காந்தி மேலாடை துறந்த கதை
காந்தி மேலாடை துறந்த கதை
காந்தியின் மேலாடையைத் துறக்க வைத்த
நிகழ்வு நடைபெற காரணமாக
இருந்த இடம் மதுரை.
வெளிநாட்டில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற
காந்தி அதுவரை ஆடம்பர ஆடை
அணிந்தவராக மக்களைச் சந்தித்து வந்தார்.
ஒரே நாளில் காந்தி தன்னை முற்றிலுமாக
மாற்றி அரை நிர்வாண நிலைக்கு
மாறிவிடவில்லை.
இவை எல்லாம் படிப்படியாக நிகழ்ந்தது.
ஒருமுறை சம்பராண் பகுதியில் உள்ள
விவசாயிகளைச் சந்திக்க காந்தி மோதிஹாரி
என்ற ரயில் நிலையம் வந்தடைந்தார்.
அப்போது காந்தியைப் பார்க்க ஏராளமானோர்
வந்திருந்தனர்.அவர்களுள் பலர் மேலாடை
இல்லாமல் இருந்தனர்.
அது காந்தியடிகள் மனதில் ஒரு
தாக்கத்தை ஏற்படுத்தியது.
காந்தியடிகளைச் சந்திக்க வந்த தொழிலாளிகள்
தங்கள் கஷ்டங்களை எடுத்துரைத்தனர்.
தங்களுக்கு ஆலை நிர்வாகம் பல நெருக்கடிகளைத்
தருவதாகக் கூறினர்.
அவர்கள் காலணி அணிய ஆலை நிர்வாகம்
அனுமதிப்பதில்லை என்ற தகவலையும் தெரிவித்தனர்.
காலணி அணியாமல் ஒரு மனிதன்
நடப்பதில் உள்ள சிரமத்தைப் புரிந்துகொண்டார்
காந்தியடிகள்.
இனி தானும் காலணி அணியப்
போவதில்லை என அன்றைய தினமே
முடிவெடுத்தார்.
அதன்பிறகு வெறுங்காலில் நடப்பதை
வழக்கமாக்கிக் கொண்டார்.
விவசாய கூலிப் பெண்களிடையே தூய்மை பற்றிய
விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
என்று காந்தியடிகள் நினைத்தார்.
தன் மனைவி கஸ்தூரிபாயிடம் சொல்லி பெண்கள்
தினசரி குளித்து தூய ஆடை அணிய வேண்டும்
என்று கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தும்படி
கூறினார்.கஸ்தூரிபாயுடன் தானும்
அந்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்குச் செல்வார்.
அப்போது ஒரு கிராமத்தில் உள்ள பெண்களிடம்
அதைப் பற்றிப் பேசியபோது,
"உடுக்க ஒரே ஒரு ஆடை மட்டுமே என்னிடம் உள்ளது.
இருக்கிற ஒரு ஆடையையும் துவைக்க
வேண்டுமென்றால் அது உலரும்வரை
நான் எதை உடுத்துவது ?"என்று எதிர்க்கேள்வி
கேட்டார் அந்தப் பெண்.
அந்தக் கேள்வியைச் சற்றும் எதிர்பார்க்காத காந்தி
அதிர்ந்து போனார்.
அந்தப் பெண் கேட்ட கேள்வியில் இருந்த
எதார்த்தத்தைப் புரிந்து கொண்டார் காந்தியடிகள்.
"எனக்கு இன்னொரு சேலை வாங்கிக்
கொடுங்கள். நான் ஒரு சேலையைத் துவைத்துக்
காயப்போடும்போது இன்னொரு சேலை
மாற்று சேலையாக உடுத்துக் கொள்ள
உதவியாக இருக்கும்"
என்று காந்தியிடம் கோரிக்கை
வைத்தார் அந்தப் பெண்.
அப்போதுதான் உடுக்க மாற்றுச் சேலைகூட
இல்லாத பெண்கள் உள்ளனர் என்பதைத்
தெரிந்து கொண்டார் காந்தி.
உடனே தன் மேல் துண்டை
எடுத்து அந்தப் பெண்ணிற்குக்
கொடுக்கச் செய்தார் .
அன்றுமுதல் இனி நான் மேல் துண்டும்
அணிவதில்லை என்று முடிவு செய்தார்.
1918 ஆம் ஆண்டு ஒரு தொழிற்சாலையில்
வேலை செய்யும் தொழிலாளர்கள் நடத்திய
போராட்டத்தில் கலந்து கொள்ள தலைப்பாகை
அணிந்து கொண்டு சென்றார் காந்தியடிகள்.
போராட்டத்திற்கு வந்திருந்த மக்களின்
நிலைமை பார்ப்பதற்குப் பரிதாபமாக
இருந்தது. அவர்கள்முன் தான் ஒரு ராஜா
போன்று நிற்பது காந்தியடிகளின்
மனதில் ஒரு நெருடலை ஏற்படுத்தியது.
"தான் அணியும் தலைப்பாகைக்குப் பயன்படுத்தும்
துணியில் குறைந்தது நான்கு பேர் அணியும்
ஆடை தைத்துக் கொள்ளலாமே . தனக்கு
இந்தத் தலைப்பாகை தேவைதானா?" எனச்
சிந்தித்தார். இனி தலைப்பாகையும்
அணிவதில்லை என்று முடிவு செய்தார்.
இப்படி ஒவ்வொன்றாகத் துறந்து வந்த
காந்தியடிகள் 1921 ஆம் ஆண்டு
செப்டம்பர் 20 ஆம் நாள் முதல்
22 ஆம் நாள் வரை மதுரை மேல மாசி வீதியுள்ள
ஒரு வீட்டில் தங்கி அங்கு நடந்த
பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள நேரிட்டது.
அங்கேயும் அவர் கண்களில் தென்பட்டவர்களுள்
பெரும்பான்மையினர் மேலாடை இல்லாத
பாமர விவசாயிகளாகவே இருந்தனர்.
இந்தியாவின் முதுகெலும்பே
கிராமப்புறங்களில்தான்
இருக்கிறது என்ற காந்தி மதுரையில்
ஏழை விவசாயிகள் மேலாடை அணிய
முடியாத நிலையில் வறுமையில் இருப்பதைக் கண்டு
மனம் நொந்தார்.
பிரிட்டிஷ் ஏகாதிபத்திய அரசுக்கு
இந்தியாவின் நிலைமையைப் புரிய
வைக்க இவர்களைப் போலவே தானும்
இருக்க வேண்டும் என்று முடிவெடுத்தார்.
இனி தானும் மேலாடை அணியப் போவதில்லை
என்று மதுரையில் வைத்து முடிவு செய்தார்.
செப்டம்பர் 22 ஆம் நாள்
காந்தி மதுரையில் தான் தங்கி
இருந்த அறையை விட்டு
வெளியே வரும்போது முதன்முதலாக
அரை நிர்வாண கோலத்தில் இன்று நாம்
பார்ப்பது போன்று மேலாடை எதுவும்
இல்லாதவராக வெளியில் வந்தார்.
பார்த்தவர்கள் அதிர்ந்து போயினர்.
அதேநாள் மதுரை இராமநாதபுரம் சாலையில்
நடைபெற்ற கூட்டத்தில் மேலாடையின்றி
பேசி உங்களில் ஒருவன் நான் என்பதை
மெய்ப்பித்தார்.இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க
நிகழ்வு மதுரையில் நிகழ்ந்தது.
அந்த இடம் காந்தி பொட்டல் என்ற பெயரில்
பிரபலமடைய காந்தி எடுத்த இந்த முடிவு
காரணமாக அமைந்தது.
அதே இடத்தில் காந்திக்கு ஒரு சிலையும்
அமைக்கப்பட்டது.
இதன்மூலம் உலகமெல்லாம் உன்னிப்பாக கவனிக்கும்
காந்தியடிகள் வரலாற்றில் மதுரை நிரந்தர
இடம் பிடித்துக் கொண்டது.
மேலாடை இல்லாத காந்தியடிகளைப்
பார்க்கும்போது இனி மதுரை நினைவுக்கு
வராமலா போய்விடும்.....?
காந்தியடிகளின் புகைப்படத்தை காட்சிப்படுத்தி இருக்கலாம்.அவரின் எளிமையை விளக்கும் மிகச்சிறப்பானப் பதிவு.
ReplyDeleteVery nice inspiring article. Let us spread Love and Laughter.
ReplyDelete