தோன்றின் புகழொடு தோன்றுக....

   தோன்றின் புகழொடு தோன்றுக...


"


 


"தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று "
                                   குறள் 236

                                  
தோன்றின் _ பிறர் அறிய தோன்றும்போது,
புகழொடு _ புகழ் நோக்கோடு
தோன்றுக  _தோன்றுவீராக
அஃதிலார் _ அந்த நோக்கம் இல்லாதவர்
தோன்றலின் _ தோன்றுதலின்
தோன்றாமை _  தோன்றுதல் இல்லாதிருத்தல்
நன்று _ நன்மையுடையது

பிறர் அறியும்படி ஒரு செயலில் ஈடுபட்டால்
புகழ் மிக்கவர்களாக மாற வேண்டும்.
அப்படி புகழ் நோக்கு இல்லாதவர் 

வருவதிலும் வராமல் போவதே நன்று.

விளக்கம் :

ஒரு செயலில் ஈடுபட வேண்டும் என்று
விரும்பினால் புகழ் பெற்றே ஆக வேண்டும்
என்ற உயர்ந்த பண்பு கொண்டு செயலில்
இறங்க வேண்டும். அப்புகழ் நோக்கு இல்லாதவர்
அச்செயலைச் செய்வதைவிட செய்யாமல்
இருப்பதே நன்று.

கலை , இலக்கியம் , தொழில் நுட்பம், கட்டடக்கலை
விவசாயம் என்று எந்தத் தொழிலாக
இருந்தாலும் பரவாயில்லை.
நம் துறை சார்ந்த பணியில்  முழு ஈடுபாட்டோடு
இறங்கி வேலை செய்ய வேண்டும்.
அந்தத்துறை... இந்தத்துறை என்று
இல்லாமல் எந்தத் துறை சார்ந்த பணியில்
ஈடுபட்டாலும் பேர் சொல்லும்படி
தொழிலில் ஈடுபட வேண்டும்.

எல்லாத் துறை பணிகளும்
உலக இயக்கத்திற்கு ஏதோ ஒருவிதத்தில்
உதவிக்கொண்டுதான் இருக்கும்.
நமது துறையில் புகழ்பெற வேண்டும்
என்ற முனைப்போடு களத்தில் இறங்கி
செயல்பட்டால் அது தனிமனித வளர்ச்சிக்கு
மட்டுமல்ல  சமுதாயத்தையும் நல்லமுறையில்
முன்னெடுத்துச் செல்ல உதவும்.

இசைபட வாழும் இலக்கு எப்போதும்
நம் கண்முன் இருந்து கொண்டே இருக்க
வேண்டும்.

அப்படிப்பட்ட இலக்கோடு செயலில் ஈடுபடாமல்
ஏனோதானோ என்று ஒரு செயலைச்
செய்பவர்கள் அந்தச் செயலைச்
செய்ய முற்படுவதைவிட வேண்டாம்
என்று ஒதுங்கி இருத்தல் நலம் .

பிறக்கும்போதே புகழோடுபிறக்க வேண்டும்.
அப்படி இல்லையானால் பிறத்தலினும்
பிறவாமை நன்று என்று பிழைபட பொருள்
கொள்ளுதல் கூடாது.
யாரும் பிறக்கும்போதே புகழோடு பிறந்துவிட
முடியாது.
ஆதலால் அப்படி பொருள் கொள்ளுதல் தவறு.

இக்குறளில் உள்ள தோன்றுதல் என்பது
ஏதாவது ஒரு செயலில் நாலுபேர் அறிய
தோன்றிவிடுதல் என்ற பொருளில்
சொல்லப்பட்டுள்ளது.

புகழ் வேண்டும் என்ற வெற்றி இலக்கோடு
தோன்றுக என்பதுதான் பொருளாக
இருக்கமுடியும்.
தோன்றுதல் என்பது ஒரு செயல்
செய்ய வேண்டும் என்ற முயற்சியில்
ஈடுபடுதல் என்பதுதான் இந்த இடத்தில்
சரியான பொருளாக இருக்க முடியும்

பிறப்பு நம் கையில் இல்லை.
செயல் நம் கையில்தான் உள்ளது.
நற்செயல்களை நல்ல முறையில் செய்து
புகழ் ஈட்டுக.
செய்யும் தொழிலை முழு ஈடுபாட்டோடும்
செய்து புகழ் பெறுக என்கிறது குறள்.

English couplet :

If man you walk the stage, appear adorned with Glory's grace;
Save glorious you can shine ,'twere better hide your face.

Explanation :

If you are born( in this world ) be born with qualities
conductive to fame.From those who are  destitute of
them it will be better not to be born.

Transliteration :

"Thondrin pukazhotu thondruka aqdhilaar
thondralin thondraamai Nandru "

    

Comments

Popular Posts