திருவிழா கண்ட ஆட்டுக்கல்

திருவிழா கண்ட ஆட்டுக்கல்

எங்க வீட்டு ஆட்டுக்கல்லுக்கு இன்று
திருவிழா. 

வெள்ளைக் கலரை அள்ளிப்பூசி 
விடுவடுவெனத் தலையை உருட்டி 
கடகடவென கர்ஜித்து
ஐந்து நிமிடங்களுக்கு ஒருமுறை 
ஆசுவாசப்படுத்தி  இப்படி ஒரு முறையோடு 
ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தது.

எங்க வீட்டில் மட்டுமல்ல. ஊரில்
உள்ள ஒவ்வொரு ஆட்டுக்கல்லுக்கும்
அன்று கொண்டாட்டம்தான்.

ஆனால் பெண்பிள்ளைகள் எங்களுக்கு 
மட்டும் திண்டாட்டம்.
ஊரில் உள்ள கன்னிப் பெண்களுக்கெல்லாம் 
ஒருமணி நேரம் அங்கிங்கு என்று 
எங்கும் நகரவிடாமல் ஆட்டுக்கல்லை ஆட்டுவிக்கும்
பெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்தது.

நாலு நிமிடத்திற்கு ஒருமுறை ஊறப்போட்ட 
அரிசியில் கொஞ்சம் எடுத்து வாயில்
போட்டுக் கொண்டு அசை போட்டுக் கொண்டிருந்தேன்.

 கோபத்தை ஆட்டுக்கல் மீது காட்டியதால்
 வீடு முழுவதும் ஒரு அதிர்வு.

முகம் முழுக்க மாக்கோலம் வரைந்த நிலையில்
பார்ப்பதற்கே உக்கிரமாக
இருந்தது.அதுவும் ஒரு பாதுகாப்புத்தான்.
அதனால்தான் என் உக்கிரம் கொஞ்சம்
வெளியில் தெரியாமல் மறைக்கப்பட்ட
நிலையில் இருந்தது.

உள்ளம் ஊர் முழுவதும் சுத்தி சுத்தி வந்தது.
நாளை என்ன என்ன கலரில் வளையல் 
வாங்கணும்...என்னன்ன பொருட்கள் வாங்கணும்...
எப்படி தலை சீவணும்...என்ற நினைப்புவர
மனது மகிழ்ச்சிக் கடலில் மூழ்கி
திக்குமுக்காடிக்  கொண்டிருந்தது.

பக்கத்திலேயே டிரான்சிஸ்டர் ரேடியோ
ஒன்று பாடல் பாடிக் கொண்டே அருகில்
உட்கார்ந்திருந்தது.

திரைப்படப்பாடல் கேட்டுக் கொண்டே 
வேலை செய்வதால் இரண்டு பக்கா 
மாவு ஆட்டினாலும் வேலை சுமையாகத்
தெரியாது என்பது எனது நினைப்பு.

இப்படியாக திருவிழா கொண்டாட்டத்தை எங்கள்
வீட்டு ஆட்டுக்கல் வெகு விமர்சையாகக்
கொண்டாடிக் கொண்டிருந்தது.
 
அப்போது வெளியிலிருந்து ஓடிவந்த தம்பி
படக்கென்று கட்டிலில் குப்புறப் படுத்துக்
கொண்டு "அம்மா ....அம்மா "
என்று கத்தினான்.

பதறிப்போன அம்மா" என்ன...
என்னாயிற்று "ஓடிவந்து அருகில் உட்கார்ந்து
தலையைத் தடவியபடி கேட்டார்.

"எம்மா....என்னா இடி முழக்கம்...
என்னா இடிமுழக்கம் ...பயந்தே போய்விட்டேன்"
பயந்து போனவன் போல நடித்தான் தம்பி.

" இடிமுழக்கமா ? எங்க...நான் கேட்கல..."என்றார் 
அம்மா அப்பாவியாக.

"நான் வடக்குத் தெருவிலிருந்து  நம்ம 
வீடு வந்து சேரும்வரை ஒரே இடி முழக்கம்.
காது கிழியுது போங்க....
தெருவில்  இடிமுழக்கமா இருக்குதே
என்று வீட்டுக்கு ஓடி வந்தால்....
 நம்ம வீட்டுக்குள்ளேயும்
இடி முழங்குது... "சொல்லி நமட்டுச்
சிரிப்பு சிரித்தான் தம்பி.

"நம்ம வீட்டில் இடிமுழங்குதா...என்னப்பா
சொல்லுற.."அப்பாவி அம்மா மறுபடியும் 
அப்பாவித்தனமாகக் கேட்டார்.

"சும்மா கிண்டல் அடிக்கிறாம்மா...
அவன் பேச்சை எல்லாம் பெரிசா எடுத்துகிட்டு 
நீ வேற..." என்று அம்மாவை அமைதிப்
படுத்தினேன்.

"கிண்டல் எல்லாம் ஒன்றும் இல்லை...
நாளை கண்டிப்பாக மழை வரும் பாருங்க "
குசும்பாகப் பேசினான் தம்பி.

"மழை வரட்டும் ...வந்த பிறகு பார்க்கலாம்
இப்போ நக்கல் பண்ணுறதை நிப்பாட்டு.
நானே தனியாக மாவு ஆட்டுறேனே என்று 
செம கோபத்தில் இருக்கிறேன்.என் கோபத்தைக்
கிளறாத..."
 கோபத்தை தம்பிமீது கொட்டித் தீர்த்தேன்.
 
"அவன் இப்போ என்ன சொல்லிட்டான்
என்று அவன்மீது சாடுறா..."பேச்சுக்கு
முற்றுப்புள்ளி வைக்க வந்தார்
அம்மா.

"என்ன நக்கல் பண்ணிட்டேன்.. இடிமுழக்கம் 
என்று சொன்னது தப்பா..."தன் பேச்சுக்கு
வக்கலாத்து வாங்கி நின்றான் தம்பி.

"நீ என்றைக்கு தப்பா சொன்னேன்
என்று ஒத்துகிட்ட...இன்று ஒத்துக்கொள்வதற்கு...
அட போப்பா...எனக்கு மாவு ஆட்டணும்.
உன்னிடம் பேச நேரம் இல்லை" சொல்லிவிட்டு 
மாவாட்டுதலைத் தொடர்ந்தேன்.

"சரி...சரி சண்டை போடாமல்
மாவை ஆட்டு " என்னை சமாதானப்படுத்தினார்
 அம்மா.

"அட போம்மா.. மக்கு மாதிரி நீயும் அவனுக்காக
பேசிகிட்டு....அவன் ஆட்டுக்கல்லில்
எல்லா வீட்டிலும் மாவாட்டுகிறார்கள் இல்லையா...
அதைத்தான் இடிமுழக்கம் என்று சொல்லி
கிண்டலடிக்கிறான்...நீயும் போயி..."
அவன் நையாண்டியின் காரணத்தை அம்மாவுக்குப்
புரிய வைத்தேன்.

"அதையாப்பா சொன்னா...
 திருவிழா இல்ல... அதுதான்
எல்லா வீட்டுலேயும் தோசைக்குப் 
போட்டுருப்பாக..."
ஏதோ தெரியாதவனுக்கு விளக்குவதுபோல 
அம்மா விளக்கினார்.

"ம்... ஊரில் ஒரு வீடு தவறாமல் ஒரே நேரத்தில்
ஆட்டுக்கல்லில் மாவு ஆட்டினால்...இடி முழக்கம்
கேட்காமல்... வேறு என்ன கேட்கும் ...
வாங்க ஊரு முழுக்க ஒரு சுற்று சுற்றி
இன்னொருமுறை இடிமுழக்கத்தைக் கேட்டு
வருவோம்" அம்மாவின் கையைப்
பிடித்து இழுத்தான் தம்பி.

"அட விடுப்பா...விளையாட்டுக் காட்டாத....
உனக்கு எங்க பொழப்பு
சிரிப்பா இருக்குது...திருவிழாவுக்கு 
திருவிழா தானே தோசை இட்லி பார்க்க
முடியும். அதுதான் ஒருபக்காவுக்கு கூட
ஒரு பக்கா போட்டு வயிறார தின்போம்
என்று எல்லா வீட்டிலும் போட்டு ஆட்டுவாக...
இதுக்குப் போயி கிண்டலா..."
என்றார் அம்மா.

"கோவிச்சுக்காதுங்கம்மா...சும்மா
விளையாட்டுக்குத்தான் சொன்னேன்" 
அம்மாவையும் என்னையும் 
சமாதானப்படுத்த முயன்றான் தம்பி.
 
" நீ கொஞ்சம் ஆட்டிப் பாரு அப்போ தெரியும்
 இந்த இடிமுழக்கம் எப்படி வருதுன்னு..."
ஆண்களெல்லாம் சும்மா அலைகிறார்களே
என்ற கோபத்தில் சுருக்கென்று கேட்டு வைத்தேன்.

"அதெல்லாம் பெண்கள் டிபார்ட்மென்ட்.
நமக்கெல்லாம் ஒத்துவராது. முழங்குங்க...
நல்லா முழங்குங்க...
அப்போதான்  திருவிழா மாதிரி இருக்கும்"
என்றபடி அங்கிருந்து நகர்ந்தான் தம்பி.

எனக்கு வந்த கோபத்தில் ஆட்டுக்கல்லை
வேகமாக ஆட்ட ...இடிமுழக்கம் மேலும் அதிகமாகி
வீடு முழுக்க எதிரொலித்துக் கொண்டிருந்தது.

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்தது....
 


 
Comments

  1. நன்றாக ஞாபகம் வந்தது உங்களுக்கு.
    இப்போதுள்ள நிலைமையையும் தெரிந்துகொள்ளுங்கள். கொரோனா காரணமாக ஆறு மாதம் கழித்தே மகள் வீட்டிற்கு போக முடிந்தது. அங்கே போய் பார்த்தால் ௹ ஐயாயிரம் சொச்சம் கொடுத்து வாங்கிக் கொடுத்த வெட் கிரைண்டர் பங்காரில் கிடக்கிறது. ஏதோ சிறு கோளாறாம் பங்காருக்குப் போய்விட்டது. நாமெல்லாம் கிழிந்த துணியையோ, கிழிந்த செறுப்பையோ தைத்து போட்டுக்கொண்டோம். இப்போதுள்ளவர்களுக்கு எதையும் ரிப்பேர் செய்யும் பழக்கம் கிடையாது.
    மிக்ஸியில் மாவு அறைத்துக்கொள்கிறார்களாமாம். கொஞ்ச நாளில் மிக்ஸி எங்கே போய் கிடக்கும் என்பதை ஊகிக்க வேண்டுமா என்ன?

    ReplyDelete
  2. அந்தநாள் ஞாபகத்தை திரைப்படமாய் கண்களின் திரைக்கு வரவழைத்தப் பதிவு மிகச் சிறப்பு.

    ReplyDelete

Post a Comment

Popular Posts