கப்பட்டனவாம்.


ஜென் தத்துவத்தில் எழுதப்பட்ட

பாக்ஷோவின் ஹைக்கூ கவிதைகள் தான்

ஜப்பானிய மொழியில் எழுதப்பட்ட

முதல் ஹைக்கூ கவிதை வடிவம் என்கின்றனர்

அங்குள்ள மக்கள்.

அதனால்தான் பாஷோ ஜப்பானிய ஹைக்கூ

கவிதைகளின் தந்தை என்று 

அழைக்கப்படுகிறார்.

ஜப்பானிய மொழியிலிருந்து

தமிழுக்கு  இது எப்படி வந்தது என்று

கேட்கிறீர்களா?


தமிழில் அறிமுகப்படுத்தியவர் வேறு

யாரும் இல்லை


 பாரதியார்தான் தமிழில் அறிமுகப்

படுத்தியிருந்தாராம்.

பாரதியார் சுதேசமித்திரன் பத்திரிகையில்

ஜப்பானிய கவிதை என்று இரண்டு

பக்கங்களுக்கு ஒரு கட்டுரை எழுதியிருந்தாராம்.

அதுதான் தமிழ் ஹைக்கூ பற்றிய

முதல் அறிமுகம் என்று கூறுகிறார்கள்.

எப்போதுமே புதுமைக்கு வித்திடுபவர்

பாரதியார்.


புதுக்கவிதையும் பாரதியாராலேயே

வேகமெடுத்தது என்று சொல்லலாம்.


 கவிக்கோ அப்துல் ரகுமான், 

 ஈரோடு தமிழன்பன், நா. முத்துக்குமார்

இன்னும் பல கவிஞர்கள் தமிழில்

அருமையான ஹைக்கூ கவிதைகள் 

படைத்துள்ளனர்.இன்னும் படைத்துக்

கொண்டிருந்தனர்.


ஹைக்கூ கவிதைகள் ஜப்பானில்

தோன்றியபோது அதற்கு வழங்கப்பட்ட

பெயர் ஹொக்கூ என்பதாம்.

இந்த ஹொக்கூ நாளடைவில் ஹைக்கூவாக

புதிய வடிவம் பெற்றது என்கிறார்கள்.


ஹைக்கூ கவிதைகளுக்கு என்று

ஒரு இலக்கணம் உண்டு.

ஹைக்கூ கவிதைகள் மூன்று வரிகளுக்கு

மிகாமல் இருக்க வேண்டும்.

முதல் வரியில் ஐந்து அசைகளும்

இரண்டாவது வரியில் ஏழு அசைகளும்

மூன்றாவது  வரியில் ஐந்து அசைகளும்

மட்டுமே இருக்க வேண்டும்.

ஆக மொத்தம் பதினேழு அசைகள்

கொண்டதாக ஒரு ஹைக்கூ கவிதை

இருக்க வேண்டும்.

இதுதான் ஹைக்கூ கவிதைகளின் 

இலக்கணமாக

கூறப்பட்டுள்ளது.


ஹைக்கூ  கவிதைகள் ஒரு பொருளைப் பற்றியதாக

இருக்க வேண்டும்.

அல்லது ஒரு உணர்வின் பிரதிபலிப்பாக

இருக்க வேண்டும்.


பார்த்த ஒரு காட்சி மனதைப்

பாதித்தால் உடனை ஹைக்கூ

கவிதையாக உருமாற்றம்

அடைந்துவிடுகிறது.

இதுதான் இன்று நாம் வாசிக்கும்

பெரும்பாலான ஹைக்கூ கவிதைகள்.


இலக்கண விதிக்கு உட்பட்டு

பலர் எழுதுவதில்லை.

இது ஜப்பான் ஹைக்கூ கவிதைக்கான

இலக்கணம் என்று நினைப்பதாலோ

என்னவோ நாம் பல நேரங்களில் 

இலக்கணத்தை மறந்து உணர்வுக்கு

மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து

எழுதி விடுகிறோம்.


அதுவும் ஒன்றும் தப்பு

இல்லை.


சொல்ல வந்த கருத்து

நல்லதாக

 சமுதாயத்தின் பழுது 

நீக்கப் பயன்படுவதாக

உண்மையை உரக்கச்

சொல்வதாக

எதார்த்தத்தை உணர வைப்பதாக

இருக்குமானால் அது எந்த வடிவில்

இருந்தாலும் ஏற்றுக் கொண்டு

கொண்டாடுவதில் தப்பே இல்லை

என்பது எனது கருத்து.


என் கருத்துக்கு மாற்றுக் கருத்து

உடையவர்கள் இருக்கலாம்.

அவரவர் கருத்தினை முன் வைக்க

அனைவருக்கும் உரிமை 

உண்டு.

அதுதான் கருத்துச் சுதந்திரம்.

எல்லாக் கோணங்களிலிருந்தும் வரும்

கருத்தினை அறிந்து கொள்ளுவது தான்

நன்று என நினைக்கிறேன்.


என்னை சிந்திக்க வைத்த

மகிழ வைத்த

நெகிழ வைத்த 

ஒரு சில 

ஹைக்கூ கவிதைகள் 

ஒரு சில உங்களுக்காக....


தெருவிளக்கில் படிக்கிறவனுக்குத்

தெரிந்திருப்பதில்லை

மின்சாரச் சிக்கனம்

               -  ராஜ்

               -  


சாகவே இல்லை

சாதிச் சண்டையில்

சாதி


 -  புதுவைத்  தமிழ் நெஞ்சன்

 -  


எத்தனையோ இருந்தென்ன

இன்னும் வரவில்லை 

சேரிக்குள் தேர்!


  -   செ. ஆடலரசன்

  


தீப்பெட்டி 

திறந்தால்

பிஞ்சு விரல்கள்.

            -கணையாழி 



இருண்ட கிராமத்தின் வழியே 

இரக்கமின்றி போகின்றன

நகரத்திற்கு மின்கம்பிகள்


                 - நாவம்மா முருகன்



துபாயில்  அதிகமா வெய்யில்?

கேள்வி கேட்டோர் கவனமெல்லாம்

அவன் இறக்கிவைத்த பையில்


-   ஈரோடு தமிழன்பன்



உங்களுக்கும் பிடித்திருக்கும்

என்று நம்புகிறேன்.




ஹைக்கூ கவிதைகளின் இலக்கணம்

என்ன என்று கேட்டால்

முதல்வரியில் ஐந்து அசை

இரண்டாவது வரியில் ஏழு அசை

மூன்றாவது வரியில் ஐந்து அசை

இருக்க வேண்டும் என்பதை மட்டும் 

மனதில் எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.








  


 

Comments