மூன்றாவது மொழி தேவையா ?

             மும்மொழிக் கொள்கை

புதியன புகுதலும் பழையன 
 கழிதலும் வழுவல"
 இது காலத்தின் கட்டாயம்.
 புதிய தொழில் நுட்பங்களுக்கு ஏற்ப
 தேவைகளுக்கு ஏற்ப மாற்றங்கள்
 நிகழ்ந்து கொண்டேதான் இருக்கும்.

அந்த மாற்றங்களை ஏற்றுக்கொண்டுதான்
ஆக வேண்டும்.
அதனால் பல நன்மைகள் கிடைக்க
வாய்ப்பு உள்ளது.

ஆனால் மாற்றங்களைக் கொண்டுவர
வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே வைத்துக்
கொண்டு திட்டங்கள் கொண்டுவருவது
நன்மை பயக்குமா என்றால் சற்று 
ஐயம்தான் எழுகிறது.


மொழிப்பாடம் படிப்பது வேறு.
துறைசார் பாடங்கள் படிப்பது வேறு.

துறைசார் பாடங்கள் படிப்பது
காலத்தின் கட்டாயம்.
மொழிசார் பாடங்கள் சிந்திக்கும்
ஆற்றலைத் தூண்டுபவையாக
இருத்தல் வேண்டும்.

பன்மொழிப் புலமை பெறுவதில்
தவறில்லை.
அது நாமாக விருப்பப்பட்டுப்
படிப்பதாக இருக்க வேண்டும்.
வலிந்து திணிக்கப்படும்போது
ஒரு சலிப்பு ஏற்படும்.
அதுவும் சிறுவர்களாக இருக்கும்போது
என்பது பாடச் சுமை ஏற்பட்டு
படிப்பு என்றாலே ஒரு வெறுப்பு
வந்துவிடும்.
கல்வி சுகமாக இருக்க வேண்டும்.
சுமையாக இருக்கக் கூடாது 
என்றுதான் எத்தனையோ திட்டங்களை 
வகுத்துச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.
அதன் பலன் முழுமையாக மாணவர்களைச் 
சென்றடைய வேண்டும்.
சுமை என்று நினைத்து விலகி
ஓடிவிடக் கூடாது.

பல மொழிகளைப் படிக்கும்போது
எந்த மொழியிலும் திறமை ஏற்படாது.
பெயருக்காக எனக்கு நான்கு மொழி
தெரியும். ஐந்து மொழி தெரியும்
என்று வேண்டுமானால் சொல்லிக் 
கொள்ளலாம்.

மும்பையில் வசிக்கிற நம்மில் பலர்
இந்தி படித்துத் தேர்ச்சி
பெற்றவர்களாக இருப்போம்.
மராட்டி படித்து முதல் வகுப்பில்  தேர்ச்சி 
பெற்ற சான்றிதழ் வைத்துக் கொண்டிருப்போம்.

ஆனால் எத்தனை பேருக்கு நன்றாக மராட்டி
பேச வரும்?  எத்தனை பேருக்குத் தவறில்லாமல்
நாலுவரி எழுத வரும் ?

மராட்டி பேசும் மக்களோடு பழக்கம்
வைத்திருப்பவர்கள் மட்டுமே
ஓரளவு மராட்டி பேசுவர்.

மற்றபடி நான் மராட்டி படித்திருக்கிறேன்
என்று பெருமைக்காக வேண்டுமானால்
சொல்லிக் கொள்ளலாம்.

இந்தி ஓரளவு சரளமாக பேச வருவதற்குக்
காரணம் வெளியில் சென்றால் இந்தி பேச
வேண்டிய கட்டாயம் உள்ளது.

அதிகமாக இந்தி பேசும் மக்களோடு
பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ள 
வேண்டியதிருக்கிறது. அவர்களோடு 
அன்றாடம் பேசிப் பேசி கொஞ்சம்
 பேச முடிகிறது.

பேசுகிற அளவுக்கு எழுதுவதில்
நல்ல புலமை இருக்காது....
ஒரு சிலர் மறுக்கலாம்...
ஒன்றிரண்டு பேர் மட்டும்
விதிவிலக்காக இருப்பர்.

மற்றபடி பலரின் நிலைமை 
நான் கூறுவதுபோல்தான்
இருக்கும்....இருக்க முடியும்.
இதை நான் அடித்துக் கூறமுடியும்.

 மொழிப்பாடங்கள் அதிகமாக ஆக
எந்த மொழியிலும் நல்ல தேர்ச்சி
பெற முடியாது.

பள்ளியில் படித்த தமிழ்மொழிப் பாட 
அறிவுதான் இன்றுவரை நம்மைக் கைவிடாமல்
கை கொடுத்துக் கொண்டு வருகிறது.
காரணம் தமிழுக்கு நல்ல முக்கியத்துவம்
தந்து கற்பிக்கப்பட்டது.
கூடவே ஆங்கிலமும் கற்பிக்கப்பட்டாலும்
அந்த அளவு திறன் பெற்றிருந்தோமா
என்றால் கேள்விக்குறிதான் !

கல்லூரியில் படிக்கும்போது சீன மொழி ,
ஐப்பானிய மொழி, ஜெர்மன்மொழி
என்று கலர் கலரான மொழிகளைக்
கற்று வருவர்.

ஏதோ நானும் படித்தேன் ஐப்பானிய மொழி.
எனக்கும் தெரியும் சீன மொழி என்று
வாய்ச் சவடால் விடலாம்.
கொஞ்சம் பேசச் சொல்லிக் கேட்டுப்
பாருங்கள்.

வணக்கம், நன்றி.
போயிட்டு வாறேன்   ,கொடு  , தா,
சாப்பிடு இப்படி ஒன்றிரண்டு சொற்களைத் தவிர
ஒரு தொடராக பேசத் தெரியாது.

பிற மொழிகளைப் படிப்பதில்  தப்பில்லை.
படிக்க முடியாப் பருவத்தில் எல்லா
மொழிகளையும் திணித்து எந்த 
மொழியிலும் நல்ல தேர்ச்சி
இல்லாமல் போய்விடுமோ என்ற
அச்சம்தான் வருகிறது.

கூடுதலாக தொழிற்கல்வி படிப்பதில்
பிரச்சினை இல்லை.
மொழிப்பாடம் என்னும் போதுதான் 
சற்று கலக்கம் ஏற்படுகிறது.

தாய்மொழியில் எழுதப்படிக்க தெரியவேண்டும்.
தாமாகவே கட்டுரைகள் எழுதத் 
தெரிய வேண்டும்.
இத்தனை பயிற்சிகளும் கொடுத்த
பின்னர்தானே அந்நிய மொழிக்குள் 
நுழைய வேண்டும்.

ஆங்கிலம் அலுவல் மொழி என்று ஆகிவிட்ட
நிலையில் கண்டிப்பாக கொஞ்சமாவது தெரிந்து
வைத்தால் மட்டுமே அலுவலங்களில்
தரும் விண்ணப்பங்களை நிரப்ப ,எழுத
 உதவியாக இருக்கும்.
 
ஏதோ ஒரு மொழியை மூன்றாவதாக 
படிங்கள் என்றால்....
படிக்கட்டும் விவரம் தெரிந்த பின்னர்
படிக்கட்டும்.
அது உயர்நிலைப்பள்ளிகளில் வைத்தால்
தப்பில்லை.

முளைக்கும்போது எங்காவது மூன்று இலை
வருமா?
மூன்று இலை வரவேண்டும்
என்று பிடிவாதம் பிடித்தால்....
என்ன கிடைக்கும்?
 
மாணவர்கள் இடைநிற்றல் அதிகமாக
வாய்ப்பு ஏற்படும்.

ஆரம்ப நிலையில் இரு மொழிக் கொள்கை
இருந்தால் மட்டுமே எந்த நோக்கத்திற்காக
தாய்மொழிக் கல்விக்கு அதிக முக்கியத்துவம்
கொடுக்கிறோமோ அது நிறைவேறும்.

உயர்நிலைப் பள்ளிகளில் கற்பிப்பது
வெளிமாநிலங்களுக்குச் சென்று
வேலை வாய்ப்பைப் பெற உதவியாக இருக்கும்.
இந்த எதார்த்த நிலையையும் நாம்
புரிந்து கொள்ள வேண்டும்.

ஆரம்பப் பள்ளியில் இருமொழிகள் போதும்.
உயர்நிலைப் பள்ளியில் மூன்றாவதாக
விருப்பப்பட்ட  மொழியைப் படிக்கட்டும்.

இதுதான் பெரும்பாலான கல்வியாளர்களின்
கருத்து.
அரசு கவனத்தில் எடுத்துக் கொள்ளுமா !

 








 

Comments

Popular Posts