செய்வன திருந்தச் செய்

       செய்வன திருந்தச் செய்


ஒரு காரியத்தைச் செய்ய வேண்டும்
என்று முடிவு பண்ணியாயிற்று என்றால் அதனை 
சரியாக செய்து முடித்துவிட வேண்டும்.
இங்கத்தொட்டேன் அங்க தொட்டேன் என்று 
அரைகுறையாகச் செய்யக் கூடாது.
அப்படி ஒரு செயலில்  உங்களால் 
முழுமையாக ஈடுபட முடியாதா..
பரவாயில்லை. ...
தொடங்காமலேயே விட்டுவிடுங்கள்.

அவசரப்படுவதாலோ பதறுவதாலோ 
நமக்கு வெற்றி கிட்டப் போவதில்லை.

"எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு "
 என்றார் வள்ளுவர்.
 
 தொடங்கும் முன் அதைப் பற்றிய 
 ஆராய்ச்சி தேவை. 
 தொடங்கிய பின்னர் அதை எப்படி நல்லமுறையில்
 முடிப்பது என்பதில்தான் முழு கவனமும் இருக்க
 வேண்டும்.
 
 வாழ்வில் நல்ல வகையில் முன்னேற வேண்டும்
 என்ற எண்ணம் உள்ளவர்கள் ஒருபோதும்
செயலைத் தொடங்கும்போது இருந்த ஆர்வத்தைக்
குறைத்துக் கொள்ள மாட்டார்கள்.
தொடர்ந்து அதே ஆர்வத்தோடு 
செயல்படும்போதுதான்
நாம் தொடங்கிய செயல் நல்லமுறையில் 
முடிவு பெறும்.

ஒரு ஊரில் அண்ணன் தம்பி இருவர் 
மட்பாண்டம் வனையும் தொழிலைச் செய்து
வந்தனர்.
அண்ணன்  பானை வனையும்போது அதிக
கரிசனம் எடுத்துக் கொள்வான்.
அதனால் அவன் வனைந்தப் பானைக்கு 
சந்தையில் அதிக மவுசு உண்டு.

தம்பிக்கு எதிலும் பொறுமை கிடையாது.
அண்ணன் ஒருநாளைக்கு நான்கு
பானைகள் செய்தால் தான் எட்டு
பானைகள் செய்ய வேண்டும் என்று
நினைப்பான். அதனால் அவனுடைய 
பானைகளில் ஒரு நேர்த்தி இருக்காது.

ஒரே சந்தைக்குத்தான் இருவரும் பானைகளை
விற்பனைக்குக் கொண்டு வருவர்.

ஆனால் அவனுடையப் பானையை யாரும்
அவ்வளவாக விரும்பி வாங்குவதில்லை.

அண்ணனிடம் பானை வாங்க கூட்டம்
அலை மோதும்.
தம்பியிடம் ஓரிருபேர் வருவதோடு சரி.
இது தம்பிக்கு அதிக மன வருத்தத்தைத்
தந்தது.

நானும்தான் பானை வைத்திருக்கிறேன்...
ஐயா..வாங்க அம்மா வாங்க ...என்று 
அழைத்துப் பார்த்தான்.
திரும்பிப் பார்ப்ப்பவர்கள் எல்லாம் உதட்டைப்
பிதுக்கிவிட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டனர்.

பத்து சதவீதம் தள்ளுபடி என்று கூவிப் 
பார்த்தான். ம்...கூம்...யாரும் திரும்புவதாக
இல்லை.
அப்போதுதான் அண்ணன் விற்கும்
பானையில் என்ன இருக்கிறது என்பதை 
உற்றுப் பார்த்தான்.
ஆ...என் பானையைவிட ஏதோ ஒரு 
ஈர்ப்பு சக்தி அதிகமாகத் தெரிகிறதே...
என்னவாக இருக்கும்...

பானை வடிவமைப்பில் ஒரு நேர்த்தித்
தெரிந்தது. தன்னுடைய பானையை
ஒரு பானையாக மட்டுமே பார்க்க
முடிந்தது. ஆனால் அவனுடைய 
பானையானது பானை என்பதையும் தாண்டி  அழகூட்டப்பட்டிருந்ததால்
மெருகு கூடியிருந்தது.

அப்போதுதான் ஒரு உண்மை
புலப்பட ஆரம்பித்தது..
பைனல் டச்சிங் என்று சொல்லுவோமே அந்த
இறுதி வடிவமைப்பு கனக்கச்சிதமாக 
இருக்க வேண்டும்.
அப்போதுதான் எந்த ஒரு செயலும்
முழுமை பெற்றதாக இருக்கும்.

அதைத்தான் செய்வன திருந்தச் செய்
என்று பெரியவர்கள் சொல்கிறார்களோ...

இனிமேல் நானும் அவனைப் போன்று 
திருத்தமுற செவ்வனே வனைவேன் 
என்று முடிவு எடுத்துக் கொண்டான்.

எதுவுமே திருத்தமுறசெய்யப்படும்போதுதான்
மற்றவர்கள் கவனத்தை ஈர்க்கும்.
தாஜ்மகாலின்நேர்த்திதான் அனைவரையும்
திரும்பிப் பார்க்க வைக்கிறது.
நேர்த்தியான இடங்கள் அனைவரையும்
திரும்பிப் பார்க்க வைக்கும். அசுத்தம்
முகம் சுளிக்க வைக்கும்.

திருத்தமுற எழுதப்பட்டிருக்கும் விடைத்தாள்கள்
அதிக மதிப்பெண்களைப் பெற்றுத்தரும்.

திருத்தமுற சரியான உச்சரிப்போடு
பேசப்படும் பேச்சுக்கு அதிக மவுசு உண்டு.

எல்லாத் துறைகளுக்கும் இது பொருந்தும்.
அதனால்தான் காலத்தால் அழியாத
ஔவையின் அமுத மொழிகள்
காலம் கடந்தும் நம்மோடு பயணித்துக்
கொண்டிருக்கிறது.

திருத்தமுற என்பது ஒழுங்கு, நேர்த்தி, அழகு
என்ற பல கண்ணோட்டங்களில் பார்க்கப்படும்.

இவை யாவும் செய்யும் செயலில் இருந்தால்
மட்டுமே அனைவராலும் திரும்பிப்
பார்க்கப்படுவோம்.

பலரின் கவனத்தை ஈர்க்கும் சக்தி
உங்கள் செயலுக்கு இருக்குமானால்
கண்டிப்பாக நாளைய வெற்றியாளர்
நீங்களாகத்தான் இருக்க முடியும்.

"செய்வன திருந்தச் செய்
 உயர்வு  வருவது மெய்"
 
 
 

Comments

Popular Posts